U19 உலகக் கோப்பை நடத்தும் வாய்ப்பை இழந்த இலங்கை
- இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார்.
- அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.
கொழும்பு:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதனால் அடுத்தாண்டு இலங்கையில் நடைபெற இருந்த ஆடவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. அந்த வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் உள்ள அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஏ பிரிவில் இந்தியா, வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து. சி பிரிவில் ஆஸ்திரேலியா இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா. டி பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளது.