search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaniyambadi Railway Station"

    நடுவழியில் ரெயில் ரத்து செய்யப்பட்டதால் வாணியம்பாடி ரெயில் நிலையத்தை பயணிகள் முற்றுகையிட்டனர்.
    ஜோலார்பேட்டை:

    ஆந்திர மாநிலம் சீராலா ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று மதியம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    சிறிதுநேரம் கழித்து அந்த ரெயில் ரத்து செய்யப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்ததாக வாணியம்பாடி ரெயில் நிலைய அதிகாரி தெரிவித்தார். ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். மேலும் திடீரென ரத்து செய்தால், நாங்கள் எப்படி செல்வது என்று பயணிகள் வாணியம்பாடி ரெயில் நிலையத்தையும், ரெயில் நிலைய அதிகாரியையும் முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பயணிகளிடம் கேரள மாநிலத்தில் அதிகளவு மழை பெய்ததால் ரெயில் திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு பயணிகள் கலைந்து சென்றனர்.

    ரெயிலில் இருந்த சுமார் 1000 பயணிகளை சென்னை - மங்களூரு நோக்கி செல்லும் ரெயிலில் ஏற்றிவிட்டனர். அதன்பிறகு ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு, ரெயில் மீண்டும் சென்னை நோக்கி திரும்பி சென்றது.

    மீதமுள்ள 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை - கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும், சென்னை - திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாலக்காடு வரை பாதுகாப்புடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர்.

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது. #tamilnews
    ×