search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varuna Yagam"

    கோவில்களில் மழைக்காக யாகம் நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, மத நம்பிக்கை தொடர்பான விஷயத்தில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னை மற்றும் பல மாவட்டங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து தமிழக அறநிலையத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த கடந்த மாதம் 26-ந் தேதி உத்தரவிட்டு, சுற்றறிக்கை வெளியிட்டது.

    இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய கோரியும், கோவில்களில் மழைக்காக நடந்து வரும் யாகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பத்திரிகையாளர் அன்பழகன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘இதுபோன்ற யாகம் நடத்த அரசே பணம் ஒதுக்குவது சட்டவிரோதமானது. அதுவும், யாகம் நடத்த வேண்டும் என்று இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க இந்துசமய அறநிலையத்துறைக்கு அதிகாரமும் கிடையாது’ என்று வாதிட்டார்.

    இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், ‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருஞானசம்பந்தரின் பஞ்சாங்க நூலில் மழை வேண்டி யாகம் நடத்தலாம் என்று குறிப்புகள் உள்ளன’ என்று வாதிட்டார்.

    இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், ‘தமிழக ஜோதிடர்களை போல் அடுத்த 5 மாதங்களில் ஏற்படும் கிரகணம் போன்ற வானவியல் நிகழ்வுகளை மேற்கத்திய ஜோதிடர்களால் கணிக்க முடியுமா?’ என கேள்வி எழுப்பினர். பின்னர், ‘யாகம் மக்களின் நன்மைக்காகவே நடத்தப்படுகிறது. இதுபோன்ற மத நம்பிக்கை தொடர்பான விஷயத்தில் தலையிட முடியாது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    கோவில்களில் யாகம் நடத்திய பிறகு எந்தெந்த ஊர்களில் எவ்வளவு மழை பெய்தது என்று அறநிலையத்துறையிடம் விளக்கம் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. #VarunaYagam
    சென்னை:

    தமிழகம் முழுவதும் வான்மழை பொய்த்து மக்கள் தண்ணீருக்காக திண்டாடுகிறார்கள். மனிதன் தீர்க்க முடியாத நெருக்கடிக்குள் சிக்கும் போது கடவுளே காப்பாற்று என்று முறையிடுவார்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் இந்த உணர்வு இருக்கும்.

    அதன்படி இந்து கோவில்களில் மழையை தருவிக்கும் பதிகங்கள், ராகங்கள், மூலம் பிரார்த்தனைகள், யாகங்கள் நடத்தும்படி அறநிலையத்துறை உத்தரவிட்டது. கோவில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த துறையே இதற்கான ஏற்பாடுகளை செய்தது.

    இந்த உத்தரவுக்கு எதிர்ப்பும் கிளம்பியது. அரசாங்கம் மதசார்பற்றது. அது எப்படி இவ்வாறு நடத்துவதை ஊக்குவிக்கலாம் என்று விமர்சித்தனர்.



    இதற்கு பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. பக்தர்களின் நம்பிக்கை, வழிபாட்டு முறையை அரசால் செயல்படுத்த முடியாவிட்டால் அறநிலையத்துறை கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கருப்பணசாமி என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அறநிலையத்துறைக்கு ஒரு மனு அனுப்பி இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:-

    யாகம் செய்தால் மழை வரும் என்ற விதி மற்றும் அரசாணையின் நகல்களை அளிக்க வேண்டும். மேலும் கோவில்களில் யாகம் நடத்திய பிறகு எந்தெந்த ஊர்களில் எவ்வளவு மழை பெய்தது என்ற விவரங்கள் தேவை.

    மழை வேண்டி கோவில்களில் யாகம் நடத்த எவ்வளவு செலவானது? எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்த இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார் என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது.

    யாக பலனே மழையை தருவிப்பதாக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். #VarunaYagam
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருண யாகம் முடிந்ததும் 2½ மணி நேரம் பெய்த பலத்த மழையால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். #VarunaYagam
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை பிரம்ம தீர்த்த குளத்தில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வருண யாகம் செய்தனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    மேலும் இசை கலைஞர்களால் நாதஸ்வரம், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் உள்ளிட்ட இசை கருவிகளால் மழை வேண்டி இசை ராகங்கள் இசைக்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து யாக கலசங்களை சிவாச்சாரியார்கள் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் இருந்து சுமந்து வந்து பிரம்ம தீர்த்தத்தில் பூஜைகள் செய்து கலசநீர் பிரம்ம தீர்த்தத்தில் தெளிக்கப்பட்டன.

    திருவண்ணாமலையில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை வலுத்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. சிறிது நேரம் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    இரவு 9.30 மணி வரை மழை நீடித்தது. இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் முழுவதும் மழை தண்ணீர் தேங்கியது.

    கிரிவலப்பாதையில் பல இடங்களில் மழை நீர் குட்டை போல் தேங்கியுள்ளது. திருவண்ணாமலையில் பெய்த மழையின் காரணமாக பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    இதேபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.



    சேத்துப்பட்டு, தேவிகாபுரம், தேசூர், சி.ம.புதூர் குண்ணகம்பூண்டி, வெடால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் கிராமம் பூமாசெட்டிக்குளம் பகுதி செட்டிக்குளம் சாலையில் திடீரென மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்துபட்டு தாசில்தார் சுதாகர் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று மரக்கிளையை வெட்டி அகற்றினர்.

    தேவிகாபுரம் ஒட்டன் குடிசை பகுதியில் 3 குடிசை வீடு பகுதியின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. தகவல் அறிந்ததும் அங்கு சென்று 3 குடும்பத்தை சேர்ந்த 9 பேரை மீட்டு தேவிகாபுரம் அரசு ஆண்கள் பள்ளியில் தங்க வைத்தார். அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

    கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை 5.45 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 8 மணி வரை நீடித்தது. இதனால் குண்டும் குழியுமான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருவண்ணாமலை-40.1

    கீழ்பென்னாத்தூர்-46.8

    சேத்துப்பட்டு-15.4

    போளூர்-5.8

    வந்தவாசி-17.4

    சாத்தனூர் அணை-2. #VarunaYagam

    மழை வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் வருண யாகம் நடந்தது.
    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் வெயில் தாக்கத்தை குறைக்கவும், மழை வேண்டியும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் வருண யாகம் போன்ற பூஜைகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் வருண யாகம் நடந்தது.

    மழை வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்தத்தில் வருண யாகம் நடந்தது.

    இதைத் தொடர்ந்து பிரம்ம தீர்த்த குளத்தில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி யாக தண்ணீரை பிரம்ம தீர்த்தத்தில் தெளித்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


    ×