பும்ராவை போல பந்து வீசி கொண்டாட்டம்- வைரலாகும் ஹர்த்திக் பாண்ட்யாவின் வீடியோ
- ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார்.
- ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ஹர்த்திக் பாண்ட்யா பயிற்சியில் ஈடுபடும் போது பும்ரா போல பந்து வீசி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் "எப்படி இருக்கிறது பூம்?" சிரிக்கும் ஈமோஜியுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் பும்ராவை போல் பந்து வீசுவது போலவும் அதை கொண்டாடுவதும் போலவும் இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அவரது செயல் மற்றும் கொண்டாட்டம் இரண்டையும் பும்ரா பாராட்டினார். மேலும் க்ருணால் பாண்ட்யா மற்றும் பொல்லார்ட் இருவரும் வீடியோவிற்கு கமெண்ட் செய்தனர்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுகிறது.