search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "velankanni panchayat"

    வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 29-ந்தேதி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் தங்களை ஒரு தனியார் மாத இதழின் நிருபர்கள் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு அதிகம் உள்ளதாகவும் இது குறித்து பத்திரிகையில் செயல் அலுவலர் பெயருடன் செய்தி வெளியிடாமல் இருக்க தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கேட்டு ஊழியர்களிடம் மிரட்டல் விடுத்தனர். இதன்பின் அவர்கள், தாங்கள் மீண்டும் வரும் போது தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறிவிட்டு அலுவலகத்தில் இருந்து வெளியேறினர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 3 பேரும் மீண்டும் வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் தங்களின் பத்திரிகையின் 10-ம் ஆண்டு நிறைவு விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளதால் பணம் தர வேண்டும். அல்லது பேரூராட்சியில் சுத்தம் இல்லை என செயல் அலுவலர் பெயர் மற்றும் படங்களுடன் செய்தி வெளியிடுவோம் என்று மிரட்டினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பேரூராட்சி ஊழியர்கள் உடனே நாகையில் உள்ள சில பத்திரிக்கையாளர்களை தொடர்பு கொண்டு இதுகுறித்து கூறியுள்ளனர். உடனே நாகையில் உள்ள பத்திரிக்கையாளர்கள் சிலர் வேளாங்கண்ணிக்கு சென்று விசாரணை செய்தபோது அவர்கள் போலி நிருபர்கள் என்பது தெரியவந்தது. உடனே இது குறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் தஞ்சை மாவட்டம் பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சரவணன்(வயது39), சென்னை சிட்லபாக்கம் வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் மகன் கோபாலகிருஷ்ணன்(32), சீர்காழி எடமணல் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துராஜா(21 ) என்பதும், இவர்கள் போலி நிருபர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போலி நிருபர்கள் 3 பேர் மற்றும் கார் டிரைவர் பழனிவேல்(45)ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
    ×