ஹனுமா விஹாரி விவகாரம்.. குற்றச்சாட்டை மறுத்த வீரர் - உண்மையை உடைத்த வைரல் கடிதம்
- ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன் என்று ஹனுமா விஹாரி தெரிவித்தார்.
- சமூக வலைதளத்தில் தன் தரப்பு விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.
ரஞ்சி கோப்பையின் காலிறுதி போட்டியில் ஆந்திர பிரதேசம் அணி மத்திய பிரதேசம் அணியுடன் மோதி தோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் இனி எப்போதும் ஆந்திர பிரதேசம் அணிக்காக விளையாட மாட்டேன் என்று அந்த அணியை சேர்ந்த ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
அரசியல் காரணங்களுக்காகவே தான் அணியில் இருந்து விலகியதாக ஹனுமா விஹாரி தெரிவித்து இருந்தார். ஹனுமா விஹாரி குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த, ஆந்திரா அணியின் விக்கெட் கீப்பர், பேட்டர் கே.ன். ப்ருத்விராஜ், தனது சமூக வலைதளத்தில் தன் தரப்பு விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.
அதில், "நீங்கள் கமென்ட்களில் தேடிக்கொண்டிருக்கும் நபர் நான் தான். ஆனால் நீங்கள் கேள்வியுற்ற தகவல் முற்றிலும் பொய்யான ஒன்று. போட்டி மற்றும் ஒருவரின் சுய மரியாதையை விட பெரியது எதுவும் கிடையாது. தனிநபர் தாக்குதல் மற்றும் ஆபாச மொழியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அணியில் உள்ள அனைவருக்கும், அன்று என்ன நடந்தது என நன்றாகவே தெரியும். இந்த அனுதாப விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் விளையாடி கொள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஹனுமா விஹாரி வெளியிட்டுள்ள பதிவில், "ஒட்டுமொத்த அணிக்கும் தெரியும்" என்ற தலைப்பில் கடிதம் ஒன்றின் புகைப்படத்தை இணைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், "ரஞ்சி கோப்பையில் அணியை சேர்ந்த வீரர் நான் தவறான மொழியை பயன்படுத்தியதாகவும், அவரை மோசமாக நடத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால், நான் பயன்படுத்திய வார்த்தைகள் நம் அணிக்குள் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தை தான். அணியின் டிரெசிங் அறையில் இந்த வார்த்தைகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது."
"ஆனாலும், ஒருவர் இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டுள்ளார். நாம் அனைவரும் ஒரே அணியை சேர்ந்தவர்கள், சமயங்களில் அணியில் உள்ள உதவியாளர் குழுவும் இது போன்ற சூழலை எதிர்கொண்ட சம்பவங்கள் உள்ளன. அந்த வகையில், விஹாரியே எங்களது அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு அவரிடம் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. அவர் எப்போதும் எங்களிடம் இருக்கும் திறமையை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளார்."
"அவரது தலைமையில் நாங்கள் ஏழு முறைக்கும் அதிகாக தகுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். இந்த ரஞ்சி தொடர், வீரர்களாக எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆந்திரா ரஞ்சி வீரர்களாக எங்களுக்கு விஹாரி அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் அதில் அணி வீரர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.