search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ukkadam bridge"

    உக்கடம் மேம்பாலம் இணைப்பு சாலை பணிக்காக வீடுகளை காலி செய்ய கூடாது என்று கலெக்டரிடம் சாரமேடு மக்கள் மனு அளித்தனர்.

    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    அவரிடம் கோவை சாரமேடு குடியிருப்போர் நல சங்கத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் வந்து மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது-

    100 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் சாரமேடு பகுதியில் வசித்து வருகிறோம். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் விவசாய, கூலித் தொழிலாளர்கள் ஆவார்கள்.

    கடந்த 1970-ம் ஆண்டு எங்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்கியது. ஆனால் தற்போது உக்கடம் மேம்பால இணைப்பு சாலைக்காக எங்கள் பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    முன் அறிவிப்பின்றி இவ்வாறு காலி செய்ய சொல்வது எங்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி உள்ளது. நாங்கள் வீட்டு வரி ரசீது, பட்டா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் வைத்து இருக்கிறோம். எனவே எங்கள் இடம் பாதிக்காத வகையில் மாற்றுப் பாதையில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும். இணைப்பு சாலை பணிக்காக எங்களை காலி செய்யுமாறு கூற கூடாது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    கோவை சோமனூர் பகுதியை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    பின்னர் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி நிரூபர்களிடம் கூறியதாவது-

    சோமனூர் அருகே நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.சோமனூர் பகுதியில் கள்ள மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதனை ஒழிக்க அரசே மதுபான கடைகளை திறக்க வேண்டும். சோமனூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். மின் மயான பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வை சேர்ந்த மகாலிங்கம், இந்திய கம்யூனிஸ்டு பொன்னுசாமி, பாரதிய ஜனதா பிரகாஷ், தே.மு.தி.க. ஆனந்தன், மதன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். #Tamilnews

    ×