search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikravandi Byelection"

    • உங்கள் மண்ணின் மைந்தர் அவர். மக்களோடு மக்களாக, மக்கள் பணி யாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா.
    • கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது!

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தனது பேச்சை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் பேசி இருப்பதாவது:-

    விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

    வரும் ஜூலை 10-ந் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. ஆற்றல் மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்துக்கு, உங்கள் உள்ளம் கவர்ந்த உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் மண்ணின் மைந்தர் அவர். மக்களோடு மக்களாக, மக்கள் பணி யாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா.

    1986-ம் ஆண்டு முதல், அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத-நிறம் மாறாத கலைஞரின் உடன் பிறப்புகளில் அவரும் ஒருவர். தலைவர் கலைஞரின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், "தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கும் ரத்த நாளங்களில் ஒருவர்".

    * விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக-

    * ஒன்றுபட்ட மாவட்டத் தலைமைப் பொதுக்குழு உறுப்பினராக-

    * அன்னியூர் கூட்டுறவு விவசாய வங்கித் தலைவராக-

    * மாநில விவசாய அணி துணைச் செயலாளராக என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், தற்போது விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்.

    இப்படிப்பட்ட அன்னியூர் சிவாவை, விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி வையுங்கள் என்று அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன். அன்போடு மட்டுமல்ல; உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

    நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது!

    * 1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்கள். இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப் போகிறோம்!

    * மகளிருக்குக் கட்டணமில்லா பஸ் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.

    * 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலமாக, இளைஞர்கள் அனைத்து வேலைகளையும் பெற தகுதி உள்ளவர்களாக உயர்த்தப்பட்டு வருகிறார்கள்.

    * 'புதுமைப்பெண் திட்டம்' மூலமாக, அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக் கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது.

    * இதே மாதிரி, மாணவர்களுக்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் மூலமாக தரப் போகிறோம்.

    இப்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதாவது ஒரு நேரடி பலன் கிடைக்கும் வகையில், நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது.

    திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றாலே, சமூகநீதி அரசு! இது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்!

    * பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்துறையை உருவாக்கியதே தலைவர் கலைஞர் தான்.

    * வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கிய ஆட்சி, தி.மு.க. ஆட்சி!

    * பட்டியலின சமூகங்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்த ஆட்சி, தி.மு.க. ஆட்சி.

    * அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை, 'சமத்துவ நாளாக' அறிவித்திருக்கிறோம்!

    * கழகம் வளர்த்த கொள்கைக் குன்றான ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.

    * 1987-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியான சமூகநீதிப் போராளிகளுக்கான நினைவகம் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

    இது இரண்டையும் சீக்கிரமே விழுப்புரத்தில் நான் திறந்து வைக்க இருக்கிறேன்.

    * கழகத் துணைப் பொதுச்செயலாளரும் உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடியும், மறைந்த சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தியும் இந்த மாவட்டத்துக்கும், தொகுதிக்கும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.

    எல்லா மக்களுக்கும் பொதுவான மக்கள் நலத்திட்டங்கள் தொடர, உங்களின் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.

    சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிப்பது மூலமாக, சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கழகத்தின் உண்மைத் தொண்டரான அன்னியூர் சிவா என்ற சிவசண்முகம், விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும் உண்மையான சட்டமன்ற உறுப்பினராக இருப்பார்!

    மறவாதீர், உங்கள் சின்னம் உதயசூரியன்! வாக்களிப்பீர் உதயசூரியன்!

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


    • திமுகவிற்கு உதவும் வகையில் விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடவில்லை.
    • நீட் விவகாரத்தில் விஜய் கருத்தை கூறுவதற்கு அவருக்கு கருத்துரிமை உள்ளது.

    திருச்சி:

    திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆளுங்கட்சியின் அத்துமீறல்களையும் மீறி விக்கிரவாண்டி தேர்தலில் பாமக வெல்லும்.

    * விக்கிரவாண்டியில் போட்டியிடும் துணிச்சல் அதிமுகவிற்கு இல்லை.

    * 3வது, 4வது இடத்திற்கு செல்ல நேரிடும் என்பதால்தான் அதிமுக போட்டியிடவில்லை.

    * திமுகவிற்கு உதவும் வகையில் விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடவில்லை.

    * பாமகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என அதிமுக கூறி உள்ளது திமுகவிற்கு உதவும்.

    * விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றி பெற வைக்க அதிமுக மறைமுக உதவி செய்துள்ளது.

    * நீட் தேர்வு தொடர்பாக திமுக அரசு ஏன் வெள்ளை அறிக்கை வழங்க தயங்குகிறது? நீட் தேர்வுக்கு முன் - பின் மருத்துவ சேர்க்கை எப்படி நடைபெற்றது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    * நீட் விவகாரத்தில் விஜய் கருத்தை கூறுவதற்கு அவருக்கு கருத்துரிமை உள்ளது.

    * நீட் தேர்வு வந்த பிறகு அதிக அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

    * பாஜக எதிர்ப்பு அரசியல் என்கிற ஒன்றுக்காக நீட் தேர்வை தற்போது எதிர்க்கிறார்கள் என்று கூறினார்.

    • பிள்ளைகள், பேரன், பேத்திகள், படித்து கலெக்டராக டாக்டராக வேண்டும் என நானும், அன்புமணியும் கூறுகிறோம்.
    • தமிழ்நாட்டில் இன்று பிள்ளைகளுக்கு சாராயத்துடன் கஞ்சாவை கொடுத்து கெடுத்து விடுகிறார்கள்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதியில் சிந்தாமணி, உலகலாம் பூண்டி ஆகிய இடங்களில், பா.ம.க., வேட்பாளர் சி.அன்புமணிக்கு ஆதரவாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 45 ஆண்டு காலமாக இட ஒதுக்கீடு கேட்டு போராடி வந்து கொண்டிருக்கிறேன். 10 முறை சிறைச்சாலைகளுக்கு சென்று வந்துள்ளேன்.

    பிள்ளைகள், பேரன், பேத்திகள், படித்து கலெக்டராக டாக்டராக வேண்டும் என நானும், அன்புமணியும் கூறுகிறோம். நாங்கள் படியுங்கள் என்று கூறினால் ஆட்சியாளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு குடியுங்கள் என்று கூறுகிறார்கள்.

    சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கூறினால் மத்திய அரசு தான் செய்யனும் என்கிறார்கள் திமுகவினர். பெண்கள் விழிப்பாக உள்ளனர். நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அரசாங்கத்தை மாற்ற முடியும். கொள்ளையர்களை விரட்ட முடியும்.

    தமிழ்நாட்டில் இன்று பிள்ளைகளுக்கு சாராயத்துடன் கஞ்சாவை கொடுத்து கெடுத்து விடுகிறார்கள். சாதி வாரி கணக்கெடுப்பதால் வன்னியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என தெரிந்துவிடும் நான் வன்னியர்களுக்காக மட்டும் கேட்கவில்லை. அனைத்து சமுதாயத்திற்கும் தான் நான் இட ஒதுக்கீடு கேட்டு போராடி சிறை சென்று வந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமைச்சர்கள் பலர் அங்கு முகாமிட்டு தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்து வருகிறார்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்த தேர்தலுடன் சேர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை நடத்த முடியாமல் போனது.

    இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற 10-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு.தி.க.வும் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன.

    எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் உள்ள பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் மட்டுமே போட்டியிடுவதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    ஆனால், இடையில் கடந்த மாதம் 20-ம்தேதி முதல் 29-ம்தேதி வரை தமிழக சட்டசபையும் கூடியதால், விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் சூடுபிடிக்காமல் இருந்து வந்தது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில், தற்போது அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    அமைச்சர்கள் பலர் அங்கு முகாமிட்டு தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்து வருகிறார்.

    இந்த நிலையில், தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுவது சந்தேகம் என்றும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மட்டும் வரும் 6, 7, 8 ஆகிய தேதிகளில், விக்கிரவாண்டி தொகுதியில் வேன் மூலம் வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாகவும் தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடாததால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
    • இடது ஆள் காட்டி விரலில் மக்களவை தேர்தலின்போது வாக்களித்த மை இருந்தால் வலது கை விரலில் மை வைக்கப்படும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

    இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடாததால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது கை விரலில் மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    இடது ஆள் காட்டி விரலில் மக்களவை தேர்தலின்போது வாக்களித்த மை இருந்தால் வலது கை விரலில் மை வைக்கப்படும்.

    மக்களவை தேர்தலின்போது இடது கை விரலில் வைக்கப்பட்ட மை அழியாமல் இருந்தால் வலது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    • வழக்கமாக ஜூலை மாதத்தில் நாம் கொண்டாடும் 3 நாட்கள் எவ்வளவு முக்கியமானவையோ, அதே அளவுக்கு ஜூலை 10-ந்தேதியும் மிகவும் முக்கியம்.
    • 36-ம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருக்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட வேண்டும்.

    சென்னை:

    பாட்டாளி மக்கள் கட்சி 36-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன என்ற உண்மையை சொல்லி முடிக்கும்போதே, 35 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆட்சிப் பொறுப்பை அடைய முடியவில்லை என்ற நமது இயலாமையை ஒப்புக்கொள்ளும்போது மனம் வலிக்கிறது. எதனால் அது சாத்தியமாகவில்லை என்ற வினா எனது மனதில் நிறைகிறது.

    வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 20 சதவீதம் இட ஒதுக்கீடு, 10.50 சதவீதம் வன்னியர் இடஓதுக்கீடு, 3.50 சதவீத இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, 3 சதவீதம் அருந்ததியர் இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27சதவீத இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15சதவீத, பழங்குடியினருக்கு 7.50 சதவீத இட ஒதுக்கீடு என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது நாம் தான்.

    வழக்கமாக ஜூலை மாதத்தில் நாம் கொண்டாடும் 3 நாட்கள் எவ்வளவு முக்கியமானவையோ, அதே அளவுக்கு ஜூலை 10-ந்தேதியும் மிகவும் முக்கியம். இன்னும் கேட்டால் ஜூலை 10-ந்தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை வெற்றி பெறச் செய்வது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு நீங்கள் எனக்கு வழங்கும் மறக்க முடியாத பரிசாக இருக்கும். அதற்காக நான் காத்திருக்கிறேன்.

    விக்கிரவாண்டியில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட நச்சு சாராயத்தைக் குடித்து 65 பேர் உயிரிழந்தது, சமூகத்தின் அடித்தட்டில் வாழும் வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அறிவித்தது, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அனுபவித்து வரும் துயரங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றால் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் மத்தியில் எல்லையில்லா கோபமும், கொந்தளிப்பும் நிலவிக் கொண்டிருக்கிறது. அதை பாட்டாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    36-ம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருக்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தி நமது சாதனைகளை விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெறுவோம்.
    • பாலாற்றின் குறுக்கே ஆந்திர முதல்வர் தடுப்பணை கட்டுவோம் என்பார். நாங்கள் அதனை தடுப்போம்.

    விக்கிரவாண்டி தொகுதியில் அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி, சி.வெ.கணேசன், சேகர்பாபு ஆகியோர் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    பின்னர் பேட்டி அளித்த துரைமுருகன் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெறுவோம்.

    பா.ம.க.வினருக்கு வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை. அவர்களுக்கு அதுதான் தெரியும்.

    பாலாற்றின் குறுக்கே ஆந்திர முதல்வர் தடுப்பணை கட்டுவோம் என்பார். நாங்கள் அதனை தடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விக்கிரவாண்டியில் அப்பட்டமான விதிமீறல்கள் நடப்பதால் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்.
    • திமுகவினர் ஆயிரக்கணக்கான கார்களில் வலம் வருவது விதிமீறலாகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

    * விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்.

    * விக்கிரவாண்டியில் அப்பட்டமான விதிமீறல்கள் நடப்பதால் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்.

    * விக்கிரவாண்டியில் இறந்தவர்கள் 15,000 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    * திமுகவினர் ஆயிரக்கணக்கான கார்களில் வலம் வருவது விதிமீறலாகும்.

    * திமுகவின் விதிமீறல்களை தட்டிக்கேட்ட அதிமுக மற்றும் பாமகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    * இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விதிமீறல்கள், வன்முறைகளை திமுக கட்டவிழ்த்து விடுகிறது.

    * திமுகவினரின் விதிமீறல்கள் மீது தேர்தல் அதிகாரி சந்திரசேகர் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் அதிகாரி சந்திரசேகரால் இடைத்தேர்தலை நியாயமாக நடத்த முடியாது.

    * திமுகவினரின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து பாமக சார்பில் அளிக்கப்பட்ட அனைத்து புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    • தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது.
    • பட்டியல் வெளியான சில மணி நேரங்களில் அந்தந்த வேட்பாளர்களுக்குரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6-ம்தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக 56 வேட்பாளர்கள், 64 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வேட்புமனு பரிசீலனையின் முடிவில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாளாகும். எனவே வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள வேட்பாளர்கள் இன்று மாலை 3 மணிக்குள் வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று யாரும் வேட்பு மனுவை வாபஸ் பெற முன்வராத நிலையில் இன்று மாலை 3 மணிக்குள் ஒன்றிரண்டு பேர் வேட்பு மனுவை வாபஸ் பெறலாம் என தெரிகிறது.

    அதன்பிறகு தேர்தல் களத்தில் போட்டியிடக் கூடியவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியல் வெளியான சில மணி நேரங்களில் அந்தந்த வேட்பாளர்களுக்குரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, தேர்தல் பொது பார்வையாளர் அமித்சிங் பன்சால், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 13-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும்.
    • வேட்புமனு வாபஸ் பெற நாளைமறுதினம் கடைசி நாளாகும்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. 21-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதில் அதிமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றன. ஸ்ரீமதி தாயார் உள்ளிட்ட பலர் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    மொத்தமாக 54 பேர் தாக்கல் செய்தனர். இன்று வேட்புமனு மீதான பரிசீலனை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஸ்ரீமதி தாயார் உள்பட 35 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் சார்பில் மனு தாக்கலில் குறைபாடு உள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் வேண்டுமென்றே தங்களது வேட்புமனுக்கள் நிராரிக்கப்பட்டது எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

    விக்கிரவாண்டியில் ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 13-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும். நாளை மறுநாள் வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

    கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி பள்ளியில மர்மமான முறையில் மாணவி உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பள்ளி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பள்ளியில் இருந்த பொருட்களும் சூறையாடப்பட்டது.

    இதையடுத்து மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து அவரது தாய் செல்வி சின்னசேலம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஸ்ரீமதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சுமார் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
    • மனுக்கள் பரிசீலனை இன்று மாலை அல்லது நாளை காலை உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதியன்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தொடங்கி 21-ந்தேதியுடன் முடிவடைந்தது.

    இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா, ஆகியோர் உட்பட 16 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இவர்களில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி வனிதா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக ரங்கநாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவுக்கு மாற்று வேட்பாளர் கலைச்செல்வி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீபாவுக்கு மாற்று வேட்பாளராக முகமது இலியாஸ் ஆகிய 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களை தவிர சுயேச்சை வேட்பாளர்களாக சதீஷ், விஜயா, அரசன், இசக்கிமுத்து உள்பட 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 3 மனுக்களும், பா.ம.க. வேட்பாளர் அன்புமணி 2 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 2 மனுக்களும், தாக்கம் கட்சி வேட்பாளர் முத்தையா 2 மனுக்களும், அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த சரசு 2 மனுக்களும், தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீபா 2 மனுக்களும், அகிம்ஷா சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த ரமேஷ் 2 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் மொத்தம் 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மனுக்கள் பரிசீலனை இன்று மாலை அல்லது நாளை காலை உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 26-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    • வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று மட்டும் ஒரே நாளில் 32 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.
    • மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதியன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்தில் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

    இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இதன் மூலம் மொத்தம் விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இவர்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 3 மனுக்களும், பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, சுயேச்சை வேட்பாளர்கள் காந்தியவாதி ரமேஷ், அக்னி ஆழ்வார், நூர்முகமது, ராஜேந்திரன் ஆகியோர் தலா 2 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் மொத்தம் 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 26-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று மட்டும் ஒரே நாளில் 32 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, விதவைக்கோலத்தில் ஆறுமுகம், எம்.ஜி.ஆர். வேடத்தில் நூர்முகமது உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

    இதன் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கியது.

    ×