2027 உலகக் கோப்பையில் விராட், ரோகித்? கம்பீர் கொடுத்த அப்டேட்
- அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது.
- நல்ல பார்மில் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் கூட அவர்கள் விளையாடுவார்கள்.
மும்பை:
நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் (இந்தியா தகுதி பெற்றால்) விராட் மற்றும் ரோகித் கண்டிப்பாக விளையாடுவார்கள் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.
இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா உடல்தகுதியுடன் இருந்தால் விளையாடுவார்கள் என இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கவுதம் கம்பீர் கூறியதாவது:-
ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் காண்பித்துள்ளார்கள். அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி விரைவில் வருகிறது. ஆஸ்திரேலியாவில் பெரிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்கு அவர்கள் உத்வேகத்துடன் இருப்பார்கள்.
ஒருவேளை பிட்னஸை தொடர்ந்து கடைபிடிக்கும் பட்சத்தில் 2027 உலகக் கோப்பையிலும் அவர்களால் விளையாட முடியும். அது அவர்களுடைய சொந்த முடிவு. எவ்வளவு காலம் அவர்களால் விளையாட முடியும் என்பதை என்னால் சொல்ல முடியாது. இருப்பினும் விராட் மற்றும் ரோகித் ஆகியோர் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அவர்களிடம் இன்னும் ஆட்டம் இருக்கிறது.
ரோகித் மற்றும் விராட் ஆகியோர் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள். இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்காக மற்ற முக்கியமான போட்டிகளில் விளையாடுவார்கள். நல்ல பார்மில் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் கூட அவர்கள் விளையாடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.