ரூ. 3.25 கோடி பட்ஜெட்டில் புது போர்ஷே கார் இந்தியாவில் அறிமுகம்
- போர்ஷே நிறுவனத்தின் புது ஸ்போர்ட்ஸ் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- இந்த கார் பெருமளவு டிராக் சார்ந்த அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த முன்னணி ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான போர்ஷே முற்றிலும் புதிய 911 GT3 RS மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய போர்ஷே கார் விலை ரூ. 3 கோடியே 25 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை உருவாக்கப்பட்ட 911 மாடல்களில் அதிக திறன் மற்றும் டிராக் சார்ந்த அம்சங்களுடன் உருவான மாடலாக GT3 RS இருக்கிறது.
புதிய போர்ஷே 911 GT3 RS மாடலில் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் மற்றும் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ரிஷேப் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், புதிய ஸ்பிட்டர், பொனெட்டில் பெரிய வெண்ட்கள், வீல் ஆர்ச்கள், ரூப் மீது செங்குத்தான பின்கள், கதவுகளின் பின் ஏர் இன்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன.
காரின் ஸ்பாயிலர் செட்டிங்களை மாற்ற ஸ்டீரிங் வீல் மீது DRS ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய 911 GT3 RS மாடல் முந்தைய 911 GT3 RS மற்றும் 992 ஜென் 911 GT3 மாடல்களை விட முறையே இருமடங்கு மற்றும் மும்மடங்கு டவுன்ஃபோர்ஸ் வழங்குகிறது.
முற்றிலும் புதிய போர்ஷே 911 GT3 RS மாடலில் 4 லிட்டர், ஆறு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 518 ஹெச்பி பவர், 465 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் PDK ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 296 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.