கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஒரே நாளில் 416 ரன்கள் குவித்த இங்கிலாந்து ஆல் அவுட்

Published On 2024-07-19 02:11 GMT   |   Update On 2024-07-19 02:11 GMT
  • இங்கிலாந்து தரப்பில் போப் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
  • அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும் ஜெய்டன் சீல்ஸ், கவேம் ஹாட்ஜ், கெவின் சின்க்ளேர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

நாட்டிங்காம்:

வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கெட் - ஜாக் கிராலி ஆகியோர் களமிறங்கினர். இதில் கிராலி 3-வது பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த பென் டக்கெட் -ஆலி போப் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். அதிலும் குறிப்பாக பென் டக்கெட் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல் அதிரடி காட்டினார். இவரின் அதிரடியால் இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் 50 ரன்கள் அடித்து அசத்தியது.

தொடர்ந்து ஆடிய அவர் 32 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரூட் 14 ரன்களிலும் ஹரி ப்ரூக் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஒல்லி போப் - பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.

பொறுப்புடன் ஆடிய ஒல்லி போப் சதமும் பென் ஸ்டோக்ஸ் அரை சதமும் கடந்தனர். 127 ரன்கள் எடுத்த போது போப் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 69 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்மித் 36 ரன்னும் கிறிஸ் வோக்ஸ் 37 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 88.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும் ஜெய்டன் சீல்ஸ், கவேம் ஹாட்ஜ், கெவின் சின்க்ளேர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News