ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட அப்துல் ரசாக்
- உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை.
- 9 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் மட்டுமே வென்றது.
லாகூர்:
உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. மொத்தம் 9 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் மட்டும் வென்று, 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஷாகித் அப்ரிடி, அப்துல் ரசாக், உமர் குல் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து அப்துல் ரசாக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரசாக், யூனிஸ் கான் நல்ல கேப்டனாக இருந்தார். அவர் எனக்கு உத்வேகத்தையும், உறுதியையும் வழங்கினார். இப்போது இங்கு இருக்கும் அனைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குறித்து பேசி வருகிறோம்.
பாகிஸ்தான் வீரர்களில் பெரும் கோடீஸ்வரராக இருப்பவரும் கோலி கிட்ட நெருங்கவே முடியாது.
உண்மையில் பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி அவர்களை மெருகூட்டி விளையாட வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் எல்லாம் எங்களுக்கு இல்லை.
பக்தியுள்ள குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஐஸ்வர்யா ராயை ஒருவர் திருமணம் செய்தால் அது சாத்தியமில்லை என கிண்டலாக கருத்து தெரிவித்தார்.
அப்துல் ரசாக்கின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எனது பெயர் அப்துல் ரசாக். நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் நான் கிரிக்கெட் மற்றும் பயிற்சி பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பேசும்போது நான் ஐஸ்வர்யா ராயின் பெயரை தவறாகப் பயன்படுத்தினாலும் இன்னொரு உதாரணத்தை மேற்கோள் காட்ட விரும்பினேன். அதைச் செய்திருக்கக் கூடாது. நான் அவரிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.