விரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் ஐயோனிக் 5
- ஹூண்டாய் நிறுவனம் அடுத்த வாரம் தனது ஐயோனிக் 5 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் ஹூண்டாய் நிறுவனம் தனது புது கார் மற்றும் கான்செப்ட் மாடல்களை காட்சிப்படுத்த இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் பெரும் அறிவிப்புகளை வெளியிட இருக்கிறது. புது கார்கள் மட்டுமின்றி கான்செப்ட் மாடல்களை காட்சிக்கு வைக்க ஹூண்டாய் முடிவு செய்து இருக்கிறது. அந்த வகையில், ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் ஐயோனிக் 5 கிராஸ்ஒவர் மாடல் வெளியாக இருக்கிறது. இத்துடன் எதிர்கால சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடலை காட்சிப்படுத்த இருக்கிறது.
புதிய கான்செப்ட் மாடல் இந்த ஆண்டு இரண்டாவது அரையாண்டு வாக்கில் விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் காட்சிப்படுத்திய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கியா EV6 மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், கியா போன்று இல்லாமல் ஹூண்டாய் கார் உள்நாட்டிலேயே அசெம்பில் செய்யப்பட இருக்கிறது.
இதன் மூலம் ஹூண்டாய் ஐயோனிக் 5 விலையை சற்று குறைவாக நிர்ணயம் செய்ய முடியும். தற்போது கியா EV6 காரின் விலை இந்திய சந்தையில் ரூ. 59 லட்சத்து 96 ஆயிரம் என துவங்குகிறது. இதன் காரணமாக ஹூண்டாய் தனது ஐயோனிக் 5 விலையை ரூ. 50 லட்சத்திற்கும் குறைந்த விலையில் வெளியிட திட்டமிட்டு வருகிறது. ஐயோனிக் 5 மாடல் ஒற்றை மோட்டார், ரியர்-வீல் டிரைவ் செட்டப் உடன் வழங்கப்பட இருக்கிறது.
இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 217 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 631 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. இத்துடன் 800 வோல்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இது காரை 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.
ஐயோனிக் 5 தவிர ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 6 EV செடான் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கலாம். இது சர்வதேச சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும். இந்த கார் ஹூண்டாய் குழுமத்தின் e-GMP ஸ்கேட்போர்டு ஆர்கிடெக்ச்சரில் உருவாகி வருகிறது. அளவீடுகளில் இந்த கார் டெஸ்லா மாடல் 3, போல்ஸ்டார் 2 மற்றும் பிஎம்டபிள்யூ i4 மாடல்களுக்கு நெருக்கமாக இருக்கும் என தெரிகிறது.
புதிய ஐயோனிக் 6 மாடல் 53 கிலவோவாட் ஹவர், 77 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் உள்ள RWD செட்டப் இந்த காரின் ஸ்டாண்டர்டு வேரியண்ட் ஆகும். இதுதவிர டூயல் மோட்டார் AWD ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதன் டூயல் மோட்டார் செட்டப் 320 ஹெச்பி பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.