கிஷான் கிஷன் சரிபட்டு வரமாட்டாரு: டி20-க்கு ஜெய்ஸ்வால்தான் சரி- வாசிம் ஜாபர்
- ஜெய்ஸ்வால் டி20 கிரிக்கெட்டில் பயமின்றி அதிரடியாக விளையாடக் கூடியவர்.
- டெஸ்ட் தொடரில் நல்ல ரன்களை அடித்த அவர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் 2 டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. 3-வது டி20 போட்டியில் இந்தியா வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இன்று களமிறங்குகிறது.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வரும் இஷான் கிசானுக்கு பதிலாக இன்றைய போட்டியில் யசஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷன் தடுமாறுகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்பதால் அவருக்கு சற்று இடைவெளி கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் தமக்கு கிடைக்கும் அடுத்த வாய்ப்பில் வலுவான கம்பேக் கொடுக்கலாம். எனவே அவருடைய இடத்தில் நான் எந்தவித சந்தேகமுமின்றி யசஸ்வி ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுப்பேன்.
ஏனெனில் அவர் டி20 கிரிக்கெட்டில் பயமின்றி அதிரடியாக விளையாடக் கூடியவர். குறிப்பாக வேகம் மற்றும் சுழல் ஆகிய 2 வகையான பவுலிங்க்கு எதிராகவும் அசத்தும் திறமை அவரிடம் இருக்கிறது.
அத்துடன் தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கும் அவருக்கு வாய்ப்பு கொடுத்து அதில் என்ன செய்கிறார் என்பதை ஏன் பார்க்க கூடாது? சொல்லப்போனால் டெஸ்ட் தொடரில் நல்ல ரன்களை அடித்த அவர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். மேலும் திலக் வர்மா போன்ற புதியவருக்கு வாய்ப்பு கொடுத்து புதிய காற்றை சுவாசிக்கும் முயற்சிக்கும் நீங்கள் ஏன் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது.
இவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.