search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle horn"

    தக்கலை அருகே பிரசாரத்தின் போது ஹாரன் ஒலித்து இடையூறு செய்ததால் பிரேமலதா ஆவேசமாக ‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’ என்று கூறினார். #premalatha #dmdk

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நேற்று பிரேமலதா பிரசாரம் செய்தார்.

    அவர் தக்கலை அருகே வேர்கிளம்பி சந்திப்பில் திறந்த வேனில் நின்றபடி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு சேகரித்தார். பிரேமலதா தேர்தல் பிரசாரம் செய்த இடம் 4 சாலைகள் சந்திக்கும் பகுதி என்பதால் அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

    நேரம் செல்லச் செல்ல அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்தது. இதனால் 4 சக்கர, இரு சக்கர வாகனங்களில் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். ஒரு மணிநேரத்திற்கு மேல் காத்துக்கிடந்ததால் பொறுமை இழந்த சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் ஹாரனை ஒலிக்கச் செய்தனர்.

    அவர்கள் தொடர்ந்து ஹாரனை ஒலித்தபடி இருந்த தால் பிரேதமலதா பேசுவதற்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அவர் ஆவேசம் அடைந்தார்.

    அதை தனது பேச்சின் மூலம் அவர் வெளிப்படுத்தினார். பிரேமலதா பேசும்போது கூறியதாவது:-

    நான் தேர்தல் பிரசாரம் செய்வதை பார்த்து பயப்படுபவர்கள் இதுபோல ஹாரன் ஒலித்து இடையூறு செய்கிறார்கள். இது எல்லாம் என்ன சவுண்டு? இது கேவலமான செயல். நாங்கள் தேர்தல் பிரசாரம் செய்ய முறைப்படி அனுமதி வாங்கி உள்ளோம். அதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

    நாங்கள் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம். இதை வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள். எங்களிடம் இது எல்லாம் நடக்காது.

    போர் களம் என்றால் நேருக்கு நேர் மோதுபவர்கள் தான் வீரர்கள். போருக்கு பயந்து பின்னால் நின்று கொண்டு ஹாரன் ஒலிப்பவர்கள் கோழைகள். நான் இங்கு 2 மணிநேரம் கூட பேசுவேன். எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன்.

    எதிர்ப்புகளை சந்தித்தே வளர்ந்த கட்சிதான் தே.மு.தி.க. நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம். இந்த ஹாரன் ஒலி எங்களை ஒன்றும் செய்துவிடாது. இங்கு நடப்பதை பார்க்கும்போதே எதிர் அணியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது தெரிகிறது. பொன்.ராதா கிருஷ்ணன் வெற்றியும் உறுதியாகி விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரேமலதா தேர்தல் பிரசாரத்தின் போது அவரை பேசவிடாமல் ஹாரன் ஒலித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பிரசாரத்தை முடித்து சென்றபிறகு அந்த வழியாக போக்குவரத்து வழக்கம் போல நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து பிரேமலதா அஞ்சுகிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள், ‘கேப்டன் எப்படி இருக்கிறார்?‘ என்று கேட்டனர். அதற்கு பிரேமலதா விஜயகாந்த், ‘கேப்டன் சூப்பராக உள்ளார். அவர் வெகு விரைவில் உங்கள் முன் வருவார். 5 நிமிடம் முன் கூட அவருடன் செல்போனில் பேசினேன். அப்போது அடுத்து எங்கு செல்கிறாய் என்று கேட்டார். நான் அஞ்சுகிராமம் என்றதும், அனைவரையும் கேட்டதாக கூறும்படி சொன்னார்’ என்று பதில் அளித்தார். உடனே அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

    ×