search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore VIT. University"

    • கருணாநிதி பார்க்காத வெற்றி, தோல்வி, அவமானம் கிடையாது.
    • கொள்கை தீரம் கொண்டவர் கருணாநிதி.

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக அரங்கத்தில் தமிழியக்கம், வி.ஐ.டி. பல்கலைக்கழகம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது :-

    கருணாநிதி பார்க்காத வெற்றி, தோல்வி, அவமானம் கிடையாது. அவர் வாழ்நாள் மட்டுமின்றி, மறைந்த பிறகும் போராடித்தான் வெற்றியைக் கண்டார். அவரை, இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் எத்தனையோ முன்னோடி திட்டங்களைக் கொண்டுவந்தார். அவசர நிலை காலகட்டத்தில் கூட ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து தனது ஆட்சியை இழந்தவர். அவர் தனது கொள்கைகளை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை."

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழியக்கத்தின் நிறுவனர் தலைவரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசும்போது, "ஒரு சாதாரண மனிதரும் வளர்ந்து தலைவராகவும், சாதனைகளை செய்யவும் முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கருணாநிதி.

    பள்ளிப் படிப்புடன் நின்றுவிட்டாலும் தனது முயற்சியால் தொல்காப்பியத்துக்கு உரை எழுதும் அளவுக்கு தன்னை உயர்த்திக்கொண்டவர்.

    மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. தனது 14 வயதிலேயே அரசியலுக்கு வந்த கருணாநிதி, மிகச்சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, நாடகம், சினிமா வசனகர்த்தாவாகத் திகழ்ந்தார்.

    மத்திய அரசுடன் நல்ல உறவு இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தாலும், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்" என்றார்.


    நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    "இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் உதவியாளர் நித்யாவை அழைத்திருக்க வேண்டும். இன்னொன்று காருணாநிதிக்கு வி.ஐ.டி.யில் சிலை வைக்க வேண்டும்.

    சாதாரண குடும்பத்தில் பிறந்த கருணாநிதி, இன்று அகில இந்திய அளவில் போற்றக்கூடிய தலைவராக வளர்ந்துள்ளார் என்றால் அதற்கு கொள்கை பிடிப்புதான் காரணம்" என்றார்.

    'இங்கிருக்கும் இளைஞர்கள் நிகழ்கால பங்களிப்பு என்ன? எதிர்கால பயன்-என்ன என்று சிந்திக்க வேண்டும். அதற்கு கருணாநிதியை நீங்கள் பின்பற்றலாம். அவர் வயது தாண்டி சாதனை புரிந்தவர்.

    தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பை தனது 16 வயதில் தொடங்கினார். 23-வது வயதில் சினிமாவுக்கு வசனம் எழுத சென்றார்.

    வாழ்வில் இளம் வயதிலேயே தங்களுடைய செயல்பாட்டை தொடங்க வேண்டும். பள்ளிக்கூட படிப்பை தாண்டாதவருக்கு இன்று பல்கலைக்கழகமே விழா எடுக்கிறது. கொள்கை தீரம் கொண்டவர் கருணாநிதி. சாகும் வரை பகுத்தறிவாளராக இருந்தவர்.

    1969-ல் அண்ணாதுரை இறந்த போது அவரது உடலை வாங்க குடும்பத்தினர் வந்தனர். சமய நெறிப்படி அவரை அடக்கம் செய் யப்போவதாக கூறினார்கள். ஆனால், அதற்கு உடன்பட மறுத்து அவர் மீது படுத்து 'அண்ணாதுரை குடும்ப சொத்தல்ல, அரசாங்கத்தின் சொத்து' என்று தடுத்து அவருக்கு இறுதி மரியாதை செய்ய வைத்தவர் கருணாநிதி. அதனால்தான் அண்ணா சமாதி இருக்கிறது. கருணாநிதி இல்லை என்றால் அது இருந்திருக்காது.

    பலர் இன்று கட்சி ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒருவர் வெற்றி பெற தொண்டர்கள், கட்டமைப்பு, பலம், பணம் என்று எதுவும் தேவையில்லை. சரியான எதிரி இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.

    திராவிடம் வெற்றி பெற காரணம் ஆரியம். எம்ஜிஆர் வெற்றி பெறுவதற்கு எதிராக கருணாநிதி இருந்தார். கருணாநிதியால் தான் எம்ஜிஆர் வளர்ந்தார். அவருக்கு நண்பராகவும், எதிரியாகவும் கருணாநிதி இருந்தார்.

    சிலருக்கு எதிரி தானாக வருவார்கள், கருணாநிதி எதிரிகளை உருவாக்கினார். அதில் வெற்றியும் பெற்றார். இக்கால இளைஞர்கள் அவரிடம் எதிரியை எப்படி கையாள்வது, நீண்டநாள் வாழ்வது, துணிச்சலுடன் வாழ்வது, உழைப்பது போன்ற பாடங்களை கற்க வேண்டும்' என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய வாழ்த்துக் கடிதம் வாசிக்கப்பட்டது. முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி உடன் இருந்த அலுவலர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    ×