search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    டுவிட்டர் தலைவராக எலான் மஸ்க் நீடிக்க வேண்டுமா? பயனர்கள் அளித்த ஓபன் பதில்!
    X

    டுவிட்டர் தலைவராக எலான் மஸ்க் நீடிக்க வேண்டுமா? பயனர்கள் அளித்த ஓபன் பதில்!

    • டுவிட்டர் பயனர்களிடம், தான் அந்நிறுவன தலைவர் பதவியில் தொடர வேண்டுமா எனும் கேள்வியை எலான் மஸ்க் கருத்துக் கணிப்பாக கேட்டிருந்தார்.
    • 12 மணி நேரங்கள் நீடித்த கருத்துக் கணிப்பு இந்திய நேரப்படி நேற்று மாலை 4.50 மணிக்கு நிறைவு பெற்றது.

    டுவிட்டர் பயன்படுத்தி வருவோரிடம், தான் டுவிட்டர் தலைவராக பொறுப்பில் தொடர வேண்டுமா எனும் கேள்வியை எலான் மஸ்க் கருத்துக் கணிப்பாக கேட்டிருந்தார். சுமார் 1.7 கோடி பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு பதில் அளித்துள்ளனர். இதில் கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என தெரிவித்து இருக்கின்றனர். மீதமுள்ள 42 சதவீதம் பேர் எலான் மஸ்க் டுவிட்டர் தலைவராக தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும் என பதில் அளித்துள்ளனர்.

    திங்கள் கிழமை அன்று கருத்துக் கணிப்பை துவங்கிய எலான் மஸ்க், 12 மணி நேரங்கள் லைவில் வைத்திருந்தார். இதில் 57.5 சதவீத டுவிட்டர் பயனர்கள், எலான் மஸ்க் டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பதில் அளித்துள்ளனர். அக்டோபர் மாதத்தில் டுவிட்டர் நிறுவன தலைவராக எலான் மஸ்க் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதில் இருந்து, டுவிட்டர் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் எலான் மஸ்க் ஈடுபட்டு வந்தார்.

    இதோடு டுவிட்டர் நிறுவன விதிகளில் பெருமளவு மாற்றங்களை செய்தார். டுவிட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து மாற்றங்கள் குறித்து பயனர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். இந்த தகவலை தொடர்ந்து இது போன்ற வழிமுறையை இதுவரை அமலுக்கு கொண்டு வராதததற்கு மன்னிப்பு கோரி இருந்தார். டுவிட்டர் தலைவர் பதவியில் நீடிப்பது குறித்த கருத்துக் கணிப்பு அடங்கிய பதிவில், எலான் மஸ்க் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

    தற்போது டெஸ்லா இன்க், ஸ்பேஸ் எக்ஸ், தி போரிங் கம்பெனி, நியூராலின்க், மஸ்க் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றுவதில் விருப்பம் இல்லை என ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    Next Story
    ×