search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "velankanni arogya matha"

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்து உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

    பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்றாகும். புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழா பேராலய ஆண்டு திருவிழாவாக ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பேராலய ஆண்டு திருவிழா இன்று(புதன்கிழமை) கொடியேற்றம் நடக்கிறது. இதை முன்னிட்டு மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியுடன் பேராலய முகப்பில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடையும்.

    இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்பு ரோஸ் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்கு தந்தைகள் மற்றும் அருட் சகோதரிகள் கலந்து கொள்கின்றனர்.

    விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், கொங்கனி, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. மேலும் தினமும் மாலையில் தேர்பவனி நடைபெறுகிறது. இந்த தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடையும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.

    விழாவை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வேளாங் கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    ×