பந்தோபஸ்த் டூ பந்துவீச்சு- யார் இந்த ஷமர் ஜோசப்?
- வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ஆண்டுகளுக்குப்பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்து உள்ளது.
- இந்த வெற்றிக்கு இளம் வேகப்புயல் ஷமர் ஜோசப் காரணமாக அமைந்துள்ளார்.
கபா டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ஆண்டுகளுக்குப்பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்து உள்ளது. இந்த வெற்றிக்கு இளம் வேகப்புயல் ஷமர் ஜோசப் காரணமாக அமைந்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா நாட்டின் கபாவில் நடந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர்ஜோசப் முழு பலத்தையும் பந்து வீச்சில் காண்பித்து 12 ஓவர்களை வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முந்தையநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் வீசிய பந்தில் ஷமர் ஜோசப் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கண்ணீர் சிந்தியபடியே மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆனாலும், அடுத்த நாளில் அசாத்திய பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி பெற காரணமாக அமைந்துள்ளார் ஷமர் ஜோசப். யார் இந்த ஷமர் ஜோசப் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறதல்லவா.
கண்டிப்பாக ஏற்படும், ஷமர் ஜோசப்பின் வாழ்க்கை வரலாறு பெரும் வியப்பை தரும்.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் கரீபியனில் உள்ள பராகரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷமர் ஜோசப் (வயது 24). இவரது கிராமத்தில் மொத்தம் 350 பேர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய ஷமர் ஜோசப், தினமும் 12 மணி நேரம் பணிபுரியும் காவலாளியாக வேலை பார்த்தார்.
கிரிக்கெட்டில் தீவிர ஆர்வம் கொண்ட ஷமர் ஜோசப் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் சேர்ந்தார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்ததன் மூலம், மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர் கபா டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். ஆம், கபா டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வரலாற்று சாதனை புரிய இவரே காரணம். 27 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை டெஸ்டில் வீழ்த்தியதே இல்லை, அதிலும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து வெல்வது எளிதான காரியம் அன்று.
காரணம், அவர்களது மண்ணில் ஆஸ்திரேலியாவின் பலம் இரட்டிப்பாகும் என்பது தெரிந்த கதைதான். அப்படி இருந்தும், தனது அசாத்திய திறமையால், அறிமுகத் தொடரில் 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றியை பெற ஷமர் ஜோசப் மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.