என் மலர்
நீங்கள் தேடியது "ஆடித்திருவிழா"
- வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.
- கடவுள் போன்று வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.
மேட்டூர்:
சேலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 22 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் கோவிலை மையமாக வைத்து அதனை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா களைகட்டும்.
ஆடி பண்டிகையின் போது பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவர். இதன் ஒரு பகுதியாக வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் பக்தர்கள் கடவுள் போன்று வேடமிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில் சேலம் குகை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.
இதில் மேச்சேரி சந்தைப்பேட்டையில் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு அக்னி கரகம், அலகு குத்துதல், பொய்க்கால் குதிரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
இதையடுத்து வண்டிவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இக்கோவிலில் பெண்கள் மட்டுமே அம்மன் வேடம் அணிந்து வலம் வரும் வண்டிவேடிக்கை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
பிரமாண்ட வண்டியில் மின்னொளி ஜொலித்தபடி பெண்கள் கடவுள்களைப் போல் வேடம் அணிந்து வண்டிகளில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அகிலாண்டேஸ்வரி, உலகநாயகி, காமாட்சி, காலபைரவி, சத்திய சொரூபி, சரஸ்வதி தேவி, ஞானரூப தேவி, தாட்சாயணி தேவி, துர்க்கை, பகவதி, பார்வதி தேவி, மீனாட்சி, பத்ரகாளியம்மன், வேப்பிலைக்காரி, உமா தேவி, காயத்ரி தேவி, பெரிய நாயகி உள்ளிட்ட பல்வேறு அம்மன் சாமிகள் வேடம் அணிந்து அசத்தினர்.
இப்பெண்கள் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுபோல் காட்சி தந்தனர். இது கடவுள் விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு வந்து ஆசி வழங்குவது போல் இருந்தது. இதிகாசங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.
வண்டியின் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொய்க்கால் குதிரை நாட்டியம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். பொய்க்கால் குதிரை நாட்டியம் காண்போரை கவரும் வண்ணம் இருந்தது.
இவ்விழாவில் ஓமலூரான் தெரு, கோல்காரனூர், அழகா கவுண்டனூர் உள்ளிட்ட 12 பட்டி கிராம மக்கள் பங்கேற்றனர்.
- மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா பாரம்பரிய முறைப்படி நடந்தது.
- பக்தர்கள் அம்பாளுக்கு காவடி, பூத்தட்டு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நாகப்பட்டினம்:
வாய்மேடு அருகே தாணிக்கோட்டகத்தில் வாணங்காடு ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆடி திருவிழா பாரம்பரிய முறைப்படி நடந்தது.
முன்னதாக அம்பாளுக்கு பால், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு போட்டும், முடி இறக்கவும், அம்பாளுக்கு காவடி, பூத்தட்டு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பின்பு பண்டைய கால முறைப்படி பாரம்பரியம் மாறாமல் பனை மட்டை ஓலைகளில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
- ஆடித்திருவிழா கடந்த 4-ந்தேதி கால் நாட்டு விழாவுடன் தொடங்கியது.
- சப்பர பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை வல்லம் ரோடு அனுமன் நதிக்கரையில் உள்ள ஸ்ரீசெல்வவிநாயகா், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 4-ந்தேதி கால் நாட்டு விழாவுடன் தொடங்கியது. விழாவையொட்டி செல்வவிநாயகா், இருக்கன்குடி மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடந்தது. மேலும் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜைகள் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான கொடைவிழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்று காலை குற்றால தீர்த்தம் எடுத்து வருதல், பால்குடம், அக்னிச்சட்டி, அக்னிகாவடி, பூந்தட்டு மற்றும் அலகுகுத்தி ஊர்வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னா் அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம், இரவில் இருக்கன்குடி மாரியம்மன் சப்பர பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 12-ந் தேதி காலை முளைப்பாரி கரைத்தல், அம்மனுக்கு ஆராட்டு, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளா்கள் செய்திருந்தனா்.
- நேற்றிரவு முதல் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள்
- கோவில் வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஆடித்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த மாதம்25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள் தோறும் இரவு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் வைபவம் நேற்று தொடங்கியது. இதயைடுத்து நேற்று காலை முதலே கோவிலுக்கு வந்த பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நேற்றிரவு முதல் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள். இன்று காலையும் கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். இதையொட்டி கோவில் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அதன் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் பக்தர்கள் நீண்ட தூரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் கூழ் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் டவுன் போலீஸ் கமிஷனர் வெங்கடேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகி றார்கள். மேலும் கோவில் வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. அதன்படி சேலம் குகை மாரியம்மன், காளியம்மன், சேலம் சின்ன மாரியம்மன், தாதாகப்பட்டி மாரியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலபட்டரை மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், தாதம்பட்டி மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், காமராஜர் காலனி மாரியம்மன் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் திரண்டு பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்துதல், அக்னி மற்றும் பூக்கரகம் எடுத்தல், போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் முதுகில் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். சிலர் விமான அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர். இதனை பார்த்தபக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
ஆடிப்பண்டி கையையொட்டி சேலம் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆடிப்பண்டிகையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்களில் அதிக அளவில் கூட்டம் அலை மோதியது. இதை யொட்டி கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- வருகிற 7-ந்தேதி வரை நடக்கிறது
- இரவு நாடகம் நடைபெற உள்ளது
வேலூர்:
வேலூர் விருப்பாட்சி புரம் காந்திநகரில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு 18-ம் ஆண்டு 3-வது வெள்ளி ஆடி திருவிழா நாளை தொடங்கி வருகிற 7-ந்தேதி வரை நடைபெறுகிறது.
நாளை காலை 6 மணிக்கு வலம்புரி விநாயகருக்கு கணபதி பூஜையும், ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகமும். 108 சங்கு அபிஷேகமும் நடைபெறும். மதியம் 12 மணிக்கு கூழ் வார்த்தலும், அன்னதானமும் நடைபெறுகிறது.
இரவு 8 மணிக்கு புஷ்ப பல்லக்கில் கருமாரியம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை, முருகன் வீதி உலா நடைபெறும். 5-ந்தேதி (சனிக்கிழமை)மாலை 6 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணிக்கு பரதநாட்டியமும், 7-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு நாடகமும் நடைபெற வுள்ளது.
விழா விற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் விழா குழுவினர், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக தேரில் சவுந்தரராஜ பெருமாள் சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் எழுந்தருளி வீதி உலா வந்துமீண்டும் சன்னதியை வந்தடைந்தது.
- நாளை (வியாழக்கிழமை) மாலை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சவுந்தரராஜ பெருமாள் எழுந்துருளி வீதி உலா வந்தார். கடந்த 30ம் தேதி மாலை சவுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையடுத்து சுவாமி திருமண கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தை தாடிக்கொம்பு சண்முகவேல் மில்ஸ் குழும தலைவர்கள் வேலுச்சாமி கவுண்டர், கந்தசாமி கவுண்டர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகளான தேரோடும் வீதி, அண்ணாநகர், சந்தை திடல், வடக்கு தெரு, நடுத்தெரு வழியாக தேரில் சவுந்தரராஜ பெருமாள் சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் எழுந்தருளி வீதி உலா வந்துமீண்டும் சன்னதியை வந்தடைந்தது.
இதில் தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, துணைத்தலைவர் நாகப்பன், தாடிக்கொம்பு தி.மு.க. பேரூர் செயலாளர் ராமலிங்கசாமி, அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், துணைத் தலைவர் ஜெயபால், தொழில் அதிபர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளை (வியாழக்கிழமை) மாலை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் சந்தனம்மாள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்தனர். ஆடித் திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் சுரேஷ், கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
- ஆடித்தபசு திருவிழா திங்கட்கிழமை நடைபெறுகிறது.
- ரதவீதிகள் சுத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்பட்டது இருந்தது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில், தவ மிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும்.
இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் 9-ம் நாளான இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு கோமதி அம்பாள் காலை 5.40 மணிக்கு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
தேரோட்டத்தில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளருமான ராஜ லெட்சுமி, சங்கரன் கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் கோவில் துணை ஆணையர் ஜான்சி ராணி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், தி.மு.க.வை சேர்ந்த நகர செயலாளர் பிரகாஷ், சீதாலட்சுமி ராம கிருஷ்ணன், சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், அனுசியா மாரிமுத்து, அரசு ஒப்பந்ததாரர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், தொழிலதிபர்கள் திவ்யா ரெங்கன், இசக்கியப்பன், நகர ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சின்னச்சாமி
அ.தி.மு.க. கவுன்சிலர் சங்கரசுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் பிரகாஷ், சபரிநாத், பா.ஜனதா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் ரதவீதிகள் சுத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்பட்டது இருந்தது.
- ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் விசேஷமானது.
- கூழ் மற்றும் பதார்த்தங்களை வீட்டில் சமைக்க வேண்டும்.
பொதுவாகவே ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் விசேஷமானது. ஆடி மாதம் ஞாயிற்று கிழமை அம்மன் வழிபாட்டை எப்படி முறையாக செய்து அம்மனின் அருள், ஆசியை முழுமையாக எப்படி பெறுவது? என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை மிகவும் விசேஷமானது. இந்த தினத்தில் நாம் அம்மனுக்கு கூழ் காய்ச்ச உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து, ஆடி ஞாயிறு, அன்னதானத்திற்கும் உரிய தினம்.
கூழ் மற்றும் பதார்த்தங்களையும் வீட்டில் சமைக்க வேண்டும். முருங்கைக்கீரை, காராமணி குழம்பு, வாழைக்காய், கத்திரிக்காய், இவைகளோடு சில பேர் வீடுகளில் கொழுக்கட்டையும் செய்வார்கள். இவைகளை சமைத்து ஏழை எளிய மக்களுக்கு கூழுடன் சேர்ந்த பதார்த்தத்தை தானமாக அளிக்கும் பட்சத்தில், பல மடங்கு புண்ணியம் நம் குடும்பத்திற்கு சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு எந்த வாரம் உகந்த வாரமாக இருக்கின்றதோ, அந்த ஞாயிறு கிழமைகளில் அம்மனை இவ்வாறு வழிபாடு செய்யலாம். இந்த ஞாயிறு தான், வழிபட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. 5 வாரங்களில் வரும் கிழமைகளில் உங்களுக்கு எந்த வாரம் உகந்ததாக உள்ளதோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
- தேரை அலங்கரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
- கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது தேரோட்ட திருவிழா வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி தேருக்கு புதிய வண்ண அலங்கார திரைச்சீலைகள் இணைத்தல், தேரின் 4 சக்கரங்கள், குதிரைகள் உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி, தேர்கட்டை முட்டு தள்ளுதலுக்கு உரிய பிரேக் ஆகியவை புதுப்பித்து சரிபார்க்கும் பணிகள் மற்றும் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில், கோவில் துணை ஆணையர் ராமசாமி நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தியும், பணியாளர்களின் பணிகளையும் பார்வையிட்டார் அப்போது கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- ஆடி மாதம் அம்மனை வழிபட உகந்த மாதமாகும்.
- கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:-
சந்தன தைலம்- சுகம் தரும்
திருமஞ்சனம்- சம்பத்து நல்கும்
பாசிப்பயறு மாவு- மகிழ்ச்சியாய் வாழலாம்
அரிசி மாவு - உயர்பதவி அடையலாம்
நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்
வில்வப்பொடி - யோகம் அளிக்கும்
பஞ்சாமிர்தம் - கல்வி அறிவு பெருகும்
பால் - மனக்கவலை தீரும்
தயிர் - மனநோய் அகலும்
தண்ணீர்- சாந்தி உண்டாகும்
நெய் - தொழில் சிறக்கும்
தேன் - குரல் இனிமை பெறும்
வெல்லம் - துக்க நிவர்த்தி அளிக்கும்
கரும்புச்சாறு - மன அமைதிபெறும்
இளநீர் - பக்தி பெருகும்
எலுமிச்சம்பழம் - விதியை வெல்லலாம்
சாதம் - சகல பாக்கியம் உண்டாகும்
திருநீறு - துன்பம் நீங்கும்
சந்தனம் - நிலம் வீடு வாங்கலாம்
நல்லெண்ணெய் - ஐயம் நீங்கும்
பழவகை - திருவருள் பெறலாம்
வாழைப்பழம் - வறுமை ஒழியும்
கரும்புச் சர்க்கரை - குழந்தைபேறு கிட்டும்
எள் - சனி பயம் நீங்கும்
மாம்பழம்- வெற்றியை கொடுக்கும்
பூ மாலை- உடல் பிணி தீரும்
பரிவட்டம்- பெருஞ்செல்வம் பெருகும்
பச்சரிசி- தீராக்கடன் தீரும்
மஞ்சள் தூள் - விபத்துகள் தவிர்க்கலாம்
தேங்காய்- பொன்பொருள் சேரும்
பேரிச்சம்பழம்- கடல் கடந்து செல்லலாம்
கல்கண்டு- வாகனம் வாங்கலாம்.
முந்திரி- பிரிந்தவர் ஒன்று சேரலாம்
ஏலம்- தீமைகள் நீங்கும்
உலர் திராட்சை- சங்கடங்கள் தீரும்
எள்ளுமாவு- மரணபயம் நீங்கும்
எள்ளுருண்டை- அரசு வேலை பெறலாம்
எள்ளு சாதம் - பகை நீங்கும்
பன்னீர் - நன்னடத்தை உண்டாகும்
கும்ப ஜலம்- சாந்தி உண்டாகும்
- முத்துமாரியம்மன் தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
ஆடி வெள்ளி அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் குடும்ப தெய்வமான பூவாடைகாரியை பூஜித்து வழிபட்டால் குடும்பம் தழைக்கும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் கடந்த முதல் ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மன் கோவிலுக்கு பெண்கள் குடும்பத்துடன் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
2-வது ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
இந்நிலையில் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று, திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தில் உள்ள முத்துக்கண் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உலக மக்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டி முத்துக்கண் மாரியம்மனுக்கு 3.50 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் ரூ.500, ரூ.200, ரூ .50, ரூ20 மற்றும் ரூ10 என ஆகிய நோட்டுகள் இடம்பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்து முத்துமாரியம்மன் தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
- இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், புனித நீராடவும் அனுமதி இல்லை.
- நாளை அதிகாலை முதல் பக்தர்கள் வழக்கமான தரிசனம் செய்யவும், புனித நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டு ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்பாள் பலவிதமான வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 24-ந் தேதி திருக்கல்யாணம் மண்டபத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.
இதனிடையே திருக்கல்யாண நிகழ்ச்சியின் 15-வது நாளில் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவிலின் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏக சிம்மாசனத்தில் சாமி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியை தொடர்ந்து கோவில் யானை லட்சுமிக்கு தும்பிக்கை பகுதி முழுவதும் மஞ்சளால் பூசப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமியுடன் கோவில் ரதவீதியை சுற்றி வலம் வந்த யானை ராமலட்சுமியை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், செல்போனிலும் புகைப்படம் எடுத்தனர்.
திருவிழாவில் கடைசி நாளான இன்று(சனிக்கிழமை) சாமி, அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் கோவிலில் இருந்து கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. கோவிலில் இருந்து சாமி, அம்பாள் காலை 6 மணிக்கு எழுந்தருளிய பின்னர் கோவில் நடையானது சாத்தப்படுகின்றது.
அதன்படி இன்று இரவு வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் பக்தர்கள் ஸ்படிகலிங்க தரிசனம் முதல் வழக்கமான தரிசனம் செய்யவும், புனித நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.