search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    வாட்ஸ்அப் நிறுவனம் மைக்ரோபோனை பயன்படுத்திய விவகாரம் - இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது - மத்திய மந்திரி கண்டனம்!
    X

    வாட்ஸ்அப் நிறுவனம் மைக்ரோபோனை பயன்படுத்திய விவகாரம் - இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது - மத்திய மந்திரி கண்டனம்!

    • இந்த விவகாரம் தொடர்பாக ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் ஆதாரமாக வெளியிட்டிருந்தார்.
    • இதைத் தொடர்ந்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க், 'யாரையும் நம்பாதீர்கள்' என்று டுவிட் செய்திருந்தார்.

    வாட்ஸ்அப் செயலி பயனர்களின் ஸ்மார்ட்போன் மைக்ரோபோனினை இயக்கியதாக எழுந்த சர்ச்சையில் அரசு விசாரணை நடத்தும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பயனர் தனியுரிமை விவகாரத்தில் இதுபோன்ற செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார். தனியுரிமை மீறப்பட்ட விவகாரத்தை அரசு முழுமையாக ஆய்வு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

    "தனியுரிமை விவகாரத்தில் இது ஏற்றுக் கொள்ள முடியாத விதிமீறல் ஆகும். டிஜிட்டல் தனியுரிமை தரவு பாதுகாப்பு மசோதா தயாரிக்கப்பட்டு வரும் போதிலும், இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து ஆய்வு செய்து விதிமீறல் உறுதியாகும்பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம்," என்று மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் டுவிட்டர் பிதிவில் தெரிவித்து இருக்கிறார்.

    முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் பயனர் அனுமதியின்றி அவர்களது ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை இயக்கியதாக டுவிட்டர் பொறியாளர் ஒருத்தர் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் ஆதாரமாக வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க், 'யாரையும் நம்பாதீர்கள்' என்று டுவிட் செய்திருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளித்த வாட்ஸ்அப், "பிக்சல் போன் மற்றும் வாட்ஸ்அப் இடையே குறைபாடு இருப்பதை சுட்டிக் காட்டி குற்றச்சாட்டு தெரிவித்த டுவிட்டர் பொறியாளருடன் கடந்த 24 மணி நேரமாக பேசி வருகிறோம். இது ஆண்ட்ராய்டு பிழையாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கூகுளை கேட்டுக் கொண்டிருக்கிறோம்," என்று தெரிவித்தது.

    இது தொடர்பாக தொடர்ந்து விளக்கம் அளித்த வாட்ஸ்அப், "அனுமதி அளிக்கப்பட்டால், பயனர் அழைப்புகளை மேற்கொள்ளும் போது, வாய்ஸ் நோட் அல்லது வீடியோ பதிவிடும் போது மட்டுமே வாட்ஸ்அப் சம்பந்தப்பட்ட ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை இயக்கும். அப்போதும் கூட இந்த தகவல் பரிமாற்றங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும். இதனால் வாட்ஸ்அப் சார்பில் கூட யாராலும் அவற்றை கேட்கவே முடியாது," என்று தெரிவித்து இருக்கிறது.

    Next Story
    ×