என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- 49 மூட்டைகளில் தேங்காய் பருப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
- தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும் ஏலம் போனது.
காங்கயம் :
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.86 லட்சத்துக்கு தேங்காய் பருப்புகள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 4 விவசாயிகள் 49 மூட்டைகளில் (2445 கிலோ) தேங்காய் பருப்பை (கொப்பரை) விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.86 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 9 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு 325 நிலக்கடலை மூட்டைகள் வரத்து இருந்தது. இதில், முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,300 முதல் ரூ.7,500 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,300 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
- பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது.
- தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது. காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரம்தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வாரச் சந்தையில் முதல் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், இரண்டாம் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோ ரூ.15 அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் வரும் நாள்களில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.
- 18 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
திருப்பூர் :
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பினைச் சாா்ந்த தனி நபா்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதில், விண்ணப்பிக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் 18 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
இதில் பொதுகால கடன் திட்டம், தனிநபா் கடன் திட்டம் மூலமாக அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையில் கடனுதவி வழங்கப்படும். பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
இதற்கான கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம், அனைத்து மாவட்ட மத்திய மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். இதன் பின்னா் கடன் விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து ஜாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை மற்றும் வங்கிகோரும் ஆவண நகல்களுடன் இணைக்க வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421 - 2999130 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாவட்டத்துக்கு 3 வாகன அங்காடி அமைக்க இலக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பராமரிப்பு செலவை பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.
திருப்பூர் :
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆண்டு செயல்திட்டத்தின்படி, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு 3 வாகன அங்காடி அமைக்க இலக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அங்காடி அமைக்க விண்ணப்பிக்க, சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட, விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும். சுயஉதவிக்குழு, தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையதளத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். சுயஉதவிக்குழு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இருக்க வேண்டும். தொடர்ந்து ஒருவாரத்துக்கு மேல் வாகன அங்காடியை இயக்காவிட்டால் பறிமுதல் செய்யப்படும். பராமரிப்பு செலவை பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்களை திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், அறை எண்.305, மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 23-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- 19 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- 3 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக அவினாசி, குடிமங்கலம், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் உள்ள 19 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருடம் இதே போன்ற திட்டங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும். முன் அனுபவம் குறிப்பிட்டுள்ள காலத்தில் நற்பணியாற்றியிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். வருகிற 6-ந் தேதி எழுத்துத்தேர்வும், 9-ந் தேதி நேர்முகத்தேர்வும் நடககும். தகுதி வாய்ந்தவர்கள் இணை இயக்குனர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், எண்.42, கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் 641 601 என்ற முகவரிக்கு வருகிற 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
- விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 17 பேர் பலியானார்கள்.
- மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர் :
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 17 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாராய தடுப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். சேவூர், ராயர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்தது.
திருப்–பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் மாநகர மதுவிலக்கு போலீசார் விஷசாராயம், வெளிமாநில மதுபானங்கள், கள், கஞ்சா உள்ளிட்டவை தொடர்பாக சோதனை மேற்கொண்டனர். மாநகர பகுதியில் வெளிமாநில மதுவிற்பனை தொடர்பாக ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதுதொடர்பான புகார்களை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை 94437 81474 என்ற எண்ணிலும், திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டரை 94981 75139 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பதிவு செய்தால் மட்டுமே தேர்வில் கலந்து கொள்ள முடியும்.
- காலை 9 மணி முதல் 10 மணி வரை தேர்வு பொருள் தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.
திருப்பூர் :
தமிழக முதல்-அமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு கழகம் எச்.சி.எல். தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று கணிதம், வணிக கணிதத்தில் 60 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் எச்.சி.எல். பயிற்சியுடன் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த தேர்வு எழுதுவதற்கு https://forms.office.com/r/ZbCFbsMxGeஎன்ற லிங்கை பயன்படுத்தி விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு செய்தால் மட்டுமே தேர்வில் கலந்து கொள்ள முடியும். வருகிற 19-ந் தேதி அவினாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி, 20-ந் தேதி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 21-ந் தேதி காங்கயம் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி, 22-ந் தேதி உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை எஸ்.கே.எம். மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு நடக்கும் அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த தேர்வு பொருள் தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.
மாணவர்கள் தங்கள் அருகில் உள்ள தேர்வு மையங்களில் கலந்து கொள்ளலாம். தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களின் கல்விச்சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், செல்போன் கொண்டு வர வேண்டும். தேர்வாகும் மாணவர் – களுக்கு பயிற்சி கட்டணம் வழங்கப்படும். எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் முழுநேர வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. பயிற்சியின்போது மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
சாப்ட்வேர் டெவலப்பர், அனாலசிஸ்ட், டிசைன் என்ஜினீயர், டேடா என்ஜினீயர், சப்போர்ட் அன்ட் புரோசஸ் அசோசியேட் ஆகிய பணி வழங்கப்படும். பணியில் சேர்ந்ததும் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் வரை பெற முடியும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- உதவி செயற்பொறியாளர்கள் 4 பேர், உதவி ஆணையாளர்களாக பொறுப்பை கவனித்து வந்தனர்.
- மேட்டுப்பாளையம் மற்றும் திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர்கள் உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியின் 4 மண்டலத்திலும் உதவி செயற்பொறியாளர்கள் 4 பேர், உதவி ஆணையாளர்களாக பொறுப்பை கவனித்து வந்தனர். இந்தநிலையில் மாநகராட்சிக்கு 2 உதவி ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளராக இருந்த வினோத், திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக இருந்த முருகேசன் ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாநகராட்சியின் 1-வது மற்றும் 2-வது மண்டல உதவி ஆணையாளராக முருகேசன், 3-வது மற்றும் 4-வது மண்டல உதவி ஆணையாளராக வினோத் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
- ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
- தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை தார் தளம் அமைக்கப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 47-வது வார்டு தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை மெயின் ரோட்டில் ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயசுதா பூபதி, உதவி ஆணையாளர் வாசுகுமார், வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜா, பத்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- கேள்விகள் கேட்கும்போது, வினோதமான பதில்களை அதிகாரிகள் தருகின்றனர்.
- தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியதன் நோக்கம் கேள்விக்குறியாகி வருகிறது.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டரிடம் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையாக இருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்துவதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையான தகவல்களை தருவது தான் தகவல் அறியும் உரிமை சட்டம். ஆனால் மின்வாரிய அலுவலகங்களில் தகவல் உரிமை சட்டத்தை முறையாக கையாளாமல் சட்டத்தை அடியோடு முடக்க சில அலுவலர்கள் காரணமாக உள்ளனர். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மற்றும் அவினாசி கோட்ட மின்சார வாரிய பொது தகவல் அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை.
திருப்பூர் மாவட்டத்தில் மின்வாரிய துறை சார்ந்த கேள்விகள் கேட்கும்போது, வினோதமான பதில்களை அதிகாரிகள் தருகின்றனர். பல கேள்விகளுக்கு பதிலே அளிப்பதில்லை. இதனால் தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியதன் நோக்கம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மே மாதம் 11-ந் தேதி தேசிய தொழில்நுட்ப வாரமாகக் கொண்டாடப்பட்டது.
- பிரதமரின் குழந்தைப்பருவப்படத்தை ராஜா எம்.சண்முகம் பிரதமருக்குப் பரிசளித்தார்.
திருப்பூர் :
திருப்பூரில் உள்ள நிப்ட்-டீ ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அடல் இன்குபேஷன் மையத்தில் 67 ஸ்டார்ட் -அப் நிறுவனங்கள் புதுமையான படைப்புகளை சமர்ப்பித்துள்ளனர். குறிப்பாக பருத்தியினாலான கழிவுத் துணிகளில் இருந்து உருவாக்கப்பட்ட காகிதம், பேக்கிங் பொருட்கள் துணிகளுக்கு குறைவான உப்புடன் சாயமேற்றும் தொழில்நுட்பம், வாழை நாரை பஞ்சுடன் கலந்து உருவாக்கப்பட்ட ஆடைகள், இரும்பு ஆலைகளுக்கு தேவையான மூலக்கூறுகளை வடிகட்டி வாயுவை தனியாகப் பிரிக்கும் வடிகட்டி பைகள், தானியங்கி முறையில் ஆடைகளை தரம் பிரித்துப் பேக்கிங் செய்யும் தொழில்நுட்பம், பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளைக் கொல்லும் முககவசம் ஆகியவை மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளாகச் சந்தைபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொக்ரான் அணு ஆயுத சோதனை நடைபெற்றதன் 25-வது ஆண்டு நாளான மே மாதம் 11-ந் தேதி தேசிய தொழில்நுட்ப வாரமாகக் கொண்டாடப்பட்டது. அதன்படி ஆராய்ச்சி நிறுவனங்கள் புதுமையான படைப்புகளை புதுடெல்லியில் கடந்த 11-ந் தேதி காட்சிப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து புதிய கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு இளம் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தினார்.
நிப்ட்-டீ இன்குபேஷன் மையம் சார்பில் முதன்மை ஆலோசகர் மற்றும் அடல் இயக்குனர் ராஜா எம்.சண்முகம், தலைவர் பி.மோகன் ஆகியோர் கலந்து கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகளை பிரதமருக்கு எடுத்துரைத்தனர். மேலும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பருத்தியினாலான கழிவுத் துணிகளை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட காகிதத்தில் இயற்கை சாயம் கொண்டு அச்சிடப்பட்ட பிரதமரின் குழந்தைப்பருவப்படத்தை ராஜா எம்.சண்முகம் பிரதமருக்குப் பரிசளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நிப்ட்-டீ ஆராய்ச்சி மற்றும் இன்குபேஷன் மையத் தலைவர் எஸ்.செந்தில் குமார், மேலாளர் கே.செந்தில் குமார், தொழில்நுட்ப பிரிவு அதிகாரி எஸ்.அருள் செல்வன், புணர்பவா ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இயக்குனர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- பனியன் நிறுவனங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி.
- நான்கு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வீரபாண்டி :
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் டி.கே.டி. மில் பஸ் ஸ்டாப்பில் நால்ரோடு சந்திப்பு உள்ளது. பனியன் நிறுவனங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் நால்ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் நிறைந்து எந்நேரமும் பரபரப்பாக காணப்படும்.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:- நால்ரோட்டில் எப்பொழுதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று காலை முதல் மதியம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எரிவாயு குழாய் பதிக்க நால்ரோட்டில் மீண்டும் குழி தோண்டி உள்ளார்கள். இரவில் பணி செய்ய வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று பகலிலே எரிவாயு குழாய் பதிக்க குழி தோண்டியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நான்கு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.மேலும் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி கொண்டது. எரிவாயு குழாய் பதிக்க பகலிலே தோண்டியதாலும் புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டு 6மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் செயல்படுவதில்லை.
ஏற்கனவே நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் இவை மேலும் கூடுதல் நெரிசலை ஏற்படுத்துகிறது. நான்கு பக்கமும் இருந்து வாகனங்கள் தாறுமாறாக வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து போலீஸ் ஆகவே மாறிவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை இரவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்