பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
- பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஜமால், சல்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
மெல்போர்ன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது. ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. முதல் டெஸ்டில் விளையாடிய அணியே களம் இறங்கியது.
பாகிஸ்தான் அணியில் சர்ப்ராஸ் அகமது, குர்ரம் ஷசாத், பகீன் அஷ்ரப் ஆகியோருக்கு பதிலாக முகமது ரிஸ்வான், ஹாசன் அலி, மிர் ஹம்சா ஆகியோர் இடம் பெற்றனர்.
டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர்-உஸ்மான் கவாஜா களம் இறங்கினர். டேவிட் வார்னர் 2 ரன்னில் இருந்தபோது கேட்ச்சை தவறவிட்டனர். அதன்பின் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் (27.1. ஓவர்) சேர்த்தது. வார்னர் 38 ரன்னில் அவுட் ஆனார். சிறிது நேரத்தில் கவாஜாவும் (42 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின் லபுஸ்சேன்-ஸ்பீலன் சுமித் ஜோடி நிதானமாக விளையாடியது. ஆஸ்திரேலியா 42.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது லபுஸ்சேன் 14 ரன்னிலும், சுமித் 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பொறுமையுடன் விளையாடிய ஸ்மித் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் புஸ்சேன் - ஹேட் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஜமால், சல்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.