search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "University Authorities"

    நிர்மலாதேவியுடன் பல்கலைக்கழக அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருந்தது. அவர்களை கைது செய்யாமல், தன் கணவரை முக்கிய குற்றவாளியாக காட்டுவது ஏன்? என பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா பேட்டி அளித்தார். #Nirmaladevi #DevangarCollege
    மதுரை:

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் பேராசிரியர் முருகன் மனைவி சுஜா மதுரையில் நிருபர்களிடம் பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் எனது கணவர் முருகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனது கணவருக்காகத்தான் மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசியதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பொய் வாக்குமூலம் தயாரித்துள்ளனர்.

    நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக புத்தாக்க பயிற்சிக்கு வந்தபோது அவர் தங்குவதற்காக அறை ஒதுக்குவது பற்றி கேட்டுள்ளார். அப்போது கூட கருப்பசாமியிடம் சென்று உங்கள் கோரிக்கையை தெரிவிக்கலாம் என்று என் கணவர் கூறியிருக்கிறார்.

    பிரச்சினை பெரிதான போது தனக்கு உதவி செய்யுமாறு நிர்மலாதேவி என் கணவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டார். ஆனால் “யாருக்காக மாணவிகளிடம் நீங்கள் பேரம் பேசினீர்களோ. அவர்களிடம் போய் உதவி கேளுங்கள். என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று என் கணவர் கூறிவிட்டார்.

    சுஜா

    என் கணவர் எப்போதுமே நிர்மலாதேவிக்கு போன் செய்து பேசியதே கிடையாது. அப்படி இருக்கும்போது அவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக என் கணவர் மீது போலீசார் கூறியுள்ளது தவறான குற்றச்சாட்டு. நிர்மலாதேவி என் கணவர் பெயரை போலீசில் சொல்லவே இல்லை. பிறகு அவரை ஏன் இதில் தொடர்புபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை?

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு நிர்மலாதேவி வந்தபோது அவரை வரவேற்கவும், வழி அனுப்பவும் பல்கலைக்கழகத்தின் முக்கிய அதிகாரியின் கார் பயன்படுத்தப்பட்டது. நிர்மலாதேவியுடன் பல்கலைக்கழக அதிகாரிகள் மேலும் சிலருக்கு தொடர்பு இருந்தது. அவர்களையெல்லாம் இந்த வழக்கில் போலீசார் ஏன் கைது செய்யவில்லை?. இந்த வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லாத என் கணவரை முக்கிய குற்றவாளியாக காட்டுவது ஏன்?

    கொலை, கொள்ளை வழக்குகளில் கைதானவர்களுக்கு கூட சில நாட்களிலேயே ஜாமீன் வழங்கப்படுகிறது. ஆனால் எந்த குற்றமும் செய்யாத என் கணவர் கைது செய்யப்பட்டு 7 மாதங்களாகியும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இதற்கு பின்புலமாக சில பிரபலங்கள் இருக்கிறார்கள். இந்த வழக்கில் 3 பேரை மட்டும் சிக்க வைத்துவிட்டு, மற்றவர்களை முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வைத்துவிட்டனர்.

    நிர்மலாதேவியையும், எனது கணவரையும் மிரட்டி வாக்குமூல பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இதில் முழுக்க முழுக்க உள்நோக்கம் இருக்கிறது. எனவே என் கணவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்பதை நிரூபிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege
    ×