விற்பனையில் புது மைல்கல் எட்டிய டாடா பன்ச்
- குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர புள்ளிகளுடன் பாதுகாப்பான கார் என்ற சாதனையையும் இது பெற்றுள்ளது.
- தற்போது, பெட்ரோல், CNG மற்றும் EV பவர்டிரெய்ன்களுடன் பன்ச் மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் வேரியன்ட் 4 லட்சம் யூனிட் விற்பனையை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டு அக்டோரில் அறிமுகப்படுத்தபட்ட பன்ச், சிட்ரோயன் C3 மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.
அறிமுகமான 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 லட்சம் யூனிட் விற்பனையை அதாவது உற்பத்தி தொடங்கிய 10 மாதங்களில் எட்டியது. இதைத் தொடர்ந்து மே 2023 மற்றும் டிசம்பர் 2023 இல் முறையே 2 லட்சம் மற்றும் 3 லட்சம் யூனிட் விற்பனையானது. குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர புள்ளிகளுடன் பாதுகாப்பான கார் என்ற சாதனையையும் இது பெற்றுள்ளது.
பன்ச் பிராண்ட் குறைந்த காலத்தில் அதிக விற்பனை மைல்கல்லை அடைய உதவிய ஒரு முக்கிய காரணமாக, ஒரு குறுகிய காலத்தில் பல்வேறு வகையான எரிபொருள் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுவது தான். தற்போது, பெட்ரோல், CNG மற்றும் EV பவர்டிரெய்ன்களுடன் பன்ச் மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது.
EV மற்றும் இரட்டை-CNG சிலிண்டர் கொண்ட வெர்ஷன்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக, இது ஒரு சிலிண்டர் சிஎன்ஜி டேங்கில் மட்டுமே கிடைத்தது.
பன்ச் மாடலின் ஒட்டுமொத்த விற்பனையில் பெட்ரோல் எஞ்சின் வேரியண்ட்கள் மட்டும் 53 சதவீதம் ஆகவும் இதைத் தொடர்ந்து 33 சதவீதம் CNG ஆப்ஷனாகவும் உள்ளது. சிட்ரோயன் eC3க்கு போட்டியை ஏற்படுத்தும் இந்த காரின் EV மாடல், 14 சதவீத விற்பனையைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் டாடா பன்ச் EV வாங்கிய வாடிக்கையாளர்களில் 21 சதவீதம் பேர் முதல்முறை கார் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.