null
ஓடும் காரின் மீது புஷ்அப் எடுத்த வாலிபர் - வீடியோ வைரலானதால் போலீசிடம் சிக்கினார்!
- வீடியோ பார்த்த காவல் துறையினர், காரின் பதிவு எண் கொண்டு புஷ்அப் எடுத்த நபரை பிடித்தனர்.
- வைரல் வீடியோவில் விதிமீறலில் ஈடுபட்ட காரை காவல் துறை பறிமுதல் செய்தது.
ஓடும் காரின் மீது மர்ம நபர் ஒருவர் புஷ்அப் எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வைரல் வீடியோவில் உள்ள நபர் எவ்வித தயக்கமும், பயமும் இன்றி சர்வசாதாரணமாக ஓடும் காரின் மீது புஷ்அப் எடுக்கிறார்.
அதே காரில் இவருடன் பயணம் செய்தவர்கள் கார் ஜன்னலின் வெளியே தங்களது தலையை நீட்டுவது போன்ற காட்சிகளும் வைரல் வீடியோவில் இடம்பெற்று இருந்தன. வைரல் வீடியோவினை டுவிட்டரில் பகிர்ந்த பயனர் ஒருவர், அதனை குருகிராம் போக்குவரத்து காவல் துறை, குருகிராம் காவல் துறை துணை ஆய்வாளர் மற்றும் குருகிராம் காவல் துறையினரை டேக் செய்தார்.
இவரது செய்கை புஷ்அப் எடுத்த நபருக்கு வினையாக அமைந்து இருக்கிறது. வைரல் வீடியோவை பார்த்த காவல் துறையினர், அதில் உள்ள காரின் பதிவு எண் கொண்டு புஷ்அப் எடுத்த நபரை பிடித்தனர். பொது இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நபருக்கு போக்குவரத்து காவல் துறையினர் ரூ. 6 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.
மேலும் பொதுமக்கள் தங்கள் உயிருக்கும், அடுத்தவர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் குருகிராம் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வைரல் வீடியோவில் விதிமீறலில் ஈடுபட்ட காரை பறிமுதல் செய்த காவல் துறையினர், காரின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.