search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vallur thermal power plant"

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி வல்லூர் அனல்மின் நிலையம் இன்று மூடப்பட்டது. இதனால் 1500 மெகாவாட் மின்உற்பத்தி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. #VallurThermalPowerPlant
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வல்லூரில் அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 சதவீதம் தமிழகத்துக்கும், 30 சதவீதம் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

    அனல்மின் சாம்பல் கழிவு எண்ணூர் சதுப்புநில பகுதிகளில் கொட்டப்பட்டு வந்தன. இதனால் சுற்றுச்சுழல் மாசு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாம்பல் கழிவு கொட்டப்படும் இடத்தை நடிகர் கமல்ஹாசன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பார்வையிட்டு சென்று இருந்தனர்.

    இந்த நிலையில் சதுப்பு நில பகுதியில் அனல்மின் நிலைய கழிவுகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரவணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனை விசாரித்த நீதிபதி மத்திய அரசின் விதிமுறையை மீறி சதுப்பு நில பகுதியில் சாம்பலை கொட்ட அனல்மின்நிலையம் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே வல்லூர் அனல்மின்நிலையம் செயல்படுவதற்கான மத்திய அரசின் அனுமதியும் கடந்த ஆண்டு மார்ச் 18-ந் தேதியுடன் முடிவடைந்து இருந்தது. இதனை புதுப்பிக்க கோரும் மனுவும் நிலுவையில் உள்ளது.

    இதனால் வல்லூர் அனல்மின் நிலையம் செயல்படாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 3 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு அனல்மின் நிலையம் இன்று மூடப்பட்டது. இதனால் 1500 மெகாவாட் மின்உற்பத்தி முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அனல்மின் நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சதுப்பு நில பகுதியில் சாம்பல் கழிவை கொட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம். விரைவில் அனல்மின் நிலையம் செயல்படும்’’ என்றார். #VallurThermalPowerPlant

    ×