search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "what parents should look out for"

    • குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பல பெற்றோர்களின் அணுகுமுறை தவறானதாக இருக்கிறது.
    • குழந்தைகளை கடுமையாக திட்டும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

    குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பல பெற்றோர்களின் அணுகுமுறை தவறானதாக இருக்கிறது. சிறு தவறு செய்தால் கூட குழந்தைகளை கடுமையாக திட்டும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். படிப்பு விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளவும் செய்கிறார்கள். அவர்கள் விளையாடுவதற்கு கூட நேரம் ஒதுக்காமல் எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இத்தகைய அணுகுமுறை குழந்தைகளை மனதளவில் பலவீனப்படுத்தும்.

    எதிர்மறை எண்ணங்களை மனதுக்குள் விதைத்து பெற்றோரை எதிரியாக பாவிக்க வைத்துவிடும். குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யும் தவறுகள் குறித்தும், அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.

    பாதுகாப்பு

    குழந்தைகள் மீது கொண்டிருக்கும் அன்பினால் அவர்களின் நலன் மீது பெற்றோர் கூடுதல் அக்கறை கொள்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் நோக்கத்தில் வெளி இடங்களுக்கு செல்லும்போது கடும் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சில பெற்றோர் அருகில் இருக்கும் பகுதிக்கு கூட குழந்தைகள் தனியாக செல்ல அனுமதிப்பதில்லை.

    சமூகம் மீது தவறான புரிதலை குழந்தைகளிடத்தில் விதைப்பதற்கு பெற்றோர் காரணமாகிவிடக்கூடாது. தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்ட வேண்டுமே தவிர, பயத்தையும், பீதியையும் மனதில் பதிய வைத்துவிடக்கூடாது.

    வெளி இடங்களுக்கு குழந்தைகள் சுதந்திரமாக சென்று வர வேண்டும். ஏதேனும் பிரச்சினையை சந்திக்க நேர்ந்தால் கூட அதை துணிச்சலோடு எதிர்கொள்ள பழக்கப்படுத்த வேண்டும். தற்காப்பு பயிற்சிகள் கற்றுக்கொடுக்கலாம். அது மன வலிமையை அதிகப்படுத்தும். சுய பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தும். துன்பங்களையும், சவால்களையும் சமாளிக்க போராடும் ஆற்றலையும் கொடுக்கும்.

    படிப்பு

    இன்றைய போட்டி நிறைந்த உலகில் தங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்க்கிறார்கள். படிப்பை முன்னிறுத்தி அவர்களின் தனித்திறமைகளை புறந்தள்ளி விடுகிறார்கள். வெறும் படிப்பு மட்டுமே ஒரு குழந்தையை வாழ்வின் உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லாது. தனித்திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமயோசிதமாக செயல்படும் திறனையும் கொண்டிருக்க வேண்டும். அவற்றை வளர்ப்பதற்கு முயற்சிக்காமல் கல்வியில் மட்டுமே சாதிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு கூட மதிப்பளிப்பதில்லை.

    இத்தகைய போக்கு குழந்தைகளிடத்தில் பதற்றம், மன அழுத்தம், சோர்வுக்கு வித்திடும். குழந்தைகளின் விருப்பங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றை கேட்டறிந்து அதில் போதுமான நேரத்தை செலவளிக்க அனுமதிக்க வேண்டும். படிப்புடன் தனித்திறமைகளையும் வளர்த்துக்கொள்ளும் குழந்தைகள் வாழ்க்கையில் சாதிக்கிறார்கள். அதனை புள்ளி விவரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

    தனிப்பட்ட விருப்பம்

    பெரும்பான்மையான பெற்றோர் தங்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதற்கு குழந்தைகளை நிர்பந்திக்கிறார்கள். குழந்தைகளின் தேவைகளை விட தங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். தங்களுடைய விருப்பப்படி நடந்து கொள்ளாவிட்டால் கடுமையாக தண்டிக்கவும் செய்வார்கள். குழந்தைகளின் தனிப்பட்ட விருப்பங்களை கவனத்தில் கொள்வதில்லை. உங்கள் விருப்பங்களை குழந்தைகளிடத்தில் திணிப்பது சுயநலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களை வழிநடத்துவதே சரியானது.

    தண்டனை வழங்குதல்

    குழந்தைகள் சிறு தவறு செய்தால் கூட கடுமையாக திட்டுவது, அடிப்பது, மனரீதியாக காயப்படுத்துவது போன்ற கடுமையான அணுகுமுறையை பல பெற்றோர் கையாளுகிறார்கள். குழந்தைகளை திருத்துவதற்கு இந்த அணுகுமுறைதான் சரியானது என்று கருதுகிறார்கள். அப்படி கடுமையாக நடந்து கொள்வது உறவில் விரிசலை ஏற்படுத்தும். மீண்டும் தவறு செய்தால் பெற்றோரிடம் கூறாமல் மறைப்பதற்கு முயற்சிக்கும். அது தவறான பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்வதற்கு அடிகோலிடும். செய்த தவறுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக இனி தவறு நடக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்களை பட்டியலிடலாம். அவர்களுடன் நேரத்தை செலவிட்டு அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளலாம். அவர்களின் பேச்சில் வெளிப்படும் தவறுகளை திருத்துவதற்கு முயற்சிக்கலாம்.

    ஒப்பிடுதல்

    குழந்தைகளை சக குழந்தைகள், உடன்பிறந்தவர்களுடன் ஒப்பிடுவது இயல்பானது. இந்த அணுகுமுறை குழந்தையின் சுயமரியாதைக்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைகளிடமும் தனித்திறமைகள் வேறுபடும். அவர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளின் தனித்துவமான குணங்கள் மற்றும் சாதனைகளை கொண்டாடுங்கள். அவர்களின் ஆர்வங்களை ஊக்குவியுங்கள். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை தவிருங்கள். ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்குங்கள்.

    ×