உலகக் கோப்பை 2023: தேதி குறிச்சிக்கோங்க.. 4 லட்சம் டிக்கெட்கள் ரெடி.. பி.சி.சி.ஐ. அப்டேட்
- 2023 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்குகிறது.
- உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.
ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் போட்டிக்கான அடுத்தக்கட்ட டிக்கெட் விற்பனையில் நான்கு லட்சம் டிக்கெட்கள் விற்பனைக்கு திறக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்து இருக்கிறது. ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளுக்கான டிக்கெட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதை பி.சி.சி.ஐ. உணர்ந்து கொண்டுள்ளது.
மாநில கூட்டமைப்புகளுடன் ஆலோசனைகளை முடித்த பிறகு, சுமார் நான்கு லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் முடிந்தவரை அதிக ரசிகர்களுக்கு டிக்கெட்களை விற்பனை செய்யவும், அவர்களை முடிந்தவரை வரலாற்று சிறப்புமிக்க தொடரில் கலந்து கொள்ள செய்ய முடியும்.
ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான போட்டிகளுக்கு பொது பிரிவு டிக்கெட் விற்பனை செப்டம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. ரசிகர்கள் https://tickets.cricketworldcup.com. வலைதளத்தில் வாங்கிட முடியும். அடுத்தக்கட்ட டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பும் இதே போன்று குறுகிய காலக்கட்டத்தில் அறிவிக்கப்படும்.
2023 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்குகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி நடைபெற இருக்கிறது.