டி.வி.எஸ். மற்றும் பி.எம்டபிள்யூ. கூட்டணியில் உருவாகும் எலெக்ட்ரிக் 2 வீலர்
- டி.வி.எஸ். மற்றும் பி.எம்.டபிள்யூ. இணைந்து எலெக்ட்ரிக் வாகனம் உற்பத்தி செய்கின்றன.
- டி.வி.எஸ். நிறுவனம் எலெக்ட்ரிக் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டி.வி.எஸ். நிறுவனம் தனது எதிர்கால எலெக்ட்ரிக் வாகன திட்டம் பற்றி அறிவித்து இருக்கிறது.
தற்போது டி.வி.எஸ். நிறுவனம் ஐகியூப் பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. தற்போது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்துடன் இணைந்து 15 கிலோவாட் ஹவர் ரேன்ஜ் பிரிவில் புது மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இத்துடன் 5 முதல் 25 கிலோவாட் ஹவர் ரேன்ஜில் எலெக்ட்ரிக் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் டி.வி.எஸ். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
டி.வி.எஸ். மட்டுமின்றி அதன் துணை நிறுவனமான நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் ஒன்றை உருவாக்கி வருகிறது. இது பிரீமியம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அறிமுகமாகிறது. சமீபத்தில் டி.வி.எஸ். நிறுவனம் ஸ்விஸ் இ மொபிலிட்டி குழுமத்தை விலைக்கு வாங்கி இருந்தது. இதை கொண்டு எலெக்ட்ரிக் வாகன வளர்ச்சியில் டி.வி.எஸ். கவனம் செலுத்தும் என தெரிகிறது.
முன்னதாக டி.வி.எஸ். நிறுவனம் ஜியோ பி.பி. உடன் இணைந்து நாடு முழுக்க சார்ஜிங் மையங்களை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட முடிவு செய்தது. இரு நிறுவனங்கள் இணைந்து வழக்கமான AC சார்ஜிங் நெட்வொர்க் மட்டுமின்றி DC பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்-யையும் அமைக்க உள்ளன.