கிரிக்கெட் (Cricket)

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேமரூன் கிரீன் பந்து வீச தடை விதித்தது ஆஸ்திரேலிய நிர்வாகம்

Published On 2023-01-03 08:46 GMT   |   Update On 2023-01-03 08:46 GMT
  • மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏப்ரல் 13-ம் தேதி வரை கேமரூன் கிரீனை பந்து வீச தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய நிர்வாகம்.
  • எதிர்வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் வரை நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் இன்னும் சில மாதங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்று முடிந்த வேளையில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி தங்களது அணியை பலப்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் இம்முறை சில குறிப்பிட்ட வீரர்களை வாங்கி அந்த அணியை மேலும் பலப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை 17.50 கோடிக்கு விலைக்கு வாங்கி அவரை தங்களது அணிக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை கேமரூன் கிரீன் பந்து வீசமாட்டார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம், தங்களது அறிக்கையில் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் ஆஸ்திரேலிய வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அந்த அணியின் நிர்வாகம் சில முடிவுகளை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏப்ரல் 13-ம் தேதி வரை கேமரூன் கிரீனை பந்து வீசக்கூடாது என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் கட்டளை இட்டுள்ளது.

எதிர்வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் வரை நடைபெற இருக்கிறது. அதன்படி மார்ச் மாதம் 13-ஆம் தேதி டெஸ்ட் தொடர் முடிவடையும்போது அந்தத் தொடரில் பங்கேற்கும் கேமரூன் கிரீன் அதிலிருந்து நான்கு வாரங்கள் வரை பந்து வீசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் வீரர்களின் பனிச்சுமையையும் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி ஏற்கனவே ஏலத்திற்கு முன்பாக அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் பங்கேற்பு விதிமுறைகளை தெளிவாக கூறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே இவற்றுக்கெல்லாம் சம்மதித்து கேமரூன் கிரீன் மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நிச்சயம் அவர் மும்பை அணிக்காக பந்து வீசமாட்டார்.

அதன் பின்னர் அவர் பந்துவீச வாய்ப்பு இருந்தாலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது உள்ள மும்பை அணி மிகவும் பலமாக இருப்பதினால் அவரை ஒரு முழுநேர பேட்ஸ்மேனாகவே பயன்படுத்திக் கொள்ளும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News