search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நளினி"

    • மோடி மக்களின் நல்வாழ்வை நிராகரித்து பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்.
    • நளினியை நினைத்து வருந்துகிறேன் என்று பிரியங்கா என்னிடம் கூறினார்

    வயநாடு மக்களவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தங்கைக்கு ஆதரவாக அண்ணன் ராகுல் காந்தியும் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளார். தன்னை எம்.பி.ஆக்கி அழகு பார்த்த வயநாடு தொகுதியில் நேற்றைய தினம் பிரியங்காவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆனது முதல் பிரதமர் மோடிக்கு எதிரான அனல் பறக்கும் விமர்சனங்களை முன்வைத்து பாஜகவினரைக் கொந்தளிக்க வைத்த ராகுல் காந்தி நேற்றைய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை பற்றி அதிகம் பேசுவதைத் தவிர்த்துள்ளார்.

    அதற்கான காரணத்தையும் அவர் மேடையிலேயே தெரிவித்தார். முன்னதாக தனது உரையில் பிரதமர் மோடி மக்களின் நல்வாழ்வை நிராகரித்து பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று பிரியங்கா காந்தி விமர்சித்திருந்தார். இதன்பின் பேச வந்த ராகுல் காந்தி, இந்த கூட்டத்தில் என் முன் இரண்டு சாய்ஸ் இருக்கிறது. ஒன்று அரசியல் ரீதியாக பேசுவது மற்றொன்று குடும்ப உறுப்பினர்களான உங்களுடன்  சகஜமாகக் கலந்துரையாடுவது. நான் உங்களோடு பேசுவதை தேர்வு செய்கிறேன்.

     

    உங்களின் வேட்பாளரை [பிரியங்காவை] பற்றியே பேசுகிறேன். பிரதமர் மோடியை பற்றி பிரியங்கா ஏற்கனவே ஒருமுறை பேசிவிட்டார். எனவே அவரைப் பற்றி இரண்டாவது முறை இந்த மேடையில் பேச வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருக்கும் அவர் BORE அடித்துவிட்டதால் அதை தவிர்த்து விடலாம் என்று ராகுல் தெரிவித்தார்.

    அதன்பின் தன் தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினியை பிரியங்கா சிறையில் சந்தித்து பேசியதையும் ராகுல் குறிப்பிட்டார். நளினியை நினைத்து வருந்துகிறேன் என்று பிரியங்கா தன்னிடம் கூறியதாக ராகுல் தெரிவித்தார். நமது நாட்டுக்கு தற்போது இந்த மன்னிக்கும் மனப்பாங்குள்ள அரசியல் தான் தேவை என்றும் ராகுல் வலியுறுத்தினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.

    திருச்சி:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11-ந் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் இவர்கள் சிறப்பு முகாமில் காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தங்களை உடனடியாக சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் கால வரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில்

    'ராபர்ட் பயஸ் மயக்கமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக' கடந்த 2 நாட்களுக்கு முன் அவரை காணச் சென்ற வழக்கறிஞர் புகழேந்தி குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில் முருகன் மனைவி எஸ். நளினி தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உருக்கமான ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    நானும் எனது கணவர் முருகனும் கடந்த 11-11-2022 அன்று உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டோம். அதன் பின்னர் எனது கணவரை அவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைத்துவிட்டனர்.

    சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டது முதல் எனது கணவர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்.

    எனது கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தும் இதுவரை அவரை இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சிறையில் இருந்து எனது கணவர் விடுதலை ஆனாலும் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளார். சிறப்பு முகாமிற்குள் எனது கணவர் நடைபயிற்சி கூட செய்ய அனுமதிப்பதில்லை.

    எந்தவித விளையாட்டும் விளையாட அனுமதிப்பதில்லை. மேலும் எனது கணவர் மட்டும் மற்ற முகாம் வாசிகளை பார்க்கவோ, பேசவோ, முடியாத அளவில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    அவர் முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.

    இந்த சிறப்பு முகாமில் முறையான உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறப்பு முகாமில் இறந்துவிட்டார்.

    அவர் தனக்கு மாத்திரை வேண்டும் என்று கேட்ட போது உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கொடுக்கவில்லை. ஏற்கனவே இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி எனது கணவர் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.

    எனது கணவரை கடந்த 5-ம் தேதி நான் முகாமில் சந்தித்தபோது அவர் உடல் மெலிந்து 15 கிலோ எடை குறைந்து காணப்பட்டார்.

    எனது கணவர் இன்றுடன் 12 நாட்கள் உணவு உட்கொள்ளாத நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

    மேலும் தற்போது எனது கணவர் சிறப்பு முகாமில் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் அவருக்கு முகாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் அவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும் என அஞ்சுகிறேன் எனவே இந்த கடிதத்தை கருணையுடன் பரிசீலனை செய்து எனது கணவர் உயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி மனு
    • தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றது

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தன்னை விடுதலை செய்ய வேண்டுமென கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இதேபோல இந்த வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரனும் தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த இரு மனுக்களும், தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளால் முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஆபத்து நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • சுமார் 50 போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த போலி பாஸ்போர்ட், விசா மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    3 பிளாக்குகளை கொண்ட இந்த முகாமில் ஒரு பிரிவில் இந்த கைதிகள் இருக்கிறார்கள். அவர்கள் சொந்தமாக சமைத்து சாப்பிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கு முடிந்த பின்னர் அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இதற்கிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலையான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

    வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிளாக்கில் ஒரு பிரிவில் இவர்கள் 4 பேருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் உணவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.175 பணம் வழங்கப்படுகிறது. வெளியில் இருந்தும் அவர்கள் உணவை பெற்றுக்கொள்ளவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வழக்கிலிருந்து கோர்ட்டு விடுதலை செய்த பின்னரும் இங்கேயும் அடைக்கிறீர்களே என 4 பேரும் வேதனை தெரிவித்ததாக முகாம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் மற்ற வெளிநாட்டு கைதிகளுடன் பேசவோ, தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை.

    அதேபோல் மற்ற வெளிநாட்டு கைதிகளை போன்று ஒருவருக்கொருவர் பேச கூட அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளை போன்று தங்களை சுதந்திரமாக நடமாட விடவேண்டும், தனி அறையில் அடைத்து வைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரும் இன்று காலை சிற்றுண்டியை தவிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

    இதுபற்றி அறிந்த கலெக்டர் பிரதீப்குமார், வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முகாமுக்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் வெளியே வந்த கலெக்டர் மா.பிரதீப் குமார் சிறை வாசலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெளிநாட்டினருக்கு இங்கு வீடு மற்றும் நிரந்தர தங்குமிடம் எதுவும் இருக்காது. எனவே வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகி தண்டனையிலிருந்து விடுதலை பெற்றவர்களை மீண்டும் அவர்களின் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வரை திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைப்பது வழக்கம்.

    அதன்படியே சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களை சிறப்பு முகாமில் ஏற்கனவே உள்ள வெளிநாட்டவருடன் சேர்த்து தங்க வைக்காமல் பாதுகாப்பான இடத்தில் தனியாக தங்க வைக்கிறோம்.

    இந்த 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறார்களா அல்லது இங்கேயே இருக்கப்போகிறார்களா என்பதை முதலில் உறுதி செய்ய உள்ளோம்.

    இதில் முருகன் தவிர மற்ற 3 பேரும் (சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்) இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அவரவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல அந்த நாட்டின் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 4 பேரும் இன்று உண்ணாவிரதம் எதுவும் இருக்கவில்லை. அவர்கள் தாங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி செய்து தரவேண்டும் என்றனர். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    மற்ற சிறைவாசிகளுக்கு உள்ளதுபோல் இந்த 4 பேருக்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 29-ந்தேதி நைஜீரியா நாட்டை சேர்ந்த கைதி ஒருவர் முகாமில் இருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது வரை அவர் பிடிபடவில்லை.

    அதேவேளையில் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளால் முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஆபத்து நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 50 போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று ஜெயிலில் இருந்து விடுதலையான நளினி, கணவர் முருகனை சந்திப்பதற்காக காட்பாடியில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் நேராக முகாமுக்கு சென்று கணவரை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் வழக்கறிஞர்கள் உள்பட 7 பேர் உடனிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற நளினி, கலெக்டரிடம் தனது மகன் லண்டனில் வசிப்பதாகவும், அங்கு தனது கணவரையும் அழைத்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டார். அதற்கு கலெக்டர் பிரதீப் குமார், இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்குமாறு கூறினார்.

    • என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன். எனது மகளுடன் லண்டனில் தங்கவே விரும்புகிறோம்.
    • தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது விடுதலைப் புலிகள் தற்கொலைப்படையால் கொல்லப்பட்டார்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேர் நேற்று ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தனர்.

    வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து முதலில் நளினி வெளியே வந்தார். அங்கிருந்து காரில் ஆண்கள் ஜெயிலுக்கு காரில் வந்தார். பின்னர் ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகன், சாந்தன் இருவரும் வெளியே வந்தனர். முருகன் கையை பிடித்து நளினி கண்ணீர் மல்க வரவேற்றார்.

    முருகன், சாந்தன் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை போலீசார் திருச்சியில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

    நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார். உடன் அவரது தாய் மற்றும் சகோதரர் தங்கி உள்ளனர்.

    பின்னர் நளினி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    1991-ம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியான ராஜீவ் காந்தி மற்றும் போலீசார் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக மிகவும் வருந்துகிறேன், நாங்கள் அதை நினைத்து பல வருடங்கள் வருத்தப்பட்டோம்.

    ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் என்னைச் சந்திக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் என்னைப் பார்க்க வேண்டிய நேரம் கடந்து விட்டதாக நான் நினைக்கிறேன்.

    அவர்கள் தங்கள் அன்பானவர்களை இழந்துவிட்டனர். அந்த சோகத்திலிருந்து எந்த நேரத்திலும் வெளியே வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

    பிரியங்கா காந்தி என்னை சந்தித்து விட்டு சென்ற பிறகு அவர் பத்திரமாக செல்ல வேண்டும் என நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்.

    நரகம், சாக்கடை, புதைக்குழி, சுடுகாடு அப்படித்தான் சிறை வாழ்க்கையை நினைத்தேன். ஆனால் ஜெயில் ஒரு பெரிய பல்கலைக்கழகம். அங்கு நிறைய கற்றுக்கொண்டேன்.

    சிறையில் இருந்த போது முயற்சியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். வழக்கு நடந்த போதும் சிறையில் இருந்த போதும் இந்த வழக்குக்காக நான் ஒருபோதும் பயப்படவில்லை. ஏனென்றால் நான் தவறு செய்யவில்லை. நான் நானாக இருப்பேன். என்னை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக என்னை ஏற்றுக் கொள்வார்கள்.

    என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன். எனது மகளுடன் லண்டனில் தங்கவே விரும்புகிறோம்.

    தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. இந்த 10 மாத பரோல் எனக்கு பெரும் உதவியாக இருந்தது.

    ஜெயிலில் இருந்த போது ஆன்மீகம், யோகா போன்றவற்றில் அதிக நாட்டம் செலுத்தினேன். இந்த விடுதலையை ஒரு மிராக்கிளாகவே எனது கணவர் பார்க்கிறார்.

    இன்னும் தாமதம் ஆகும் என நினைத்திருந்த நிலையில் இந்த விடுதலை பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    பேரறிவாளனும் நானும் தொடர்ந்து சட்ட போராட்டத்தை நடத்திக்கொண்டே இருந்தோம். பேரறிவாளன் என்னென்ன செய்கிறார் என்பதை நானும் தொடர்ந்து அறிந்து வந்தேன்.

    7 பேர் விடுதலை என நினைத்திருந்த நேரத்தில் ஒருவர் மட்டும் விடுதலையான தகவல் வந்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது.

    கெங்கையம்மன் கோவிலுக்கு போக வேண்டும். தீமிதிக்க வேண்டும் எனது மகளுக்கு துலாபாரம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

    நீ என் மகாராணி நீ யாரிடமும் கையேந்த கூடாது நான் உன்னை பார்த்து கொள்வேன் என்று எனது கணவர் கூறியுள்ளார். அவர் உள்ளவரை எனக்கு கவலை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது.
    • உத்தரவு நகல் கிடைத்த நிலையில் நளினி இன்று விடுதலை ஆனார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1998ம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில், படிப்படியாக 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே, பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. 32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பேரறிவாளன் கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

    இதையடுத்து நளினி உள்பட மற்றவர்களும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு நேற்று விசாரணை நடந்து வந்தது. இதன் முடிவில், நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினம் ஆகியோர் அதிரடியாக உத்தரவிட்டனர்.

    பரோலில் உள்ள நளினிக்கு விடுதலை தொடர்பான உத்தரவு நகல் கிடைத்தது. பரோலில் இருந்த நளினியை சிறைக்கு அழைத்துச் சென்று, விடுதலைக்கான நடைமுறைகளை செயல்படுத்தியது சிறைத்துறை.

    இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து நளினி விடுதலை ஆனார். 31 ஆண்டுகள் கழித்து என் மகள் விடுதலையாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என நளினியின் தாயார் பத்மா தெரிவித்தார்.

    நளினியைத் தொடர்ந்து முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் சிறை நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை ஆகினர்.

    • இந்த கொடிய சம்பவம் அரங்கேறி, 31 ஆண்டுகள் கடந்து விட்டன.
    • ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது.

    அது, 1991-ம் ஆண்டு

    மே மாதம் 21-ந் தேதி இரவு 10.10 மணி.

    தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் இந்திய வரலாற்றின் கறுப்பு அத்தியாயம் ஒன்று பதிவாகப்போகிறது என்று யாரேனும் நினைத்துப்பார்த்தது இல்லை.

    அந்த நாளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது குண்டுவெடிப்பில் சிக்கி பலியானது, உலகையே உலுக்கி விட்டது.

    இந்த கொடிய சம்பவம் அரங்கேறி, 31 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றைய தலைமுறை வாசகர்களுக்காக அந்த கருப்பு அத்தியாயத்தின் பக்கங்களில் இருந்து சில துளிகளை தூசு தட்டித்தருகிறோம்.

    ராஜீவ் காந்தி மட்டும் அன்றைய நாளில் இந்த மண்ணில் மரணத்தைத் தழுவிவிடவில்லை. அவரோடு சேர்ந்து தர்மன் (போலீஸ்காரர்), சாந்தனி பேகம் (மகளிர் காங்கிரஸ் தலைவர்), ராஜகுரு (போலீஸ் இன்ஸ்பெக்டர்), சந்திரா (போலீஸ்காரர்), எட்வர்டு ஜோசப் (போலீஸ் இன்ஸ்பெக்டர்), கே.எஸ்.முகமது இக்பால் (போலீஸ் சூப்பிரண்டு), லதா கண்ணன் (மகளிர் காங்கிரஸ் தொண்டர்), கோகிலவாணி (லதா கண்ணனின் 10 வயது மகள்), டேரில் ஜூட் பீட்டர் (கூட்டத்துக்காக சென்றவர்), முனுசாமி (முன்னாள் எம்.எல்.சி), சரோஜா தேவி (கல்லூரி மாணவி), பிரதீப் குப்தா (ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி), எத்திராஜூ, முருகன் (போலீஸ்காரர்), ரவிச்சந்திரன் (கறுப்பு பூனை கமாண்டோ) என 15 பேர் (மொத்தம் 16 பேர்) உருக்குலைந்து போய் மரணத்தைத் தழுவியது வரலாற்று சோகம்.

    அப்போது மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அன்றைய பிரதமர் சந்திரசேகர் அரசு, மறு நாளிலேயே (22 மே 1991) ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. டி.ஆர்.கார்த்திக்கேயன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து துப்பு துலக்கப்பட்டது.

    ராஜீவ் கொலையை அரங்கேற்றிய சதிகாரி தாணு, ராஜீவ்காந்தியுடனும், மற்றவர்களுடனும், தான் நடத்திய குண்டுவெடிப்பில் பலியானார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கியவர்கள் ஒருவர் இருவரலல்ல, முருகன் என்ற ஸ்ரீஹரன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், பேரறிவாளன் உள்பட மொத்தம் 41 பேர். 15 பேர் விசாரணை காலத்திலேயே இறந்து விட்டனர்.

    எஞ்சிய 26 பேர் மீதான வழக்கை விசாரிக்க சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தடா கோர்ட்டு அமைக்கப்பட்டது. இந்த கோர்ட்டில்தான் 26 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து 1998-ம் ஆண்டு, ஜனவரி 28-ந் தேதி தடா கோர்ட்டு நீதிபதி நவனீதம் தீர்ப்பு அளித்தார்.

    இது இந்தியாவில் பெரும் புயலைக்கிளப்பியது.

    இந்த வழக்கின் விசாரணையானது, மூடப்பட்ட கோர்ட்டு அரங்குக்குள் நடத்தப்பட்டதற்கு எதிராக மனித உரிமை குழுக்கள் அப்போது போர்க்குரல் உயர்த்தின.

    தடா கோர்ட்டு தீர்ப்பை பொறுத்தமட்டில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியாது. தண்டனை பெற்றவர்கள் நேராக சுப்ரீம் கோர்ட்டில்தான் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும். அதுதான் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் நடந்தது.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.குவாத்ரி ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரித்தது. 1999-ம் ஆண்டு மே மாதம் 11-ந் தேதி இதில் தீர்ப்பு வந்தது.

    நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

    ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள், சுபா சுந்தரம், சண்முக வடிவேல், பாக்கியநாதன், பத்மா, கனகசபாபதி, விக்கி என்ற விக்னேஷ்வரன், ஆதிரை, சங்கர், சாந்தி, மகேஷ் என்ற சுசீந்திரன், தனசேகரன், விஜயானந்தன், சிவரூபன், ரங்கநாத், இரும்பொறை, விஜயன், ராஜசூர்யா என்ற ரங்கன், செல்வலட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் ஆவார்கள்.

    நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரும் தூக்கு கயிற்றில் இருந்து தப்பிப்பதற்காக இதுவரை யாரும் நடத்தியிராத அளவுக்கு நீண்டதொரு சட்டப்போராட்டம் நடத்தினர்.

    1999-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 8-ந் தேதி நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது தீர்ப்பு வந்தது.

    3 நீதிபதிகள் அமர்வில் 3 பேரும் தனித்தனி தீர்ப்பு அளித்தார்கள். நீதிபதிகள் வாத்வாவும், காதரியும் 4 பேரது மறு ஆய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். நீதிபதி தாமஸ், நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பரிந்துரைத்தார். ஆனாலும் 3 பேரில் 2 பேர் பெரும்பான்மை தீர்ப்பு உறுதியானது. 4 பேரின் தூக்கும் உறுதியானது.

    1999 நவம்பர் 5-ந் தேதி 4 பேரையும் தூக்கில் போட முதல்முறையாக ஏற்பாடு ஆனது. அதற்கான உத்தரவும் வேலூர் மத்திய சிறைக்கு சென்றது.

    ஆனால் 4 பேரும் கவர்னருக்கு கருணை மனு அனுப்பினர். அப்போதைய கவர்னர் பாத்திமா பீவி, அவர்களது கருணை மனுவை நிராகரித்தார். அதைத் தொடர்ந்து 4 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். இதனால் தூக்கு நிறுத்தப்பட்டது.

    மரண நிழலில் இருந்து சற்றே அவர்கள் அப்போது தப்பித்தனர்.

    மேலும் கவர்னர் தங்கள் கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 4 பேரும் முறையீடு செய்தனர். அதை நீதிபதி கே.கோவிந்தராஜன் விசாரித்து, மாநில அமைச்சரவையின் ஆலோசனையைப் பெறாமல் 4 பேரின் கருணை மனுவை கவர்னர் நிராகரித்தது செல்லாது என 1999 நவம்பர் 5-ந் தேதி தீர்ப்பு அளித்தார்.

    அதைத் தொடர்ந்து அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி விவாதித்து, நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது என பரிந்துரைக்கப்பட்டது. அதை ஏற்று 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி கவர்னர் பாத்திமா பீவி உத்தரவிட்டார்.

    இதனால் நளினியின் தலை, தூக்குக்கு தப்பியது.

    ஆனாலும் அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி அப்போது சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்காத நிலையில், அவரது மனுவை ஐகோர்ட்டு 2010 ஏப்ரல் 6-ந் தேதி தள்ளுபடி செய்தது.

    முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரது கருணை மனுவை ஜனாதிபதி பிரதிபா பட்டீல் நிராகரித்து விட்டார் என 2011 ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி தகவல் வெளியானது. இதையடுத்து மூவரும் 2011 செப்டம்பர் 9-ந் தேதி வேலூர் சிறையில் தூக்கில் போடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடு நடந்தது. ஆனால் மூவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்க, தூக்கில் போட 8 வாரங்களுக்கு தடை விதித்து நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணா அமர்வு உத்தரவு போட்டது.

    3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் 2011 ஆகஸ்டு 30-ந் தேதி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். 3 பேரும் தூக்கில் போடப்படுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி 2012 மே மாதம் 1-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதைத் தொடர்ந்து அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் அமர்வு விசாரித்து 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

    3 பேரும் 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 432, 433 தந்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவு எடுக்கலாம் எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் 3 நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி அதிரடியாக அறிவித்தார்.

    ஆனால் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரது விடுதலைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு சென்றது.

    அதை தலைமை நீதிபதி பி.சதாசிவம் அமர்வு ஏற்று 3 பேர் விடுதலைக்கு தடை விதித்து 2014 பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டது.

    3 பேரது மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனுவும் தாக்கல் செய்தது. நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்யவும் சுப்ரீம் கோர்ட்டு அடுத்த ஒரு வாரத்தில் (2014 பிப்ரவரி 27) உத்தரவிட்டது.

    3 பேரது மரண தண்டனையை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் மறுஆய்வு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அதைத் தள்ளுபடி செய்து 2014 ஏப்ரல் 1-ந் தேதி உத்தரவிட்டது. (அதைத் தொடர்ந்து மத்திய அரசு தாக்கல் செய்த நிவாரண மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடியானது.)

    7 பேரது விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்து அதே ஆண்டின் ஏப்ரல் 25-ந் தேதி உத்தரவிட்டது.

    அதில் ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதாக 3 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். ஆனால் நீதிபதிகள் லலித்தும், சப்ரேயும் மாநில அரசுக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது என தீர்ப்பு கூறினர். பெரும்பான்மை தீர்ப்புபடி, மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு 2015 டிசம்பர் 2-ந் தேதி வந்தது.

    7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசை தமிழக அரசு நாடியது. ஆனால் மத்திய அரசு மறுத்து விடவே, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.

    அதை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரித்து, இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க மத்திய அரசுக்கு 2018 ஜனவரி 23-ல் உத்தரவிட்டது.

    7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு 2018 செப்டம்பர் 6-ந் தேதி உத்தரவிட்டது.

    அதன்படி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை 2018 செப்டம்பர் 9-ல் கூடி, 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என முடிவு செய்தது.

    இதற்கு மத்தியில் 7 பேரின் விடுதலைக்கு எதிராக ராஜீவ் காந்தியுடன் பலியான 3 பேரது குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு 2019 மே 9-ந் தேதி தள்ளுபடி செய்தது.

    7 பேர் விடுதலையில் ஜனாதிபதிக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

    இது 7 பேர் விடுதலையில் சிக்கலாக மாறியது.

    இதற்கிடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்தது.

    அரசியல் சாசனம் பிரிவு 142 வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து கடந்த மே மாதம் 18-ந் தேதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு அளித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்து உத்தரவிடுமாறு நளினி, ரவிச்சந்திரன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தனர்.

    அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு, சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் இருவரும் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அமர்வு விசாரித்து நளினி, ரவிச்சந்திரன் மட்டுமல்லாது முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் என 6 பேரையும் விடுதலை செய்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பும், பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு பயன்படுத்திய அரசியல் சாசனம் பிரிவு 142-ஐ பயன்படுத்தித்தான் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என பார்க்கப்படுகிறது.

    அதுமட்டுமல்ல, 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைபட்டிருந்த 6 பேரை வெளியே கொண்டு வந்துள்ள சுதந்திர தீர்ப்பு!

    • பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது.
    • நளினி கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    புதுடெல்லி :

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தாயாரின் உடல்நிலை காரணமாக நளினிக்கு தமிழக அரசு பரோல் வழங்கியுள்ளது.

    இதற்கிடையே ராஜீவ் கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி ஐகோர்ட்டில் அவர் மனு செய்தார். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 'பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரம் ஐகோர்ட்டுக்கு இல்லை. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என தெரிவித்தது.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராகவும், அதற்கு தடை கோரியும் நளினி சார்பில் வக்கீல்கள் ஆனந்த்செல்வம், ஆனந்த் திலீப் லங்க்டே ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளேன். தனிமை சிறையில் அடைக்கப்பட்டு, கொடுமைகளையும், மன உளைச்சல், உடல் சுகவீனம் உள்ளிட்டவற்றையும் அனுபவித்துள்ளேன்.

    வழக்கு நிலுவையில் இருக்கும்போது பேரறிவாளனை ஜாமீனில் விடுவித்தது போல, தன்னையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும். அதன்பிறகு தனது மனுவை முழுவதுமாக விசாரித்து விடுதலை செய்ய வேண்டும். முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரைத்த தமிழக அரசின் பரிந்துரை பேரறிவாளனுக்கு மட்டும் பொருந்தாது. அனைவருக்கும் பொருந்தக்கூடியதே. எனவே அனைவருக்கும் விடுதலை பெறுவதற்கான உரிமை உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே விவகாரம் தொடர்பாக ரவிச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் மேல்முறையீடு செய்தது நினைவுகூரத்தக்கது.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
    • வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    அவரது தாயார் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக்கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் உள்ள நளினி தனது தாயார் பத்மாவுடன் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.

    தொடர்ச்சியாக 6 முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்று ஜெயிலுக்கு திரும்ப இருந்தார்.

    இந்நிலையில் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நளினியின் தாயார் பத்மா நளினிக்கு மேலும் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து நளினிக்கு 7-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    • ராஜீவ்காந்தியை கொலை செய்த குற்றம் மட்டுமல்லாமல், பிற சட்டப்பிரிவுகளின் கீழும் குற்றம் உள்ளதால் அவருக்கு தூக்குத் தண்டனை முதலில் விதிக்கப்பட்டது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் தெரிகிறது.
    • அதனால், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை ஜனாதிபதிக்கு தமிழ்நாடு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார்.

    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி அதை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்தார். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நளினி, கவர்னர் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தள்ளுபடி செய்து கடந்த 17-ந்தேதி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.

    அந்த தீர்ப்பில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்காத கருத்துக்கள் மட்டும் வாதங்களில் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த பகுதியை நீக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் உள்துறை இணை செயலாளர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ராஜீவ்காந்தியை கொலை செய்த குற்றம் மட்டுமல்லாமல், பிற சட்டப்பிரிவுகளின் கீழும் குற்றம் உள்ளதால் அவருக்கு தூக்குத் தண்டனை முதலில் விதிக்கப்பட்டது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் தெரிகிறது. அதனால், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை ஜனாதிபதிக்கு தமிழ்நாடு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். கவர்னரின் இந்த நடவடிக்கை சரியானது என்று அட்வகேட் தன் வாதத்தில் கூறியதாக தீர்ப்பில் உள்ளது. ஆனால் அட்வகேட் ஜெனரல் அப்படி எதுவும் கூறவில்லை.

    மேலும், அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து, கவர்னரோ அல்லது ஜனாதிபதியோ கையெழுத்திடவில்லை என்றால், நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று அட்வகேட் ஜெனரல் கூறியதாக தீர்ப்பில் உள்ளது. இந்த கருத்தையும் அட்வகேட் ஜெனரல் கூறவில்லை.

    எனவே, நளினி மனு மீதான தீர்ப்பை மாற்றி அமைக்க வேண்டும். அட்வகேட் ஜெனரல் கூறாத இந்த வாதத்தை தீர்ப்பில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக்கொள்ள பரோல் வழங்க வேண்டும் என நளினி கோரிக்கை வைத்தார்.
    • வருகிற 26.07.2022 வரை மேலும் 30 நாட்கள் நளினி பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    அவரது தாயார் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக்கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் உள்ள நளினி தனது தாயார் பத்மாவுடன் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.

    தொடர்ச்சியாக 5 முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில் நாளை ஜெயிலுக்கு திரும்ப இருந்தார். இந்நிலையில் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நளினியின் தாயார் பத்மா நளினிக்கு மேலும் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து நளினிக்கு 6-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 26.07.2022 வரை மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கையால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும்.
    • ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்கள் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க வேண்டும்.

    சேலம்:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மோடி அரசின் மேலும் ஒரு கொடுமையான திணிப்பு அக்னிபாத் திட்டம். பெற்ற சுதந்திரத்தை ஆயுதம் தாங்கிய ஆர்.எஸ்.எஸ்.சிடம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக குரலை நெறிக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் அறவழியில் போராட வேண்டும்.

    ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் போல் தொண்டர்களிடம் ஆயுதம் கொடுக்க முயற்சிக்கிறார் மோடி. காங்கிரஸ் பொதுத்துறையையும், தனியார் துறையையும் வளர்த்தது. ஆனால் பா.ஜ.க. பொதுத்துறையை அழித்துவிட்டு தனியார் துறையை வளர்க்கிறது.

    பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கையால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும். ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்கள் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசியது போன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் வருந்ததக்கது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை. பேரறிவாளன் செய்த குற்றத்தைவிட நளினி பெரிய குற்றம் செய்யவில்லை. கோவை சிறையிலிருக்கும் இஸ்லாமியர்களையும் விடுவிக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

    குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்வில் பா.ஜ.க. தங்கள் கொள்கையை முறையாக பின்பற்றியுள்ளனர். திரவுபதி என்ற பெயருக்காகவே அவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×