search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women procession"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கன்னியாகுமரியில் 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தியபடி மவுன ஊர்வலம் நடத்தினர்.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி என பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரியில் 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு மவுன ஊர்வலம் நடத்தினர். கன்னியாகுமரி சின்னமுட்டம் ஆரோக்கியபுரம், வாவத்துறை, சிலுவை நகர், புது கிராமம், கோவளம், கீழ மணக்குடி, மணக்குடி, முகிலன் குடியிருப்பு, தென் தாமரைகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களும், கன்னியாகுமரி சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையை எதிர்ப்பு இயக்கத்தினரும் இதில் பங்கேற்றனர்.

    ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் கருப்புக்கொடி ஏந்தியபடி சென்றனர். ஊர்வலம் காந்தி மண்டபத்தை அடைந்ததும் அங்கு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பொதுக்கூட்டம் நடந்தது. கன்னியாகுமரி பகுதியில் உள்ள கிராமங்களில் மின்கம்பங்களிலும், வீடுகளிலும் கருப்புக் கொடி காட்டப்பட்டிருந்தது.

    கருங்கல் பஸ் நிலையம் எதிரே இன்று காலை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட் டது.

    குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குளச்சலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தலைவர் நரேந்திரதேவ் தலைமையில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் நவீன் குமார், மாநில செயலாளர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பத்மநாபபுரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நெல்சன் தலைமையில் அந்த பகுதியில் சாலைமறியிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கிளை தலைவர் முகம்மது ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ×