search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Umaria"

    • நீதிபதிக்கு ஆதரவாக தாசில்தார் வினோத் குமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
    • காவல் ஆய்வாளர் ராஜேஷ் சந்திர மிஸ்ரா 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்

    மத்திய பிரதேச மாநில உமரியா மாவட்டத்தில், கைரி பகுதியில் இருந்து பரவ்லா பகுதிக்கு சிவம் யாதவ் (Shivam Yadav) மற்றும் பிரகாஷ் தாஹியா (Prakash Dahiya) எனும் இருவர் தங்களது காரில் பயணித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் கார், முன்னால் சென்று கொண்டிருந்த காரை முந்தி சென்றது. அந்த காரில் பந்தவ்கர்ஹ் (Bandhavgarh) பகுதியின் துணை மாஜிஸ்திரேட் (SDM) அமித் சிங் பயணித்தார். காரை டிரைவர் நரேந்திர தாஸ் பனிகா ஓட்டினார்.

    தங்கள் காரை முந்தி சென்றதால் நீதிபதி அமித் சிங் ஆத்திரமடைந்ததாகவும், முன்னால் சென்ற சிவம் யாதவின் காரை வேகமாக சென்று வழிமறித்து அவர்களை கீழே இறங்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    அப்போது எதிர் திசையில் மற்றொரு காரில் வந்த வினோத் குமார் எனும் தாசில்தாரும் நீதிபதிக்கு ஆதரவாக மோதலில் ஈடுபட்டுள்ளார்.

    தகராறு முற்றியதில் யாதவ் மற்றும் பிரகாஷ் இருவரையும் நீதிபதியின் உத்தரவின் பேரில் நரேந்திர தாசும், தாசில்தாரின் டிரைவரும் கம்பால் இடுப்பிற்கு கீழே சரமாரியாக தாக்கினர்.

    இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தகவல் அளித்ததையடுத்து, கொத்வாலி பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தாக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முழு விசாரணையை அடுத்து, நீதிபதி, தாசில்தார், 2 டிரைவர்கள் உட்பட 4 பேர் மீது காவல் ஆய்வாளர் ராஜேஷ் சந்திர மிஸ்ரா, வழக்கு பதிவு செய்தார்.

    மாவட்ட ஆட்சியர் புத்தேஷ் குமார் வைத்யா, நீதிபதியை பணி இடைநீக்கம் செய்தார்.

    அச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மொபைல் போனில் அதை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    சுமார் 10 நொடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சி இணையதளத்தில் பரவி வருகிறது.

    மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இச்சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஆனால், நீதிபதி அமித் சிங் இக்குற்றச்சாட்டை மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×