search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veneration Items"

    • ஆயுதபூஜையும், நாளை மறுநாள் விஜய தசமிபண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
    • சேலம் செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட் மற்றும் கடைவீதியில் உள்ள பொரி கடைகளில் இன்று பொரி, கடலை விற்பனை மும்முரமாக நடந்தது.

    சேலம்:

    ஆயுதபூஜையை முன்னிட்டு வீடுகளில் மட்டு மின்றி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் தொழிற்சாலை, லேத் பட்டறைகள், பஸ் கம்பெனி, கல்வி நிறுவ னங்களில் சுண்டல், சர்க்கரை பொங்கல், பொரி, அவல் உள்ளிட்டவை படையலிட்டு வழிபடுவதை பொதுமக்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் நாளை ஆயுதபூஜையும், நாளை மறுநாள் விஜய தசமிபண்டிகையும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையை கொண்டாடும் வகையில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளில் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் ஈடுபட்டனர்.

    சேலம் செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட் மற்றும் கடைவீதியில் உள்ள பொரி கடைகளில் இன்று பொரி, கடலை விற்பனை மும்முரமாக நடந்தது. செவ்வாய்பேட்டையில் உள்ள பொரி கடைகளில் தொழிற்சாலைகளில் சாமி கும்பிடுவதற்காக மொத்தமாக பொரிகளை சிலர் வாங்கி சென்றனர். அதேபோல், வீடுகளுக்கு தேவையான பொரிகளையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

    செவ்வாய்பேட்டை மற்றும் கடைவீதியில் கூட்டம் அலைமோதியது. அதாவது, ஒரு பக்கா பொரி ரூ.15-ம், 7½ கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.550-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிலோ பொட்டுக்கடலை ரூ.100முதல் ரூ.120 வரைக்கும், ஒரு கிலோ நிலக்கடலை ரூ.150-ம், ஒரு கிலோ அவுல் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.100 முதல் ரூ.120-க்கும், ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.40 முதல் 80 வரைக்கும், ஒரு கிலோ மாதுளை ரூ.180முதல் ரூ.250-க்கும், ஒரு கிலோ கொய்யாப்பழம் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    சேலம் குரங்குச்சாவடி, அஸ்தம்பட்டி, செரிரோடு, கடைவீதி பகுதியிலும், சாலை யோரத்தில் தற்காலிகமாக பொரி, பூசணி உள்ளிட்ட கடைகளை சிலர் வைத்து விற்பனை செய்தனர். பூசணிக்காய்,வாழை குலை, பழங்கள், பூக்கள் விற்பனை அமோகமாக இருந்தது. பொதுமக்கள் சாம்பல் பூசணிக்காய்களை வாங்கி சென்றனர். அதேபோல் மாஇலை மற்றும் வாழைக்கன்றுகள் விற்பனையும் மும்முரமாக நடந்தது. இதுதவிர, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, குங்குமம், விபூதி, ஊதுப்பத்தி, கற்பூரம் உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் கடைகளில் இருந்து வாங்கி சென்றனர்.

    பூக்கள் விலை உயர்வு

    ஆயுதபூஜையை முன்னிட்டு சேலம் வ.உ.சி. மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட கூடுதலாக பூக்கள் கொண்டு வரப்பட்டது. கடந்த வாரம் பூக்களின் விலையை ஒப்பிடுகையில் நேற்று சற்று விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1,000-க்கு விற்கப்பட்டது. இதேபோல், ஒரு கிலோ சன்னமல்லி ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், காக்காட்டான் பூ ரூ.500-க்கும், அரளி ரூ.300-க்கும், சாமந்தி ரூ.250 முதல் 300 வரை, சம்பங்கி ரூ.300-க்கும், பட்டன் ரோஸ் ரூ.100-க்கும், கோழிக்கொண்டை பூ ரூ.50 முதல் ரூ. 80 வரை, ஜாதிமல்லி பூ கிலோ ரூ.320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

    ×