பைக்

ஏல விற்பனைக்கு வந்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200

Published On 2022-09-01 08:29 GMT   |   Update On 2022-09-01 08:29 GMT
  • ஹாலிவுட் திரைப்படம் நோ டைம் டு டை காட்சியில் வந்த டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வந்துள்ளது.
  • இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை ஏல முறையில் நடைபெற திட்டமிடப்பட்டு இருக்கிறது.

உலகம் முழுக்க பிரபலமான திரைப்பட சீரிஸ் ஜேம்ஸ் பாண்ட் இருக்கிறது. இந்த சீரிசில் வெளியான "நோ டைம் டு டை" திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில், திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மோட்டார்சைக்கிளை ஏலத்தில் விற்பனை செய்ய பட தயாரிப்பு நிறுவனமான இயான் ப்ரோடக்‌ஷன்ஸ் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தொகை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் சீரிசில் 25 ஆவது திரைப்படமான "நோ டைம் டு டை" அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்துள்ளது. இதில் பல்வேறு ஆடம்பர கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டிரையம்ப் மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி லேண்ட் ரோவர் நிறுவனமும் வாகனங்களை வழங்குவதற்காக திரைப்பட நிறுவனத்துடன் இணைந்திருந்தது. அதன்படி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளின் ஏலம் ஆன்லைனில் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.


ஏலத்தின் மூலம் திரட்டப்படும் நிதி முழுக்க லண்டனை சேர்ந்த செவன் ஹாஸ்பைஸ் (Severn Hospice) எனும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட இருக்கிறது. நோ டைம் டு டை திரைப்படத்தில் வரும் டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மோட்டார்சைக்கிளை அசாசின் பிரைமோ பயன்படுத்தி இருந்தார். இது திரைப்படத்தின் முதன்மை காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மட்டுமின்றி ஆஸ்டன் மார்டின் DB5, ஆஸ்டன் மார்டின் V8 மற்றும் லேண்ட் ரோவர் டிபெண்டர் போன்ற மாடல்களும் ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏலத்தில் ஸ்கிராம்ப்ளர் 1200 மாடல் அதிகபட்சம் 30 ஆயிரம் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் ரூ. 27 லட்சம் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆஸ்டன் மார்டின் DB5 மாடல் அதிகபட்சம் 2 மில்லியன் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் ரூ. 18 கோடி வரை விற்பனையாகும் என தெரிகிறது. ஆஸ்டன் மார்டின் V8 மாடல் 7 லட்சம் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 கோடியே 46 லட்சம் வரை விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது. லேண்ட் ரோவர் டிபெண்டர் மாடல் 5 லட்சம் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் ரூ. 4 கோடியே 60 லட்சம் வரை விற்பனையாகலாம்.

Tags:    

Similar News