search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water canal"

    பூண்டி நீர்தேக்கத்தை சுற்றியுள்ள நீர்வரத்து கால்வாய்கள் அமைந்துள்ள கிராமப்புற பகுதிகளில் ஓடை உள்வரத்து கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
    திருவள்ளூர்:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 2 ஆயிரத்து 544 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் 3231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும்.

    கோடை காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக இங்கிருந்து பேபி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    தற்போது பருவமழை பொய்த்து போனதாலும், நீர்வரத்து குறைந்து போனதாலும் பூண்டியில் நீர் இருப்பு மிகவும் குறைந்து போனது.

    ஆந்திர அரசு கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் மூலமாக பூண்டி ஏரிக்கு வழங்கும் தண்ணீரை கொண்டே சென்னை மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குடிநீர் ஆதாரத்தை பெருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது.

    அதன்படி பூண்டி நீர்தேக்கத்தை சுற்றியுள்ள நீர்வரத்து கால்வாய்கள் அமைந்துள்ள காரணி கைவண்டூர், சென்றான் பாளையம், எல்லப்பன் நாயுடு கண்டிகை,‌ பாண்டூர், ராமஞ்சேரி உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் ஓடை உள்வரத்து கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    பெரும்பாலான நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் பேசி உரியமுறையில் கால்வாய்கள் அமைத்து வருகின்றனர்.

    மேலும் ஒரு சில ஆக்கிரமிப்பாளர்கள் சீரமைப்பு பணிக்கு ஒத்துழைக்க மறுப்பதால் அவர்கள் மீது திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது,

    கால்வாய் சீரமைப்பு பணி சுமார் ஒரு கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையும்.

    பூண்டி நீர்தேக்கத்தை சுற்றியுள்ள 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடை உள்வரத்து கால்வாய்களை சீரமைக்கும் பட்சத்தில் மழை காலத்தில் நீர் வீணாகாமல் இந்த ஓடை வழியாக பூண்டி நீர்தேக்கத்தை வந்தடைய வாய்ப்பு இருக்கிறது.

    இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும் என்றார்.

    ×