search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vasudhaiva Kudumbakam"

    • கோவிட் பெரும் தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு நாம் வென்றோம்.
    • பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதையே நாம் குறிக்கோளாக கொள்ள வேண்டும்.

    ஜி20 நாடுகளின் 18வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் தற்போது நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய இம்மாநாடு நாளையுடன் முடிவடைகிறது.

    மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மாநாட்டின் மையக்கருத்தான "வசுதைவ குடும்பகம்" எனும் சித்தாந்தத்தின் ஒரு அம்சமாக "ஒரே பூமி" அமர்வில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    இந்த மாநாடு இந்திய மக்களுக்கான மாநாடாகவே மாறியுள்ளது. இது தொடர்பாக 60-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே இந்தியாவின் கொள்கையாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நாம் உலகளவில் எடுத்து செல்ல வேண்டும்.

    வளமான எதிர்காலத்திற்காக ஜி-20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம். பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வை காண வேண்டும். பல வருடங்களாக தீர்வு காணப்படாத நாட்பட்ட சவால்களுக்கு நாம் புதிய வழிமுறைகளில் தீர்வு காண வேண்டும்.

    உலக நாடுகளிடையே பரஸ்பர அவநம்பிக்கை தோன்றியுள்ள சூழ்நிலையை மாற்றி நம்பிக்கையுள்ள நட்பு நாடுகளாக நாம் மாற வேண்டும். கோவிட்-19 பெரும் தொற்றிற்கு பிறகு உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்தும் நம்பிக்கையும் குறைந்திருந்தது. துரதிர்ஷ்டவசமாக, நாடுகளுக்கிடையேயான போர், அந்நிலையை மேலும் நலிவடைய செய்துவிட்டது.

    இருப்பினும், கோவிட்-19 பெரும் தொற்றை எதிர்கொண்டு வெற்றிகரமாக அதனை முறியடித்த நாம் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையையும் வெற்றிகரமாக மாற்ற முடியும். உலக நன்மையையே பொதுவான குறிகோளாக மாற்றி நாம் அனைவரும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும்.

    இன்று ஜி20 மாநாட்டின் தலைமையாக அமர்ந்திருக்கும் இந்தியாவின் சார்பாக நான், உலக நாடுகள் அனைத்தையும் நாடுகளுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதையே குறிக்கோளாக கொள்ளும்படி அழைக்கிறேன்.

    இந்நேரத்தில் மொராக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இக்கட்டான இந்த சமயத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.

    ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர ஜி-20 உறுப்பினராக்க இந்தியா முன் வருகிறது. இந்த முன்மொழிவுக்கு அனைத்து உறுப்பினர்களும் உடன்படுவார்கள் என நான் நம்புகிறேன். உச்சி மாநாட்டில் உலக தலைவர்களின் உற்சாக கரகோசத்துக்கிடையே உங்கள் அனைவரின் ஆதரவுடன் ஆப்பிரிக்க யூனியனை ஜி-20 யில் நிரந்தரமாக சேர அழைக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    ×