இலங்கை ஜாம்பவானின் சாதனையை முறியடித்த ஏஞ்சலோ மேத்யூஸ்
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் நாள் ஆட்டத்தில் மேத்யூஸ் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏஞ்சலோ மேத்யூஸ் 7000 ரன்களை எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற இலங்கையின் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை ஏஞ்சலோ மேத்யூஸ் முறியடித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் இடம் பெற்றிருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்நிலையில் இலங்கை அணியின் ஜாம்பவானான சனத் ஜெயசூர்யாவின் சாதனையை மேத்யூஸ் முறியடித்துள்ளார்.
ஜெயசூர்யா 110 டெஸ்டில் 6973 ரன்கள் எடுத்த நிலையில், மேத்யூஸ் 101 டெஸ்டில் 7000 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் 13 சதம், 38 அரைசதங்களை அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் குமார் சங்ககரா (12,400) முதலிடத்திலும், ஜெயவர்த்தனே (11,814) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.