கிரிக்கெட் (Cricket)

போட்டிக்கான இடங்களை மாற்ற முடியாது: பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ- ஐசிசி

Published On 2023-06-22 04:43 GMT   |   Update On 2023-06-22 04:43 GMT
  • சென்னை, பெங்களூரில் நடைபெறும் போட்டிக்கான இடங்களை மாற்றுமாறு ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்தது.
  • சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறி மாற்றுமாறு பாகிஸ்தான் வலியுறுத்தியது.

துபாய்:

13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர்- நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. 10 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே உலக கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை வெளியாகி இருந்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) அனுப்பி வைத்து இருந்தது.

பாகிஸ்தான் அணி மோதும் போட்டிகளும் வெளியாகி இருந்தது. இதில் சென்னை, பெங்களூரில் நடைபெறும் போட்டிக்கான இடங்களை மாற்றுமாறு ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்தது.

அந்த அணி ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 20-ந் தேதி பெங்களூரிலும், ஆப்கானிஸ்தானுடன் அக்டோபர் 23-ந் தேதி சென்னையிலும் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது. பெங்களூர் மைதானத்தில் அதிக அளவில் ரன்களை குவிக்க முடியும் என்பதாலும், சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறி மாற்றுமாறு வலியுறுத்தியது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை ஐ.சி.சி.யும், பி.சி.சி.யும் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகளும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் ஒன்றாக விவாதித்து இந்த முடிவை எடுத்தனர்.

2 இடங்களை மாற்ற இயலாது என்ற பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக கோப்பை போட்டி அக்டோபர் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் 19-ந் தேதி வரை நடைபெறலாம். தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந் தேதி சென்னையில் சந்திக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News