கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம்- பல சாதனைகள் படைத்த ஜோரூட்

Published On 2024-07-22 13:12 GMT   |   Update On 2024-07-22 13:12 GMT
  • ரூட் 32-வது சதத்தைப் பதிவுசெய்தார்.
  • இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 136 ரன்களை ரூட் சேர்த்துள்ளார்.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஒல்லி போப், பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்சில் 416 ரன்களைக் குவித்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது கேவம் ஹாட்ஜின் சதத்தின் மூலமும் அலிக் அதானாஸ், ஜோஷுவா டா சில்வா ஆகியோரது அரைசதத்தின் மூலமாக முதல் இன்னிங்சில் 457 ரன்களைக் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 41 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 425 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 385 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி, இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் தனது 32-வது சதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன், ஸ்டிவ் ஸ்மித் ஆகியோரது சத சாதனையை சமன்செய்ததுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய 11-வது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 136 ரன்களை ரூட் சேர்த்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹிலா ஜெயவர்த்னே, வெஸ்ட் இண்டீஸின் சந்தர்பால் ஆகியோரது வாழ்நாள் சாதனையை முறியடித்து 8-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதன்படி இதுவரை 142 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 32 சதங்கள் மற்றும் 62 அரைசதங்கள் என 11,940 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

Tags:    

Similar News