பிட்னஸ்க்காக தனி சமையல் கலைஞரை நியமித்திருக்கும் மார்கஸ் ஸ்டோய்னிஸ்
- ஆஸ்திரேலிய அணி தங்களுக்கு என தனி செஃப்-ஐ பயன்படுத்தி வருகிறது
- இந்திய வீரர்கள் சிலர் இதுபோன்று நியமித்துள்ளதால், தானும் வைத்துள்ளதாக ஸ்டோய்னிஸ் கூறுகிறார்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. சுமார் ஒன்றரை மாத காலம் நடைபெறும் நீண்ட தொடர் என்பதால், வீரர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புவார்கள். அப்போதுதான் தொடர் முழுவதும் திறம்பட விளையாட முடியும்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உணவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும்போது, இந்தியாவின் வெப்பத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவதிப்படுவார்கள். அதேபோல் உணவும் அவர்களுக்கு ஏற்றபடி இருக்காது.
இதனால் பெரும்பாலும் தங்களுக்கென தனி செஃப்-ஐ வைத்துக் கொள்வார்கள். தற்போது, இந்தியா வந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தங்களுக்கென தனியாக செஃப்-ஐ ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில், தனது உடதற்குதியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்பிய அந்த அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தனக்கென தனி செஃப்-ஐ நியமித்துள்ளார். இவர் போட்டிகளுக்காக இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார். அவருடன் அவரது செஃப்-வும் இந்தியாவை சுற்றி வருகிறார். இந்த செஃப் பிரெஞ்ச் உணவு தயாரிப்பதில் கைத்தேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
"இந்திய வீரர்களின் சிலர் இதுபோன்று தனியாக செஃப் வைத்துள்ளனர். அதனால் எனக்கும் அதுபோன்று யோசனை தோன்றியது" என ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார். மேலும், "நான் எப்போதும் எனது உணவு மற்றும் போட்டியாக்காக தன்னை தயார்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
சல்தான்ஹா என்ற அந்த செஃப், அமெரிக்காவின் சிகாகோ மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் உள்ள பிரபலமான ரெஸ்டாரன்டில் பணிபுரிந்தவர். லக்னோ அணியின் கே.எல். ராகுல் பரிந்துரை செய்ததன் பேரில், ஐ.பி.எல். போட்டியின்போது மார்கஸ் ஸ்டோய்னிஸ், இவரை சந்தித்துள்ளார். தற்போது உலகக் கோப்பையின்போது செஃப்-ஆக பயன்படுத்திக் கொண்டார்.
ஸ்டோய்னிஸ் இந்த உலகக் கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாடி 5, 20 (நாட்அவுட்), 21 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.