ஆன்மிக களஞ்சியம்

சிற்றின்பத்தை தாண்டி நிலையான பேரின்பத்தை கண்ட கோபியர்கள்

Published On 2024-06-10 11:57 GMT   |   Update On 2024-06-10 11:57 GMT
  • கோபியர் வேத சாஸ்திர இதிகாசங்களைக் கற்றுத் தெளிந்தவர்கள் அல்லர்.
  • ஆனால் கிருஷ்ணனிடம் பூண்டுள்ள பிரேமை எனும் பக்தியால் பேரானந்த பெருநிலையை அடைந்துவிட்ட தவமணிகள்.

"அநுராக மனோரமம் முக்தசங்க மனோரமம்" என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைப் போற்றிப் பணிவர்.

அநுராக மனோரமம் என்றால் அன்பர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறவன் என்று பொருள்.

முக்தசங்க மனோரமம் என்றால் முற்றும் துறந்த பற்றற்ற பரமஞானியர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவன் என்று பொருள்.

ஸ்ரீமந் நாராயணனுக்கு ஆழ்வார்கள், ஸ்ரீராமருக்கு வானரங்கள், சிவ பெருமானுக்கு நாயன்மார்கள் என்பது போல் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு கோபிகா ஸ்திரிகளும் அடியார்களைப் போல் அபரிதமான பக்தி கொண்டிருந்தனர்.

கண்ணன் மீது நீங்காத பக்தி பூண்ட கோபியர்கள் பூவுலகில் பெரும் புண்ணியத்தைச் செய்து பிறந்தவர்கள்.

கண்ணனின் மோகக் குழலோசைக்கு அந்த மோகனப் பதுமைகள் மதி மயங்கிப் போயினர்.

கோபிகாஸ்திரிகளின் பிரேமை (மயக்கம்) என்பது ஒரு வித்தியாசமான பக்தி.

அதற்குக் காரணம் கோபியர் கண்ணனிடம் காட்டிய பிரேமை அலாதியானது. அற்புதமானது, ஆனந்த மயமானது.

பக்தர்களால் பகவானைத் தரிசிக்காமல் இருக்க முடியாது. அதே போல் கோபியர்களால் ஒரு கணம் கூட கிருஷ்ணனைப் பிரிந்து இருக்க முடியாது.

ஸ்ரீகிருஷ்ணன் மதுராபுரிக்குச் சென்றதும், அவனது பிரிவை கோபியர்களால் தாங்க முடியவில்லை. கண்ணனிடம் பூண்டுள்ள பிரேமையை அவர்களால் மறக்க முடியவில்லை.

கோபியர், கண்ணனின் திருமேனியைத் தரிசித்து மகிழ்ந்த பக்திப் பாவையர்கள். அவர்கள் நிலையான பேரின் பத்தைக் கண்டவர்கள். சிற்றின்பத்தைக் காணாதவர்கள்.

கோபியர், தாங்கள் ஸ்ரீகிருஷ்ணனிடம் கொண்டுள்ள அபரிதமான தாபத்தினால் உலகையே மறந்து விடுகிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணன் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருள் ஆனதால் கோபியர்களின் பிரேமையும் நிர்குணசொரூப மடைந்து ஜென்ம சாபல்யம் அடைகிறது.

கோபியர் வேத சாஸ்திர இதிகாசங்களைக் கற்றுத் தெளிந்தவர்கள் அல்லர்.

ஆனால் கிருஷ்ணனிடம் பூண்டுள்ள பிரேமை எனும் பக்தியால் பேரானந்த பெருநிலையை அடைந்துவிட்ட தவமணிகள்.

அல்லும் பகலும் பக்தனைப் போல் பரந்தாமனிடம் பக்தி பூண்ட கோபியர் எங்கும், எதிலும், எப்போதும் ஸ்ரீகிருஷ்ணனுடைய மோகனரூபத்தைக் கண்டு களித்துப் பெருமிதம் பூண்டவர்கள்.

அதனால்தான் இன்றும் ஹரிகதா காலசேபங்கள் பூர்த்தி பண்ணும் போது, "கோபிகா ஜீவன ஸ்மரணம்" என்று கூறப்படுகிறது.

கோபியர்களைப் போல் பக்திக்கு நிகரானவர்கள் எவருமே கிடையாது.

Tags:    

Similar News