என் மலர்
நீங்கள் தேடியது "மாநகராட்சி"
- விருகம்பாக்கம் கால்வாயில் உள்ள பல பாலங்கள் நீரோட்டத்துக்கு தடையாக உள்ளன
- வெள்ள அபாயத்தை தடுக்க இந்த பாலங்களை சீரமைக்க வேண்டிய நிலை உள்ளது.
சென்னை:
சென்னையில் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக விருகம்பாக்கம் கால்வாயை, அமைந்தகரைக்கு அருகே கூவம் ஆற்றுடன் இணைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
விருகம்பாக்கம் கால்வாய் நெற்குன்றம் அருகே புவனேசுவரி நகரில் இருந்து உற்பத்தியாகி சின்மயாநகர், சாலிகிராமம், எம்.எம்.டி.ஏ. காலனி, சூளைமேடு, ஆசாத் நகர், திருவள்ளுவர் புரம் வழியாக மொத்தம் 6.36 கி.மீ தொலைவுக்கு செல்கிறது. இது சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலை அருகே கூவம் ஆற்றில் இணைகிறது. விருகம்பாக்கம் கால்வாயில் மழை காலங்களில் அதிகபட்சமாக 2.50 மீட்டர் உயரம் வரை தண்ணீர் செல்வதற்கான வசதி உள்ளது. அதாவது வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீரை விருகம்பாக்கம் கால்வாய் வழியாக அனுப்ப முடியும். தற்போது விருகம்பாக்கம் கால்வாயில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.
மேலும் இதன் உள்கட்டமைப்பும் மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த கால்வாயில் தண்ணீர் சரியாக செல்ல முடிவதில்லை. தற்போது 800 கனஅடி தண்ணீரே செல்லும் நிலை உள்ளது.
ஃபெஞ்ஜல் புயல் மழை காரணமாக சென்னையில் 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால், விருகம்பாக்கம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, விருகம்பாக்கம் போன்ற முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருகம்பாக்கம் கால்வாயில் உள்ள பல பாலங்கள் நீரோட்டத்துக்கு தடையாக உள்ளன. இந்த கால்வாயில் மொத்தம் 24 பாலங்கள் உள்ளன. இதில் 10 பாலங்கள் முக்கியமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. வெள்ள அபாயத்தை தடுக்க இந்த பாலங்களை சீரமைக்க வேண்டிய நிலை உள்ளது.
இதையடுத்து இந்த கால் வாயை சீரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக நீர்வளத்துறையிடம் இருந்து இந்த கால்வாயை சென்னை மாநகராட்சி கையகப்படுத்த உள்ளது. இதில் குறைவான உயரமுள்ள 11 பாலங்கள் இடிக்கப்பட உள்ளன.
சாய்நகர், 100 அடி சாலை, காமராஜர் நகர், திருவள்ளுவர் புரம் ஆகிய பகுதிகளில் உள்ள பாலங்கள் இடிக்கப்பட உள்ளன. புதிதாக அமைக்கப்படும் பாலங்கள் வழியாக குறைந்தபட்சம் 1,300 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு இந்த பாலங்கள் வலுவாக இருக்கும். நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, நெல்சன் மாணிக்கம் சாலை போன்ற வெள்ளம் அதிகம் உள்ள இடங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
மேலும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் விருகம்பாக்கம் கால்வாய், கூவம் ஆற்றுடன் இணைக்கப்பட உள்ளது. அமைந்தகரை பகுதியில் இந்த இணைப்பு அமைய உள்ளது. இதற்காக 2.5 கி.மீ தூரத்துக்கு வடிகால் அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக நெல்சன் மாணிக்கம் சாலையில் விருகம்பாக்கம் கால்வாயில் வெள்ளத்தின் பாதிப்பு தடுக்கப்படும்.
- விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அலுவலகம் வந்தார்.
- தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக ராமகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
நெல்லை மாநகராட்சியின் 6-வது மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் கடந்த 5-ந்தேதி புதிய மேயருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் வெற்றி சான்றிதழுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இன்று காலை நெல்லை மாநகராட்சியின் 7-வது மேயராக ராமகிருஷ்ணன் பதவி ஏற்பு நிகழ்ச்சி நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்காக மேயர் ராமகிருஷ்ணன் வழக்கமாக பயன்படுத்தும் தனது சைக்கிளில் டவுனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு வந்தார். வழியில் நெல்லையப்பர் கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அலுவலகம் வந்தார்.
அதன் பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் அவர் மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து மேயர் ராமகிருஷ்ணனின் தாயார் மரகதம்மாள் (வயது 95) அங்கி மற்றும் செங்கோலை தனது மகனுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, ராபர்ட் புரூஸ் எம்.பி., நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஆவுடையப்பன், அப்துல் வஹாப் எம்.எல்.ஏ, துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மேயர் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியில் இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருச்சி:
ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் தொகுதிகளுக்குட்பட்ட சில ஊராட்சிகளையும் லால்குடி, திருவெறும்பூர் தொகுதிகளுக்குட்ட சில ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியில் இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
- பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.
- 6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட சின்ன எலசகிரி அம்பேத்கர் காலனியில் 300 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இந்த பகுதியில் மாநகராட்சி குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு அதனை பயன்படுத்தியவர்களில், 27 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுவலி, வயிற்று போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மேலும் 24 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களில், 46 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையில் 4 பேர் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 51 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று இரவு, அந்த பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.
இதனால் அப்பகுதி பொது மக்களிடையே பீதியில் உள்ளனர்.
- சின்ன எலசகரி அம்பேத்கர் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரை குடித்த, 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் அருகே மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீரை குடித்த 15-க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சின்ன எலசகரி அம்பேத்கர் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள ஏரியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரை குடித்த, 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓசூர் சார் ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மேயர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும், குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் குடித்த சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம்...பதறிய மக்கள்..தொற்றிய பரபரப்பு https://t.co/QD6B9qHqYA#Hosur | #water
— Thanthi TV (@ThanthiTV) June 14, 2024
- பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
- மீண்டும் ஒரு சம்பவம் நடக்காதவாறு தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
அம்பத்தூர்:
அண்ணாநகர் மேற்கு, ஜீவன் பீமா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தங்கபாண்டி. இவரது மனைவி பிரதீபா. இவர்களது இரண்டரை வயது மகள் யாஸ்மிகா. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலையில் மின்தடை ஏற்பட்ட போது வீட்டின் முன்பு சிறுமி யாஸ்மிகா விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு சுற்றிய தெரு நாய் ஒன்று திடீரென யாஸ்மிகா மீது பாய்ந்து கடித்து குதறியது. அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டி யடித்து சிறுமியை மீட்டனர். நாய் கடித்து குதறியதில் யாஸ்மிகாவின் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட யாஸ்மிகாவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிறுமி யாஸ்மிகா வசித்த பகுதியில் சுற்றிய நாய்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தி.மு.க. வார்டு கவுன்சிலர் எம்.இ.சேகர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர்.
அவர்கள் பதுங்கி சுற்றிய 30-க்கும் மேற்பட்ட நாய்களை வலைவீசி பிடித்தனர். மேலும் பல தெருநாய்கள் தப்பி ஓட்டம் பிடித்தன. அந்த நாய்களையும் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து சிறுமி யாஸ்மிகாவின் தந்தை தங்க பாண்டியன் கூறும்போது, எனது மகளை நாய் கடித்த போது நீண்ட நேரம் போராடி தான் குழந்தையை மீட்டோம்.
நாய்கடித்தது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்த போது அவர்கள் சிறுமியை கடித்த நாயின் புகைப்படம் இருந்தால் தான் நாயை பிடிக்க முடியும் என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்தனர். பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதுபோன்று மீண்டும் ஒரு சம்பவம் நடக்காதவாறு தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
- 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்படுகிறது.
- வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், 2.96 லட்சம் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகளும் கையிருப்பில் உள்ளன
சென்னை:
சென்னையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை எதிர் கொள்ளும் வகையில் பீமனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செய்யபட்டுள்ள ஏற்பாடுகள், குடிநீர் வசதிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகருக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நகர்ப்புற நலவாாழ்வு மையங்கள், 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்படுகிறது.
மேலும் சுகாதாரப் பணி யாளர்கள் மூலம் 75 பொது இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் இன்று (திங்கட் கிழமை) முதல் வழங்கப்படுகிறது. கோடை வெயிலில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபப்படுகிறது. தேவையின் அடிப்படையில் கடற்கரை உள்ளிட்ட இடங்க ளில் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், 2.96 லட்சம் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகளும் கையிருப்பில் உள்ளன. எனவே அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் திறந்த இடங்களில் பணியாற்றுவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- டெல்லி தலித் மேயர் பதவியை பாஜக அனுமதிக்கவில்லை என கண்டித்து ஆம் ஆத்மி மாநகராட்சியில் போராட்டம் நடத்தியது
- மேயர் தேர்தல் ரத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர ஆலோசித்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.
டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். 10 எம்.பி.க்கள் (7 லோக்சபா மற்றும் 3ராஜ்யசபா) மற்றும் 14 எம்.எல்.ஏ.க்கள் (டெல்லி சட்டசபையில் உள்ள மொத்தமுள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் ஐந்தில் ஒரு பங்கு) மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
இதன் மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 274 ஆக உள்ளது. ஒரு வேட்பாளருக்கு மேயர் பதவிக்கு 138 வாக்குகள் தேவை .இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 134 கவுன்சிலர்களும் பாஜக வுக்கு 105 கவுன்சிலர்கள் உள்ளனர்.
ஆம் ஆத்மிக்கு 134 கவுன்சிலர்கள், 13 எம்எல்ஏக்கள் மற்றும் 3 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர் . இதில் 3 சுயேச்சை கவுன்சிலர்களில் ஒருவரின் ஆதரவு ஆம் ஆத்மிக்கு உள்ளது. இதனால் ஆம் ஆத்மிக்கு ஆதரவு 151 ஆக உயர்ந்தது.
மேலும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளருக்கு 9 காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆதரவும் கிடைக்க இருந்தது.ஆம் ஆத்மிக்கு மொத்த ஆதரவு 160 ஆக உயரும் சூழ்நிலையால் மேயர் தேர்தலில் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.
டெல்லி மேயர்,துணை மேயர் பதவிக்கான தேர்தல் இன்று 26- ந் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் மேயர் தேர்தலை கவர்னர் அலுவலகம் நேற்று ரத்து செய்தது. டெல்லி தலித் மேயர் பதவியை பாஜக அனுமதிக்கவில்லை என கண்டித்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் "தலித் விரோதி பாஜக" என்ற போஸ்டர்களை ஏந்தி கோஷமிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேயர் தேர்தல் ரத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.
- மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிருந்தா வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
- கழிவுநீர் ஓடை செல்ல தடையாக இருக்கும் கான்கிரீட் தளங்களையும் இடித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக எல்லை மாரியம்மன் கோவில் வரை உள்ள சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர்.
இதே போல் ஆர்.கே.வி. சாலையில் இருந்து மணிக்கூண்டு வரை இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் பன்னீர்செல்வம் பார்க் அருகில் உள்ள பிருந்தா வீதி, வேலா புக்ஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ஜவுளி கடைகள், பர்னிச்சர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.
இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் சாலையில் வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. இதையடுத்து இன்று மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிருந்தா வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
கச்சேரி வீதி, முத்துரங்கம் வீதி, சிவா சண்முகம் வீதி, அண்ணாச்சி வீதி, நேதாஜி வீதி, மணிக்கூண்டு, கொங்கலம்மன் கோவில் போன்ற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை இன்று ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் பாஸ்கர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
இதேபோல் கழிவுநீர் ஓடை செல்ல தடையாக இருக்கும் கான்கிரீட் தளங்களையும் இடித்து வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உடன் உள்ளனர். ஒருசில நாட்களுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை தூய்மை பணியாளர் மணிவேல் கண்டுடெடுத்தார்.
- மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் உள்ள சினிமா தியேட்டர் வளாகத்தில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர்.
அப்போது சூரமங்கலம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேஸ்திரி குமரேசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினர். அப்போது உழவர் சந்தை அருகில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது தனது குழந்தையின் கையில் இருந்த தங்க காப்பு கீழே விழுந்து விட்டதாகவும் தியேட்டரில் எங்கும் தேடி பார்த்து கிடைக்கவில்லை.
எனவே அங்கு வரும் குப்பையில் உள்ளதா? என்று பார்க்குமாறு கூறினார். இதனையடுத்து குப்பை எடுத்து செல்லப்பட்ட வண்டியை ஓரங்கட்டிய மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உடனடியாக வண்டியில் இருந்த குப்பைகளை தரம் பிரிக்க தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை தூய்மை பணியாளர் மணிவேல் கண்டுடெடுத்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு காணாமல் போன தங்க காப்பு கிடைத்துவிட்டதாக தகவல் தரப்பட்டது.
இதையடுத்து அவர்கள் நேரடியாக தியேட்டருக்கு வந்து தங்க காப்பை பெற்றுச் மகிழ்ச்சியுடன் சென்றனர். தியேட்டரில் தவறவிட்ட தங்க காப்பை குப்பைக்கு சென்ற போது மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
- 2023-2024-ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான காலம் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.
- மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நூதன உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் என்ற 4 மண்டலங்கள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.
இந்த வார்டுகளில் வசிக்கும் மக்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை சேவைக் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள், கடைகளின் வாடகை போன்ற வைகள் ஆண்டுதோறும் மார்ச் 31-ந்தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும்.
அந்த வகையில் 2023-2024-ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான காலம் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.
ஆனால் இதுவரை பலர் வரிகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த மாதத்திற்குள் வரியை வசூலிக்க ஆலோசிக்கப்பட்டது.
பெரும்பாலானோர் பணிக்கு செல்பவர்கள் வீடு திரும்ப நேரம் ஆகிவிடுவதால், அவர்கள் வரியை கொண்டுவந்து மையங்களில் செலுத்துவதற்கு நேரம் இல்லாமல் போய் விடுகிறது என்ற கருத்து எழுந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நூதன உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதன்படி அனைத்து மண்டலங்களிலும் உள்ள வரிவசூல் மையங்களும் கூடுதல் நேரம் செயல்பட அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக வரித்தொகைகளை செலுத்திட ஏதுவாக வருகிற 31-ந்தேதி வரை மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை விடுமுறையின்றி செயல்படும் என கமிஷனர் தெரிவித்தார்.
அதன்படி அனைத்து வரிவசூல் மையங்களும் நேற்று முதல் கூடுதல் நேரம் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு சில மையங்களில் நேற்று இரவு நேரத்திலும் பெரும்பா லானோர் தங்களது வரி களை செலுத்தினர். இதனை பயன்படுத்தி 2023-2024ம் ஆண்டிற்கான வரித் தொகைகளை உடனடியாக செலுத்தி உரிய ரசீது பெற்று கொள்ள கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.
- கடந்த ஒரு வாரமாக மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
- கே.என்.கே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாளில் அகற்றப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கடை வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகளில் வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலைகளில் பிற வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டு வாகன நெரிசலும் ஏற்பட்டு வந்தது.
மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகளால் பிரச்சனை நீடித்து வந்தது. இந்நிலையில் ஈரோடு கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், எஸ்.பி ஆகியோர் உத்தரவின் பேரில் கடந்த ஒரு வாரமாக மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
இதன் காரணமாக தற்போது சாலைகள் ஆக்கிரமிப்பின்றி விஸ்தாரமாக காட்சியளிக்கிறது. மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகளை தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், முக்கிய சாலைகள், கடைவீதி சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வாகன பார்க்கிங் வசதி செய்து தரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ஈரோடு வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரண்யா கூறியதாவது:-ஈரோடு மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகள் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் கே.என்.கே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாளில் அகற்றப்படும்.
முக்கியசாலைகள், கடைவீதிகளில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தி செல்வதாக புகார் வந்தது. அந்த இடங்களில் நோ பார்க்கிங் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு போக்குவரத்து விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க முக்கியமான சாலைகள், கடைவீதிகளில் 3 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.