சுப்மன் கில் அரை சதம்: 3வது நாள் உணவு இடைவேளையில் இந்தியா 130/4
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட்டானது.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
விசாகப்பட்டினம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 209 ரன்னில் அவுட் ஆனார்.
இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷிர் மற்றும் ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டு வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜாக் கிராலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்சும் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து, 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரோகித் சர்மா 13 ரன்னும், ஜெய்ஸ்வால் 17 ரன்னும் எடுத்தனர். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி 81 ரன் சேர்த்த நிலையில் அய்யர் 29 ரன்னில் வெளியேறினார்.
ரஜத் படிதார் 9 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் அரை சதம் கடந்தார்.
மூன்றாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து, 273 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
சுப்மன் கில் 60 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.