என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman injured"

    • வாழைத்தார்களை ஒற்றை காட்டு யானை தின்று கொண்டிருந்தது.
    • 2 பேர் இறந்த நிலையில் இன்று ஒரு பெண்மணியை யானை தாக்கியுள்ளது

    கவுண்டம்பாளையம்,

    கோவை கணுவாய் அடுத்துள்ள சோமையனூரில் இருந்து மடத்தூர் செல்லும் சாலையில் நல்லதம்பி கவுண்டர் தோட்டம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் பாலாமணி(வயது40). இவர் இன்று காலை 4 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்களை ஒற்றை காட்டு யானை தின்று கொண்டிருந்தது.

    யானையை பார்த்ததும் பாலாமணி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் யானை தனது தும்பிக்கையால் பாலாமணியை தாக்கியது.

    இதில் பாலாமணியின் முதுகு எலும்பு உடைந்து அவர் பலத்த காயத்துடன் அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அந்த யானையை வனப்ப குதிக்குள் விரட்டினர். இது தொடர்பாக விசாரித்தும் வருகிறார்கள்.

    கடந்த வாரத்தில் யானை தாக்கி 2 பேர் இறந்த நிலையில் இன்று ஒரு பெண்மணியை யானை தாக்கியுள்ளது இந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மதுரை அருகே உள்ள கடைக்குள் பைக் புகுந்தது.
    • பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்த பெண் படுகாயமடைந்தார்.

    மதுரை

    மதுரை தபால்தந்தி நகர், பேங்க் காலனியைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாமுவேல் தாய் மஞ்சுளா (49) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது திருமங்கலம், முல்லைநகர் பகுதியில், அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள், அங்குள்ள கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்தது. இதில் சாமுவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    மஞ்சுளாவுக்கு தலை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாமுவேல், மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 26 பெண் தொழிலாளர்கள் மினி மேனில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர்.
    • தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் 26 பெண்களும் காயமடைந்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிசெட்டிபாளையம் போன்ற பகுதிகளில் தேனீக்கள் கொட்டியதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது தொடர்கதையாகி வருகிறது. இதேபோன்று ஒரு சம்பவம் நேற்று கோபிசெட்டிபாளையம் அருகே நடந்துள்ளது. இந்த சம்பவம் வருமாறு:-

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள இண்டியன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரடு பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று 26 பெண் தொழிலாளர்கள் மினி மேனில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மினிவேனை விட்டு கீழே இறங்கியதும் அந்தப் பகுதியில் இருந்த தேனீக்கள் திடீரென அந்த 26 பெண் தொழிலாளர்களையும் கொட்டத் தொடங்கியது. இதனால் அந்த பெண்கள் அலறடித்து ஓடினர். எனினும் தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் 26 பெண்களும் காயமடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர்கள் பின்னர் சிறிது நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென தாட்சாயிணி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினான்.
    • அதிர்ச்சி அடைந்த தாட்சாயிணி கொள்ளையனை பின் தொடர்ந்து விரட்டி சென்றார்.

    போரூர்:

    ராமாபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாட்சாயிணி (வயது47). கணவரை இழந்த இவர் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஐ.டி நிறுவன கேண்டீனில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை 8மணி அளவில் அவர், வழக்கம் போல வீட்டில் இருந்து வளசரவாக்கம் பெத்தானியா நகர் வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென தாட்சாயிணி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினான். இதனால் அதிர்ச்சி அடைந்த தாட்சாயிணி கொள்ளையனை பின் தொடர்ந்து விரட்டி சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அவர் சாலையில் தவறி கீழே விழுந்தார். இதில் தாட்சாயிணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தாட்சாயிணியின் நெற்றியில் 6 தையல் போடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்து தப்பிய கொள்ளையனை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கண்டமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு கரடிகள் உலா வருகின்றன.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் இருந்த கரடியை வனத்துறையினர் போராடி மீட்டனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் கதிர்வேல்புரத்தில் அதிக அளவு பளியர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வேலப்பர் கோவில் அருகே உள்ள கண்டமனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று மூலிகை, ஈஞ்சமார் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    அதன்படி கதிர்வேல்புரத்தைச் சேர்ந்த செல்வி (வயது 32) என்பவர் மூலிகை சேகரிக்க அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சென்றார். அனைவரும் திரும்பிய நிலையில் செல்வி மட்டும் வராததைக் கண்டு அவர்கள் திரும்பிச் சென்று பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் செல்வி காயங்களுடன் கிடந்தார்.

    அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சைக்கு சேர்த்தனர். மூலிகை சேகரிக்க சென்ற போது புதரில் மறைந்திருந்த ஒரு கரடி செல்வியை தாக்கியதாகவும், உயிருக்கு பயந்து ஓடிய போதும் விரட்டி கடித்ததால் காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்டமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு கரடிகள் உலா வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் இருந்த கரடியை வனத்துறையினர் போராடி மீட்டனர்.

    தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • ஆடுகளுக்கு கொடுப்பதற்காக வீட்டின் பின்புறம் வனபகுதியை ஒட்டியுள்ள மரத்தில் கிளைகளை தனபாக்கியம் ஒடித்துக் கொண்டிருந்தார்.
    • தனபாக்கியத்தை காட்டெருமை தாக்குவதை கண்ட அவரது வளர்ப்பு நாய் குறைத்ததால் காட்டெருமை அங்கிருந்து ஓடி விட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொலகூர் கிராமம். இங்கு ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள பெரும்பாலான வீடுகள் வனப்பகுதியை ஒட்டியே உள்ளன. இதனால் அவ்வப்போது காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் கிராம பகுதிக்கு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாலை கொலகூர் மிதுவகாடு பகுதியில் வசிக்கும் ஜெயமணி என்பவரது மனைவி தனபாக்கியம் (48) வீட்டிற்கு அருகில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆடுகளுக்கு கொடுப்பதற்காக வீட்டின் பின்புறம் வனபகுதியை ஒட்டியுள்ள மரத்தில் கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தார்.

    அந்த மரத்திற்கு அருகே காட்டெருமை படுத்திருந்தது. இதை கவனிக்காமல் தனபாக்கியம் தொடர்ந்து மரக்கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென காட்டெருமை அவரை முட்டி தாக்கியது.

    இந்த நிலையில் தனபாக்கியத்தை காட்டெருமை தாக்குவதை கண்ட அவரது வளர்ப்பு நாய் குறைத்ததால் காட்டெருமை அங்கிருந்து ஓடி விட்டது. இதனிடையே தனபாக்கியத்தின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.

    பலத்த காயமடைந்து இருந்த அவரை மீட்டு ஏற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வந்தது.
    • பலத்த மழையால் சேதமடைந்து திடீரென சிமெண்டாலான மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது மாலை முதலே நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வந்தது. அவ்வப்போது இடி மின்னல் அதிக அளவில் இருந்தது.

    அதில் நத்தம் அருகே பாத சிறுகுடியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவரின் காலனி வீடு பலத்த மழையால் சேதமடைந்து திடீரென சிமெண்டாலான மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் அவரது மனைவி முனியம்மாள் (வயது 43) என்பவரின் காலில் சிமெண்ட் தளம் விழுந்ததால் பலத்த காயமடைந்தார்.

    தகவல் அறிந்த நத்தம் போலீசார் காயமடைந்தவரை 108 வாகனம் மூலம் நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வீட்டின் கீழ்தளத்தில் 5 வீடுகளும், மேல்தளத்தில் 4 வீடுகளும் வாடகைக்கு விட்டுள்ளார்.
    • இந்த வீட்டில் திடீரென மேல்தள வீடுகளுக்கு முன்பிருந்த கான்கிரீட் சிலாப் உடைந்து கீழேவிழுந்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே வசித்து வருபவர் திருப்பதி. இவர் வீட்டின் கீழ்தளத்தில் 5 வீடுகளும், மேல்தளத்தில் 4 வீடுகளும் வாடகைக்கு விட்டுள்ளார்.

    இந்த வீட்டில் திடீரென மேல்தள வீடுகளுக்கு முன்பிருந்த கான்கிரீட் சிலாப் உடைந்து கீழேவிழுந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற விஜயா என்பவர் காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கான்கிரீட் சுவர் விழுந்ததால் மாடியில் குடியிருந்த 2 குடும்பத்தினர் வெளியே வரமுடியாமல் தவித்தனர். உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வந்து 2 குடும்பத்தினரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்துகுறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பிரியா வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் தெற்கு வீதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம் அருகில் வசித்து வருபவர் நந்தகுமார் ( 28). இவரது மனைவி பிரியா (வயது 27). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். கணவன், மனைவி இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று நந்தகுமார் வேலைக்கு சென்று விட்டார். பிரியா வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வேகமாக சென்ற டிராக்டர் நந்தகுமாரின் வீட்டு சுவரில் மோதி, இரும்பு கதவை உடைத்து கொண்டு நிற்காமல் வீட்டுக்குள் புகுந்து பிரியா மீது ஏறியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இதுபற்றி தகவல் அறிந்த நந்தகுமார், வீட்டிற்கு விரைந்து வந்து அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் டிராக்டர் அடியில் சிக்கி தவித்த பிரியாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரியாவுக்கு வலது கால் முறிந்ததாக தெரிகிறது. இதற்கிடையே டிராக்டரை ஓட்டி வந்த காடையூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவருடைய மகன் லோகநாதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பிடித்து பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், லோகநாதன் மது போதையில் டிராக்டர் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழிலாளர்கள் அங்கு இருந்த ஹீட்டர் மிஷினை சுவிட்ச் ஆப் செய்யாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
    • தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது47). இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சந்தன மகாலிங்கம் என்பவர் பட்டாசு தயாரிக்க தேவையான அட்டைக் குழாய்களுக்கு யூ.வி. கோட்டிங் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இங்கு வழக்கம் போல் நேற்று இரவில் வேலை நடைபெற்றது.

    அப்போது தொழிலாளர்கள் அங்கு இருந்த ஹீட்டர் மிஷினை சுவிட்ச் ஆப் செய்யாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் அந்த தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடர்பாடுகளில் வேறு யாரும் சிக்கி இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தனர்.

    இந்த சம்பவத்தின்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராணி (35) என்கிற பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    • திடீரென தையல்நாயகி அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது.
    • பயணிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டையில் இருந்து நேற்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.

    குமராட்சியை சேர்ந்த ஹரிதரன் (வயது 60) என்பவர் பஸ்சை ஓட்டினார். சிதம்பரம் அருகே வேலக்குடியை சேர்ந்த அருள்மணி என்பவர் கண்டக்டர் பணியில் இருந்தார்.

    இந்த பஸ் புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள நிறுத்தத்திற்கு காலை 7.30 மணி அளவில் வந்தபோது, அதே கிராமத்தை சேர்ந்த சந்திரன் மனைவி தையல்நாயகி (52) என்பவர் பஸ்சில் ஏறி, பின்பக்க இருக்கையில் அமர்ந்துள்ளார். பின்னர் பஸ் புறப்பட்டு, புதுப்பேட்டை அருகில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தையல்நாயகி அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது.

    இதில் நிலை தடுமாறிய தையல்நாயகி பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக சாலையில் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு உடனே, ஹரிதரன் பஸ்சை நிறுத்தினார். விபத்தில் தையல் நாயகியின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர், பயணிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனது கையில் வைத்தபடி தலைமுடி உலர்த்தும் உபகரணத்தை ஆன் செய்துள்ளார்.
    • முடி உலர்த்தும் எந்திரத்தில் வெடி பொருளை வைத்து அனுப்பிய ஷீலாவந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் இலகல் டவுனை சேர்ந்தவர் சசிகலா. இவரது வீட்டிற்கு கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. இதையடுத்து பார்சல் நிறுவன ஊழியர் சசிகலாவை தொடர்பு கொண்டார். அப்போது அவர் தான் எந்த பொருளும் ஆர்டர் செய்யவில்லை என்றும், தற்போது தான் வெளியில் இருப்பதாகவும் கூறினார்.

    அதற்கு அந்த ஊழியர் இப்போதே உங்கள் பொருளை வாங்கிச் செல்லுங்கள் என சொல்லியுள்ளார். இதனால் சசிகலா தனது தோழியான பக்கத்துவீட்டை சேர்ந்த பசவராஜேஸ்வரி (வயது 40) என்பவருக்கு போன் செய்து, அந்த கூரியரை வாங்கி வைக்கும்படி கூறியுள்ளார்.

    பின்னர் அதனை தனது வீட்டுக்கு எடுத்து சென்று பசவராஜேஸ்வரி பிரித்து பார்த்துள்ளார். அப்போது பக்கத்துவீட்டை சேர்ந்த ஒருவர், அந்த உபகரணத்தை எப்படி செயல்படுகிறது என செயல்விளக்கம் காட்டும்படி கூறியுள்ளார். இதையடுத்து பசவராஜேஸ்வரி தனது வீட்டில் உள்ள மின் சுவிட்ச் பாக்சில் மின்வயரை இணைத்துவிட்டு, தனது கையில் வைத்தபடி தலைமுடி உலர்த்தும் உபகரணத்தை ஆன் செய்துள்ளார்.

     


    ஷீலாவந்த்

    அந்த சமயத்தில் திடீரென அந்த உபகரணம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பசவராஜேஸ்வரியின் இரு கைகளும் மணிக்கட்டு அளவுக்கு துண்டாகியது. கைவிரல்கள் துண்டாகி வீட்டின் அறை முழுவதும் ரத்தம் சிதறியது. இதனால் வலியில் கதறி துடித்தார். உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-

    பசவராஜேஸ்வரிக்கும் அவரது உறவினர் ஷீலாவந்த் என்பவருக்கும் திருமணத்துக்கு முன்பே பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் பசவராஜேஸ்வரியின் கணவர் இறந்த பின்பும் ஷீலாவந்த் தொடர்ந்து பழகி வந்தார். இதையடுத்து பக்கத்துவீட்டை சேர்ந்த சசிகலா அவருடன் பழகுவதை நிறுத்த சொல்லியுள்ளார். இது பற்றி தெரியவந்ததும் ஷீலாவந்த் ஆத்திரமடைந்து சசிகலாவை கொல்ல திட்டமிட்டார். கிரானைட் குவாரியில் வேலை பார்க்கும் ஷீலாவந்த், சசிகலா மீது உள்ள ஆத்திரத்தில் ஒரு முடி உலர்த்தும் எந்திரத்தை வாங்கி அதில் குவாரிகளில் பாறைகளை வெடிக்க பயன்படுத்தப்படும் டெட்டனேட்டரை பொருத்தினார்.

    பின்னர் அதை சசிகலாவின் முகவரிக்கு கூரியர் மூலம் அனுப்பி உள்ளார். அப்போது சசிகலா வீட்டில் இல்லாததால் அதை பசவராஜேஸ்வரி வாங்கி பயன்படுத்திய போதுதான் அது வெடித்து சிதறியது தெரியவந்தது. இதையடுத்து முடி உலர்த்தும் எந்திரத்தில் வெடி பொருளை வைத்து அனுப்பிய ஷீலாவந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×