ஆன்மிக களஞ்சியம்

எமபயம் போக்கும் கால சம்ஹார மூர்த்தி

Published On 2024-05-20 11:22 GMT   |   Update On 2024-05-20 11:22 GMT
  • இச்சன்னதியில் உள்ள பாலாம்பிகை பால (சிறுமி) வடிவில், இரு கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.
  • அருகில் லட்சுமி, சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.

திருக்கடையூர் அபிராமி ஆலய மகாமண்டபத்தின் வடக்கு பகுதியில் சிற்ப வேலைபாட்டுடன் கூடிய அழகிய சபை உள்ளது.

அங்கு எமனை சம்ஹாரம் செய்த கோலத்தில் தெற்கு முகமாக கால சம்ஹார மூர்த்தி எழுந்தருளியுள்ளார்.

வலது திருக்கரங்களில் சூலமும், மழுவும் உள்ளது. இடது திருவடியால் உதையுண்ட எமன் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார்.

வீழ்ந்து கிடக்கும் எமனை சிவபூதமான குண்டோதரன் கயிறு கட்டி இழுத்து அப்புறப்படுத்தும் காட்சி காண்பதற்கு அரியது.

இறைவனார் வலது பாகத்தில் ஸ்ரீமார்க்கண்டேயர் அருள் உருவாய் காட்சி அளிக்கிறார்.

இடது பக்கத்தில் இம்மூர்த்திக்கு எதிரில் திருமகள், கலை மகளுடன் விளங்குகின்றார்.

இம்மூர்த்திக்கு எதிரில் வடக்கு முகமாக எமனார் (உற்சவ மூர்த்தி) எருமையுடன் ஆண்டவன் அருளை நாடிய வண்ணமாக ஆட்சித் திருக்கோலத்தில் காணப்படுகிறார்.

இக்கால சங்கார மூர்த்திக்கு ஆண்டில் பதினோரு முறை அபிஷேகம் நடைபெறுகிறது.

அந்த 11 அபிஷேக நாட்கள் விவரம் வருமாறு:

சித்திரை விசேஷ, பெருவிழாவில் 5,6ம் நாள் பிராயசித்த அபிஷேகம், தட்சிணாயன புண்ணிய காலம், ஆனி உத்திரம், புரட்டாசியில் கன்யா சதுர்த்தி, துலாவிஷா, ஆரூத்ரா, உத்தராயண புண்ணிய காலம், மாசி மகம், கும்பசதுர்த்தி அபிஷேகம் நடைபெறுகின்றன.

இவர் சித்திரைப் பெருவிழாவில் 6ம் திருநாளன்று தான் வீதி உலாவிற்கு எழுந்தருளுவார்.

இவரை வழிபட எம பயம் நீங்கும்.

இத்தலத்தில் கால சம்ஹார மூர்த்தி, இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்து இருக்கிறார்.

சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார்.

சாதாரணமாக கால சம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும் போது, எமனை பார்க்க முடியாது.

பூஜை செய்யும் போது பீடத்தை திறப்பார்கள்.

அப்போதுதான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை 'சம்ஹார கோலம்' என்றும், எமனுடன் இருப்பதை 'உயிர்ப்பித்த கோலம்' என்றும் சொல்கிறார்கள்.

ஆக, ஒரே சமயத்தில் 'சம்ஹார' மற்றும் 'அணுக்கிர மூர்த்தி'யை தரிசிக்கலாம்.

இச்சன்னதியில் உள்ள பாலாம்பிகை பால (சிறுமி) வடிவில், இரு கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.

அருகில் லட்சுமி, சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.

Tags:    

Similar News