சுயநலம் பிடித்தவர் பாபர் ஆசம்: கவுதம் கம்பீர் விமர்சனம்
- பாபர் மிடில் ஆர்டரில் இறக்க வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் வற்புறுத்தல்.
- நீங்கள் கேப்டனாக இருந்தால், உங்கள் அணியை பற்றிதான் சிந்திக்க வேண்டும்.
உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு, பேட்டிங் வலுவாக உள்ள நிலையில், பேட்டிங் வரிசை கவலை அளிக்கும் விதமாகவே இருக்கிறது
அதன் தொடக்க வீரராக களம் இறங்கும் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பல் பெரிதாக தெரியவில்லை.
ஆனால், தற்போதைய டி20 உலகக் கோப்பையில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக பாபர் ஆசம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணி தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கில் நீடிக்கிறது.
கடந்த போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரிஸ்வான் உடன் பகர் ஜமான் தொடக்க வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் பாபர் ஆசம்தான் தொடக்க வீரராக களம் இறங்கினார். பின்னர் களம் இறங்கிய பகர் ஜமான் 16 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார்.
பாகிஸ்தான் 13.5 ஓவரில் 92 ரன் இலக்கை எட்டிப்பிடித்தது. பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் பாபர் ஐந்து பந்தில் நான்கு ரன்களே எடுத்து ஏமாற்றம் அளித்தார். வரும் வியாழன் அன்று நடைபெறும் தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த போட்டியில் பாபர் ஆசம் 3-வது வீரராக களம் இறங்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அடுத்த போட்டிகளில் பாபர் ஆசம் மிடில்-ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டும் என வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் போன்றவர்களும் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தொடக்க வீரர் இடத்தை விட்டுக் கொடுக்காத பாபர் ஆசம் சுயநலம் பிடித்தவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில், உங்களுக்குப் பதிலாக உங்கள் அணியைப் பற்றி சிந்தியுங்கள்; உங்கள் திட்டப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், நீங்கள் பகர் ஜமானை தொடக்க வீரராக களம் இறக்கி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அது சுயநலம் என்று அழைக்கப்படுகிறது; ஒரு கேப்டனாக, சுயநலமாக இருப்பது எளிது. பாபர்,ரிஸ்வானும் பாகிஸ்தானுக்கு பல சாதனைகளை படைப்பது எளிது. நீங்கள் ஒரு தலைவராக இருக்க விரும்பினால், உங்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.