என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தைவான்
- தைவானின் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் இன்று தெரிவித்தது.
- டிரோன்களும் அடங்கும் என்றும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் தைவானை சுற்றி சீனா போர் பயிற்சியை நடத்தியது.
இந்நிலையில் தைவானின் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் இன்று தெரிவித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 20 சீன விமானப்படை விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்தது என்றும் இதில் டிரோன்களும் அடங்கும் என்றும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஜாயின்ட் ஸ்வார்ட் எனும் தைவானுக்கெதிரான ஒரு ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டது
- தேவைப்பட்டால் தற்கொலை தாக்குதல் நடத்த தயார்
தீவு நாடான தைவானை தனக்கு சொந்தமானது எனக் கூறி வரும் சீனா தேவைப்பட்டால் ராணுவ ஆக்ரமிப்பு மூலம் அந்நாட்டை கைப்பற்ற போவதாக பலமுறை கூறியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் "ஜாயின்ட் ஸ்வார்ட்" (Joint Sword) எனும் தைவானுக்கெதிரான ஒரு ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டது.
கடந்த மாதம், தைவானுக்கு அமெரிக்கா ரூ.2800 கோடி ($345 மில்லியன்) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்கியது. ஆனால், இதற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்தது.
இந்நிலையில் சீன ராணுவத்தின் 96-வது ஆண்டு விழாவை குறிக்கும் விதமாக சீனா ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் போருக்கு தயாரான நிலையில் ராணுவம் இருப்பதுபோல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் சீன வீரர்கள் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக உறுதி எடுத்து கொள்கின்றனர்.
தைவான் நாட்டை எதிர்க்க சீனா ராணுவத்தில் உள்ள கிழக்கு பகுதி அமைப்பை சேர்ந்த ஒரு சீன ராணுவ விமானப்படை பைலட் உறுதிபட கூறியிருப்பது தெரிகிறது. அவர் தேவைப்பட்டால் தற்கொலை தாக்குதல் நடத்த தயார் என கூறுகிறார். தங்களின் உடலையும் உயிரையும் தியாகம் செய்ய தயார் என நீருக்கடியில் மூழ்கி ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் "ஃப்ராக் மேன்" படை வீரர் ஒருவர் கூறுகிறார்.
ஜாயின்ட் ஸ்வார்ட் பயிற்சி சம்பந்தமான காட்சிகளும், ராணுத்தின் பல அமைப்பின் வீரர்களின் கதைகளும், ராணுவ பயிற்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இது தைவான் நாட்டிற்கு சீனா விடும் எச்சரிக்கைபோல் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சேஸிங் ட்ரீம்ஸ் என இந்த ஆவணப்படத்திற்கு சீனா பெயரிட்டுள்ளது.
தைவானை அச்சுறுத்தும் விதமாக தைவான் ஜலசந்தி பகுதியில் சீன ராணுவம் வான்வழி ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- தைவானை, சீனா தனது தேசத்தின் ஒரு பகுதியாக அறிவித்தது
- அமெரிக்க அதிபரின் டிராடவுன் அதாரிட்டி எனும் உத்தரவின் மூலம் அமெரிக்கா இதனை வழங்குகிறது
கிழக்காசிய ஜனநாயக நாடான தைவானை, சீனா தனது தேசத்தின் ஒரு பகுதியாக அறிவித்தது. ஆனால், தைவான் இதனை ஏற்க மறுத்து வருகிறது.
தேவைப்பட்டால் ராணுவ ஆக்ரமிப்பு மூலம் தைவானை கைப்பற்ற போவதாகவும் சீனா கூறி வருகிறது.
கடந்த ஆண்டு, சீன இராணுவம் தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் 2 பெரிய ராணுவ பயிற்சிகளை நடத்தியது. இந்த பயிற்சிகளில் தைவான் தீவின் முற்றுகையும் நடைபெற்றது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில் சீனாவிலிருந்து வரக்கூடிய தாக்குதல்களை எதிர்கொள்ளவும், தற்காப்பு திறனை மேம்படுத்தி கொள்ளவும், தைவானுக்கு அமெரிக்கா சுமார் ரூ.2800 கோடி ($345 மில்லியன்) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க போகிறது.
இந்த தொகுப்பில், உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு கருவிகளும், சிறிய ஆயுத வெடிமருந்துகளும் அடங்கும்.
"இதன் மூலம் தற்காலத்திலும், எதிர்காலத்திலும் தன் நாட்டிற்கெதிரான ராணுவ நடவடிக்கைகளை தைவான் தடுக்க முடியும்", என அமெரிக்க ராணுவ அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
ரஷியாவிற்கெதிராக போரிடும் உக்ரைனுக்கு வழங்கியது போலவே, அவசரகால உதவியாக ராணுவ தளவாடங்களை உடனடியாக ராணுவ அமைச்சகம் மூலம் வழங்கும் அமெரிக்க அதிபரின் டிராடவுன் அதாரிட்டி (drawdown authority) எனும் உத்தரவின் மூலம் அமெரிக்கா இதனை வழங்குகிறது. மேலும் இந்த தளவாடங்கள், அமெரிக்காவின் சொந்த இருப்புகளிலிருந்து வழங்கப்படுகின்றன.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, "தைவான் ஜலசந்தியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் தற்போதைய நிலையை நிலைநிறுத்துவதற்காக, அமெரிக்காவுடன் பாதுகாப்பு விஷயங்களில் தைவான் நெருக்கமாக ஒத்துழைக்கும்" என தைவான் அறிவித்துள்ளது
- ஒரு குளவி அவரை கொட்டியதில் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது.
- "சுதந்திரத்தை தேடி" நீந்தி வந்ததாக அதிகாரிகளிடம் அவர் கூறினார்.
கட்டுப்பாடுகள் நிறைந்த சீனாவில் வாழ பிடிக்காமல் கிழக்கு ஆசியாவில் உள்ள தைவான் நாட்டிற்குள் சட்ட விரோதமாக புகலிடம் தேடி ஒரு சிலர் நீந்தியே செல்வது அவ்வப்போது நடைபெறும்.
2019ல் இரு சீனர்கள் தைவானின் கின்மென் கவுன்டி பகுதியை அடைய நீந்தி சென்றபோது சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டனர். 2020ல் 7 மணி நேரம் நீந்தியே தைவானின் கின்மென் கவுன்டி பகுதியை அடைந்த 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதே போன்று 4 தினங்களுக்கு முன், சீனாவின் புஜியான் மாகாணத்தில் இருந்து தைவானின் மட்சு தீவுகளுக்கு 40 வயது சீனர் ஒருவர், கிட்டத்தட்ட 10 மணிநேரம் நீந்தி சென்று புகலிடம் அடைந்துள்ளார். இந்த பிரயாணத்திற்காக அவர் உணவு, ஆடை, மருந்து மற்றும் சீன கரன்சி ஆகியவற்றை கையோடு எடுத்து சென்றிருக்கிறார்.
மட்சு தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான பெய்கன் தீவில் உள்ள பெய்கன் டவுன்ஷிப் பகுதியில் நுழைந்தார். வெற்றிகரமாக நீந்தி அங்கு நுழைந்தவர் அங்கேயே அரசுக்கு தெரியாமல் வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் அவருக்கு சோதனை குளவி வடிவத்தில் வந்தது. ஒரு குளவி அவரை கொட்டியதில் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது.
இதனால் மட்சு தீவுகளில் சுற்றுலா பயணிகளிடம் உதவி கோரினார். சுற்றுலா பயணிகள் உடனே உள்ளூர் அதிகாரிகளுக்கு இவரை குறித்து தகவல் தெரிவித்தனர்.
சீனாவின் ஃப்யூஜியான் மாகாணத்தில் உள்ள ஹுவாங் கி தீபகற்பத்தில் இருந்து தைவானின் மட்சு தீவுகளுக்கு "சுதந்திரத்தை தேடி" நீந்தி வந்ததாக அதிகாரிகளிடம் அவர் கூறினார்.
அதிகாரிகள் விரைந்து வந்து அவரிடம் தகவல்களை கேட்டறிந்தனர். அப்போது அவர் சட்டவிரோதமாக குடியேறியவர் என்பது உறுதியானது.
இதனையடுத்து அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்ட அவரை பெய்கன் சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
ஹுவாங்கி தீபகற்பத்திற்கும் பெய்கன் தீவிற்கும் இடையிலான தூரம் சுமார் 12 கி.மீ. சீனாவின் கடற்கரை பகுதியிலிருந்து தைவான் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தைவான் பகுதிக்கும், மெயின்லேண்ட் பகுதிக்கும் இடையேயான சட்டத்தின்படி விசாரணைக்காக லியன்சியாங் மாவட்ட அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சமீபத்திய சில ஆண்டுகளாக தைவானை சுற்றி தனது ராணுவ நடவடிக்கைகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த இரண்டு நாட்களாக தைவான் எல்லையில் அத்துமீறிய சீன விமானங்கள்
- தைவானின் அரசியல் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்துள்ள சீனா இவ்வாறு நடந்து கொள்கிறது
சீனாவின் போர் விமானங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு தைவானின் வான் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக, சுயாட்சி செய்து வரும் தீவு நாடான தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கப்பல்கள் உள்ளிட்ட போர் விமானக்குழுவை அனுப்பி அச்சுறுத்தியுள்ளது.
சீன ராணுவம் 38 போர் விமானங்களையும், 9 கடற்படைக் கப்பல்களையும் தைவானைச் சுற்றி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அனுப்பியுள்ளது.
புதன்கிழமை காலை முதல் மதியம் வரை, சீன ராணுவம் மேலும் 30 விமானங்களை பறக்கவிட்டிருக்கிறது. அவற்றில் ஜே-10 மற்றும் ஜே-16 போர் விமானங்களும் அடங்கும். இவற்றில் 32 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் (தீவுக்கும் பிரதான நிலப்பகுதிக்கும் இடையில் ஒரு இடைப்பகுதியாக கருதப்படும் அதிகாரப்பூர்வமற்ற எல்லை) நடுப்பகுதியைக் கடந்து பறந்தது. பின்னர், மேலும் 23 விமானங்கள் நடுக்கோட்டைக் கடந்தன.
தைவான் நாட்டு ராணுவம், படையெடுப்புகளுக்கு எதிராக தன்னை காப்பதற்கான தயார்நிலை பயிற்சிகளை மேற்கொள்ளும் வருடாந்திர ஹான் குவாங் (Han Guang) பயிற்சியில் ஈடுபடவிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் தைவானில் பொதுமக்கள் வான்வழி போர் தாக்குதல்களின் போது பாதுகாப்பாக வெளியேறவும், இயற்கை பேரழிவுகளின் போது தங்களை காத்து கொள்ளவும், "வான்'ஆன்" (Wan'an) பயிற்சிகள் எனும் வழிமுறைகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுவார்கள். வரும் வாரங்களில் தைவானில் இது நடக்க இருக்கிறது. இந்த பின்னணியில், சீனாவின் அத்துமீறல் நடந்திருக்கிறது.
தைவானுக்கு முழு உரிமை கொண்டாடி வரும் சீனா, சமீபத்திய ஆண்டுகளில், தைவானின் அரசியல் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்திருக்கிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக தைவானை நோக்கி அனுப்பும் ராணுவ விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம், கடற்படை கப்பல்களையும், டிரோன்களையும் தைவானுக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு சீனா அனுப்பி வைத்தது.
நேற்றைய மற்றும் இன்றைய ராணுவ வெளிக்காட்டுதல்களில் சீனா, தனது H-6 ரக குண்டுவீச்சு விமானங்களை தைவானின் தெற்கே தீவைக் கடந்து, பின் சீனாவின் தெற்கு கடற்கரையை நோக்கி திருப்பியது.
முன்னாள் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையை தொடர்ந்து கடந்த ஆகஸ்டில் சமீபத்திய ஆண்டுகளில் நடந்திராத மிகப்பெரிய ராணுவப் பயிற்சிகள், சீனாவால் மேற்கொள்ளப்பட்டன.
இதில் தைவான் தீவின் மீது சீனா ஏவுகணைகளை செலுத்தியது. சீனாவின் ராணுவ பயிற்சிகளால், தைவான் ஜலசந்தியின் வர்த்தக பாதைகள் சீர்குலைந்து, விமானங்கள் தங்கள் வான்பாதையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியது.
ஏப்ரல் மாதம், தைவான் ஜனாதிபதி, ட்ஸாய் இங்-வென் உடன் தற்போதைய அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியின் சந்திப்பின் எதிரொலியாக தைவானை சுற்றியுள்ள ஆகாய மற்றும் கடல் பகுதிகளில் பெரிய அளவிலான போர் தயார்நிலை பயிற்சிகளையும் சீன ராணுவம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
- தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
- சீனா தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகிறது,
சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. 2-ம் உலக போரின் போது சீனாவில் இருந்து தைவான் தனியாக பிரிந்து ஆட்சி அமைத்தது. ஆனால் தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
மற்ற நாடுகளுடன் தைவான் வைத்திருக்கும் நட்புறவையும் சீனா கண்டித்து வருகிறது.
மேலும் தைவானை சுற்றி தனது ராணுவத்தினரை குவித்து சீனா போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் தைவான் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சீனா தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகிறது,
இந்நிலையில் நேற்று சீனாவின் ஜே-10, ஜே-11, ஜே-16 உள்ளிட்ட ரக விமானங்கள் மற்றும் குண்டு வீசும் விமானங்கள் உள்பட 24 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்து மீறி பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. சீன விமானங்களை தைவான் தனது போர் கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள் மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
- 71 சீன விமானங்கள், 9 கப்பல்கள் தைவானை சுற்றி வளைத்து இன்று போர் பயிற்சியில் ஈடுபட்டன.
- இன்று 2-வது நாளாக சீனா போர் பயிற்சியை தொடர்ந்துள்ளது.
தைபே:
தைவான் அதிபர் சாய் இங் வென் சமீபத்தில் தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தைபேவுக்கு வரும் வழியில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார்.
இந்தப் பயணத்தின் போது தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, இந்தச் சந்திப்பு நடைபெறக் கூடாது என இருதரப்பையும் எச்சரித்தது.
சீனாவின் எச்சரிக்கையையும் மீறி கடந்த சில தினங்களுக்கு முன், தைவான் அதிபர் சாய் இங் வென்னை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்தித்துப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, தைவானைச் சுற்றிவளைத்து போர் பயிற்சியை தொடங்கியது.
தைவானைச் சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் கடும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன என சீன ராணுவமும் தெரிவித்தது.
இந்தப் போர் பயிற்சியானது இன்றும் தொடர்ந்தது. இதன்படி, இன்று காலை 6 மணியளவில் தைவானைச் சுற்றி 71 சீன விமானங்கள், 9 கப்பல்கள் வட்டமிட்டன. இதனால் தைவானைச் சுற்றி இன்று 2-வது நாளாக சீனா போர் பயிற்சியை தொடர்ந்துள்ளது என்பது தெளிவானது. இவற்றில் 45 விமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், ஜே-11, ஜே-10, ஜே-16, ஒய்-8 ஏ.எஸ்.டபிள்யூ., ஒய்-20, கே.ஜே.-500 உள்ளிட்ட விமானங்களும் அடங்கும். அவை தைவான் ஜலசந்தியின் மையப்பகுதிக்குள் நுழைந்து தென்மேற்கு நகருக்குள் சென்றது என தைவான் அமைச்சகம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், தைவான் எங்களது தாய்வீடு. இந்த நிலத்தின் ஒவ்வொரு கதையும் எங்களது நினைவுகளில் பதிந்துள்ளது. எங்களது தாய்நாட்டை மற்றும் எங்களது வீட்டைப் பாதுகாக்க முழு மனதோடு, நாங்கள் போராடி வருகிறோம் என தெரிவித்துள்ளது.
- சீனாவின் ஒரு நீர்மூழ்கி எதிர்ப்பு ஹெலிகாப்டர், 3 போர்க்கப்பல்கள் தைவானில் உள்ள ஒரு தீவை சுற்றி கண்டறியப்பட்டது.
- சீனாவின் இந்த அத்துமீறலை தைவான் அரசு கண்டித்துள்ளது.
சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது. தைவான் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவானுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. இதனால் தைவானை அச்சுறுத்த சீனா தொடர்ந்து போர் பயிற்சிகளை எல்லையில் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சீனாவின் ஒரு நீர்மூழ்கி எதிர்ப்பு ஹெலிகாப்டர், 3 போர்க்கப்பல்கள் தைவானில் உள்ள ஒரு தீவை சுற்றி கண்டறியப்பட்டதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்சில் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை தைவான் அதிபர் சாய் இங்-வென் சந்தித்த பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த அத்துமீறலை தைவான் அரசு கண்டித்துள்ளது. மேலும் ஆயுதப்படைகள் நிலைமையை தீவிரமாக கண்காணிப்பதாகவும் விமானங்கள் கடற்படை கப்பல்கள் ரோந்து சுற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
- உக்ரைன் வீரர்கள் பயன்படுத்தி வரும் அமெரிக்க மாடலைப் போன்று இந்த ஆளில்லா விமானம் உள்ளது.
- தைவான் தனது அடுத்த தலைமுறை தற்கொலை தாக்குதல் ட்ரோன்களையும் உருவாக்கி வருகிறது
தைவானை மீண்டும் தன்வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் சீனா, ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது. அவ்வப்போது போர் விமானங்களை அனுப்பி தைவானை பதற்றமடைய வைக்கிறது. தைவானைச் சுற்றி போர் ஒத்திகையை மேற்கொள்கிறது. சீனா போர் தொடுத்தால் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தைவான் கூறி உள்ளது.
சீனாவின் ராணுவ அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், தைவான் முதல் போர்ட்டபிள் ட்ரோனை (ஆளில்லா விமானம்) இன்று அறிமுகம் செய்து சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. ரஷியாவுக்கு எதிரான சண்டையில் உக்ரைன் வீரர்கள் பயன்படுத்தி வரும் அமெரிக்க மாடலைப் போன்று (ஸ்விட்ச்பிளேடு 300) இந்த ஆளில்லா விமானம் உள்ளது. இந்த ஆளில்லா விமானம் மூலம் எதிரிகளின் இலக்கை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடியும்.
தைவானில் தயாரிக்கப்பட்ட, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த ட்ரோன், ஒரு பையில் எடுத்துச் செல்லும் அளவுக்கு சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 நிமிடங்கள் வரை வானத்தில் பறக்க முடியும் என தைவான் ராணுவத்தின் நேஷனல் சுங்-ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் கூறியிருக்கிறது.
தங்கள் நாட்டின் கடற்கரைக்கு அருகில் உள்ள இலக்குகளைத் தாக்குவதில் இது பயனுள்ளதாக இருக்கும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன தலைவர் சி லி பின் கூறினார். மேலும், தைவான் தனது அடுத்த தலைமுறை தற்கொலை தாக்குதல் ட்ரோன்களையும் உருவாக்கி வருவதாகவும், நீண்ட தூர தாக்குதல்களில் பயன்படுத்தக்கூடிய பெரிய ட்ரோன்களும் இதில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- பொதுவாகவே சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் நாம் தான் பணம் செலவழிப்போம்.
- தைவானில் சற்று வித்தியாசமாக சுற்றுலா வரும் பயணிகளுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளது.
தைவான்:
பிரபலமான சுற்றுலாத்தலம் ஒன்று சுற்றுலாப்பயணிகளுக்கு 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெகுமதிகளை வழங்க உள்ளது. பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது...
பொதுவாகவே சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் நாம் தான் பணம் செலவழிப்போம்... ஆனால் சற்று வித்தியாசமாக சுற்றுலா வரும் பயணிகளுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளது.
சுற்றுலாப்பயணிகளைக் கவரும் விதமாக தைவான் சுமார் 5 லட்சம் பேருக்கு பணம் அல்லது தள்ளுபடி ஊக்கத் தொகையை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் 60 லட்சம் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க இலக்கு வைத்துள்ள தைவான், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை இருமடங்காக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, 5 லட்சம் சுற்றுலாப்பயணிக்கு 13 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்கமும், 90 ஆயிரம் சுற்றுலா குழுக்களுக்கு 54 ஆயிரம் ரூபாயும் தைவான் அரசு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிளியின் உரிமையாளரான ஹூவாங்கிற்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் (74 லட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
- தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக ஹூவாங் தெரிவித்தார்.
தைவானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் தனது வீட்டில் செல்லமாக கிளி ஒன்றை வளர்த்து வந்தார். அந்த கிளி 40 சென்டி மீட்டர் உயரம், 60 சென்டி மீட்டர் இறக்கையுடன் பெரிய அளவில் காணப்பட்டது.
ஹூவாங் சம்பவத்தன்று அந்த கிளியை அப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அப்பகுதியை சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் லின் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென ஹவாங்கின் கிளியானது டாக்டர் லின் மீது பறந்து சென்று அவரது முதுகில் அமர்ந்து இறக்கையை பலமுறை அசைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் லின் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தில் டாக்டரின் இடுப்பு எலும்பும் முறிந்து விழுந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் தங்கி ஒரு வாரம் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் காயம் முழுமையாக குணமடைய 3 மாதங்கள் ஆகியுள்ளது.
இந்த சம்பவத்தால் டாக்டர் லின்னால் தொடர்ந்து 6 மாதங்கள் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனால் வருமான ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட டாக்டர் லின் உரிய நிவாரணம் கேட்டு தைனான் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னால் தற்போது நடக்க முடிகிறது. ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் போது நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என டாக்டர் லின்னின் வழக்கறிஞர் வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிளியின் உரிமையாளரான ஹூவாங்கிற்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் (74 லட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக ஹூவாங் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் தைனான் மாவட்ட நீதிமன்றம் காணாத அறியதொரு வழக்கு என்று கூறப்படுகிறது.
- ஒரு வருட கட்டாய ராணுவ சேவை 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்.
- தைவானில் ஆண்கள் 4 மாதங்களுக்கு ராணுவத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும்.
தைவானை சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
சமீபத்தில் தைவானை நோக்கி போர் விமானங்களை சீனா அனுப்பியதால் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தநிலையில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் தைவான் தனது ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தைவானில் ராணுவத்தில் கட்டாய பணியாற்றும் காலம் ஒரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தைவானில் ஆண்கள் 4 மாதங்களுக்கு ராணுவத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என்ற சட்டம் உள்ளது. தற்போது இந்த கட்டாய ராணுவ சேவை ஒரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருட கட்டாய ராணுவ சேவை 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் 2005-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த ஆண்களுக்கு இது பொருந்தும் என்றும் தைவான் அதிபர் சாய் இங்வென் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்