ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அனுமதி
- லலித் மோடி 24 மணி நேரமும் பிராண வாயு சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்.
- இந்திய புலனாய்வு முகமைகளால் தேடப்படும் பட்டியலில் லலித் மோடி வைக்கப்பட்டு உள்ளார்.
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு வாரங்களில் இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது என்றும் நிமோனியா பாதிப்பும் காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மெக்சிகோ நாட்டில் சிகிச்சைக்குப் பின்னர் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு விமானத்தில் திரும்பினார்.
லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லலித் மோடிக்கு லேசான மூச்சுத்திணறல் இருப்பதால் 24 மணி நேரமும் பிராண வாயு சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். இத்தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்திய லலித் மோடி, மீது ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு உள்ளது. இதனால், இந்திய புலனாய்வு விசாரணை முகமைகளால் தேடப்படும் பட்டியலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார். நிதி முறைகேடுகள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன. தற்போது அவர் லண்டனில் வசிக்கிறார்.